புதன், 7 மே, 2014

தாமோதரர்கள்


கள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே   – குறுந். 92

ஞாயிறு, 4 மே, 2014

தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு


தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம்.  தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.