திரு. செல்வமுரளி (1985) ... கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளம் கணினிப்பொறியாளர் ... எப்போதும் (இளமைத்) துடிப்புடன் புதிய புதிய சாதனைகளைக் கணினித்தமிழில் அளிக்கவேண்டுமென்று செயல்பட்டுக்கொண்டிருப்பவர். கணினி வன்பொருள், மென்பொருள் இரண்டிலுமே சாதனைகள் படைத்துக்கொண்டிருப்பவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தினகரன், தினமலர் பத்திரிகைகளிலும் சன் நெட்வொர்க்க்கிலும் வடிவமைப்பு, இணையதளம் உருவாக்கம், கணினிப்பராமரிப்பு ஆகிய பணிகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் சொந்தமாகவே விஷுவல் மீடியா, விஷுவல் மீடியா டெக்னாலஜி என்ற நிறுவனங்களை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார். பஸ்லைன்ஸ் என்ற இணையதளத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். 'தமிழ் வணிகம்', 'உலகத்தமிழ் ஒலி', 'விவசாயம்'. 'தேனிக்கூட்டம்' என்று பல இணையதளங்களை நடத்திவருகிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யும் பணியிலும் சில காலம் ஈடுபட்டிருந்தார்.
குறைந்த விலையில் தமிழ் மக்களுக்கு டேப்லட் போன்ற சிறுகணினிகளை உற்பத்திசெய்து அளிக்கும் தொழிலில் மிகுந்த பணச்செலவில் ஈடுபட்டார். 2012- இல் சிபேடு என்ற கையடக்கக்கணினியை உருவாக்கினார். சிடிரைவ் என்று பென்டிரைவ் ஒன்றையும் இவர் உருவாக்கினார். அதனுடைய சிறப்பு, 200 வகை மென்பொருள்களைக் கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தும் வசதி உண்டு. இணையதளங்களை உருவாக்கி, பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். தற்போது குறிப்பாக அலைபேசிகளில் பயன்படும் பலவகை குறுஞ்செயலிகளை உருவாக்கிவருகிறார். இதில் இவரது குறிப்பிடத்தக்க, மிகவும் பாராட்டத்தக்க ஒரு பணி, தமிழகத்துச் சிறுவிவசாயிகளுக்குப் பயன்படக்கூடிய பல குறுஞ்செயலிகளை உருவாக்கி அளித்துவருகிறார். இதனால் விவசாயிகள் மிகவும் பயனடைகின்றனர். மளிகை வணிகர்கள் தங்களது கையடக்கக்கணினிகளில் பயன்படுத்தக்கூடிய தமிழ் மென்பொருள்களையும் உருவாக்கி அளித்துள்ளார். ஆண்டிராய்டு குறுஞ்செயலிகளையும் உருவாக்கி அளித்துவருகிறார். 100-க்கு மேற்பட்ட இதுபோன்ற மென்பொருள்களை உருவாக்கியுள்ளார். டாவுல்சாப்ட் கீமேன் மென்பொருளைப் பயன்படுத்தித் தமிழுக்கான விசைப்பலகைகளையும் உருவாக்கியுள்ளார். தமிழ்நாட்டின் பல கல்விநிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்குக் குறுஞ்செயலிகள் உருவாக்கத்தில் பயிற்சியளித்துவருகிறார். தமிழகத்தில் கணினித்தமிழ் தொடர்பான எந்தவொரு கருத்தரங்கு, பயிலரங்கு, மாநாடு என்றால் அங்கே இவரை முதல் நபராகப் பார்க்கமுடியும். ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கணினிதொடர்பான பணிகளுக்காகச் சென்று வந்துள்ளார். உத்தமத்தின் சார்பாகக் கணினித்தமிழ் ஆர்வலர்களுக்கு ஒரேநாளில் 100 குறுஞ்செயலிகளை உருவாக்கும் பயிலரங்கம் ஒன்றை விரைவில் நடத்தவுள்ளார். உண்மையான கணினித்தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவரும் இவருக்குத் தமிழுலகம், குறிப்பாகத் தமிழ்க்கணினி உலகம் முழுமையான ஆதரவுக்கரத்தை நீட்டும் என்று உறுதியாக நம்புகிறேன். கணினித்தமிழ் உலகில் இவர் ஏற்கனவே மிகவும் நன்கறிந்த ஒருவராக இருந்தாலும், எனது முகநூல் பக்கத்தில் இவரை அறிமுகப்படுத்துவதில் நான் மிக்க மகிழ்வடைகிறேன்.
நன்றி - முனைவர் ந.தெய்வசுந்தரம்
போற்றுதலுக்கு உரிவயர்
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு