முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
நடத்தினார். அரசுப் பள்ளிகளிலும் பணியாற்றிய இவர், பின்னர் பாவாணர் அச்சகத்தைத் தொடங்கினார். 1977 இல் தமிழீழப் போராட்டத்தையொட்டி, தமிழகத்தில் தமிழக ஈழ நட்புறவுக் கழகத்தைத் தொடங்கினார். தமிழீழப் போராளிகளின் அனைத்து குழுக்களுக்கும் தமிழகத்தில் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தார். குறிப்பாக, தோழர் பத்மநாபா அவர்களின் உற்ற தோழராக இருந்தார். பொதுவுடமைச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர், தமிழகத்தின் மார்க்சிய இயக்கங்கள் அனைத்துடனும் தொடர்புகொண்டிருந்தார். சென்னையில் தமிழ்மொழி, தமிழ்த்தேசியம், பொதுவுடமை இயக்கம், தமிழீழம் தொடர்பான எந்த ஒரு கூட்டமாகவும் பேரணியாகவும் இருந்தாலும், அவற்றில் முதல் செயல்வீரராக முன்னின்றவர் தோழர் அரணமுறுவல். சென்னையில் பேராசிரியர் பொற்கோ, நான், அரணமுறுவல் மூவரும் இணைந்து தமிழ் பயிற்றுமொழிக் கருத்தரங்கம், அனைத்துமொழிகளையும் அரசு அலுவலகமொழிகளாக ஆக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் மாநாடு, கணினித்தமிழ் கருத்தரங்கம் போன்றவற்றை நடத்தியுள்ளோம். சில காலம் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றினார். தமிழியக்கத்தின் துணைப் பொதுச்செயலாளராகப் பணியாற்றி, 'தமிழியக்கம்' என்ற இதழையும் தொடங்கினார். பாவாணரின் 'முதன்மொழி' என்ற இதழை மீண்டும் தொடர்ந்தார். ஆங்கில எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணி வீரராகச் செயல்பட்டார். உலகத் தமிழ்க் கழகத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். மறைந்த பேராசிரியர்கள் க. கைலாசபதி, பேரா. சிவத்தம்பி ஆகியோருக்கும் மார்க்சியப் புரட்சிகர எழுத்தாளர் திரு. கணேசலிங்கன் அவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வுநிறுவனத்தில் பணியாற்றிபோது, தமிழ்ப் பேரறிஞர் தி.வே. கோபாலய்யர் அவர்களுடன் இணைந்து, தொல்காப்பியம் பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோரின் உரைகளைப் பதிப்பித்தார்.அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு பேரா. க. கைலாசபதி அவர்களின் ஆய்வுமுறைகள்பற்றிய ஆய்வாகும். அவரது தோளில் எப்போதும் ஒரு பை தொங்கும். அதில் தமிழ் இயக்கம், பொதுவுடமை இயக்கம், தமிழீழ இயக்கம்ஆகியவைபற்றிய துண்டுப் பிரசுரங்களும் நூல்களும் அடங்கியிருக்கும். அவரில்லாமல் சென்னையில் எந்த ஒரு கூட்டத்தையும் கருத்தரங்கையும் கூட்டத்தையும் நான் நடத்தியது கிடையாது என்ற அளவிற்கு எனக்கு உதவியவர். சில மாதங்களுக்கு முன்னர் நான் நெல்லை சென்றிருந்தபோது, பாளையில் கணினித்தமிழ்பற்றிய ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்து, என்னை உரையாற்றும்படிக் கூறினார். அவர் மறைவை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவரது துணைவியார் பெயர் திருமதி கண்ணம்மை. ஒரு மகள் (திருமதி இறைமொழி) , ஒரு மகன் ( திரு.அறிவுக்கனல்). எனக்கு மட்டுமல்ல.. பலருக்கும் அவரது மறைவு, ஒரு கையை இழந்ததுபோல், ஒரு பேரிழப்பாக இருக்கிறது.
தென்மொழிக்கு உறுதுணையாக நின்ற அன்பர்களில் அரணமுறுவல் ஐயாவும் ஒருவரே அன்றி ஆணிவேர் தமிழ்த்தேசியத்தந்தை மட்டுமே... பாவாணர்-இறைக்குருவனார் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் தென்மொழிக்கு துணை நின்றனர்.
பதிலளிநீக்குதமிழின செயற்பாட்டாளர் அய்யா அரணமுறுவல் பணி கண்டிப்பாக தொடரும்...
பதிலளிநீக்கு