ஞாயிறு, 22 நவம்பர், 2015

தமிழறிஞர் முனைவர் சிதம்பரம்

முனைவர் (சிங்காரம்). சிதம்பரம் (1976) ... காரைக்குடி நகரைச் சேர்ந்த ஒரு இளம் ஆய்வாளர். அங்கேயுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் உருவாக்கம்... அங்ககேயே தமிழில் முதுகலை, எம்ஃபில், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 'சோழநாட்டுப் புலவர்களின் இலக்கியக்கொள்கை (சங்ககாலம்)' என்ற தலைப்பில் இவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. கோயில்கலையில் முதுகலைப் பட்டயச் சான்றிதழும் காந்தியச் சிந்தனையில் பட்டயச் சான்றிதழும் பெற்றுள்ளார்.
கல்வெட்டுகளைப் படியெடுத்தல், விலங்குகள், பறவைகளைப் பதப்படுத்துதல் ஆகியவற்றிலும் முறையான பயிற்சிகள் பெற்றுள்ளார். அப்பல்கலைக்கழகத்தின் மகளிரியல் மையத்திலும் பணியாற்றியுள்ளார். முதுமுனைவர் ஆய்வையும் அங்கே மேற்கொண்டுள்ளார். தற்போது காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்புலத்தில் இந்தியமொழிகள், கிராமியக்கலைத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 'முதல்வன்', 'உறந்தைத்தமிழ்வளம்', ' உள்வழி' என்ற மூன்று ஆய்வு நூல்களை உருவாக்கியுள்ளார். இந்நூல்களை இவர் மின்னூல்களாகவும் இணையதள வெளியீடுகளாகவும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுந்தகடுகளிலும் தனது நூல்களை ஏற்றியுள்ளார். 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இவர் அளித்துள்ளார். இணையத்தமிழ், உயர்கல்வி வளர்ச்சியில் இணையத்தின் பங்கு, மின்னூல்கள் தயாரிப்பதில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் போன்ற தலைப்புகளில் கணினித்தமிழுக்கான கட்டுரைகளையும், மகளிர், சங்க இலக்கியம் பற்றியும் கட்டுரைகளையும் உள்ளடக்கி, ஏறத்தாழ 32 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உத்தமத்தின் மாநாடுகளில் தொடர்ந்து தனது பங்கை அளித்துவருகிறார். தமிழ் நூல்களை மின்னூல்களாக ஆக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் உள்ளடக்கியதே அவரது ' உள்வழி' என்ற நூலாகும். தமிழில் குறுஞ்செயலிகளின் உருவாக்கம், உள்ளடக்கம், பயன்பாடு பற்றியெல்லாம் மதிப்பீடு செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ' முதல்வன் .in ' என்ற ஒரு மின்னிதழைத் தொடர்ந்து நடத்திவருகிறார். ஆன்மீகம், சுற்றுலா, தலீத்தியம் , இலக்கிய ஆய்வு, இணையம் என்று பல துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற்ற உலகத்தமிழ் இலக்கியமாநாட்டில் பங்கேற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற உத்தமம் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை அளித்தார். சென்னையில் இயங்கும் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர்களுக்கான (2010-11 ஆண்டுகளுக்கான) குடியரசுத்தலைவர் விருது இவருக்கு அளிக்கப்பட்டது, இவருடைய ஆய்வுகளுக்கான ஒரு அங்கீகாரமாகும்.. தமிழாய்விற்கும் இணையத்திற்கும் பாலமாகச் செயல்படுகிறார் முனைவர் சி. சிதம்பரம் அவர்கள். இன்றைய கணினியுகத்தில் ஒரு தமிழாய்வாளர் எவ்வாறு தமிழாய்வையும் கணினியையும் இணைத்துச் செயல்படவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருது பெற்ற இவர், மேலும் பல சிறப்புகளைப் பெறுவார் ... பெறவேண்டும் என்று வாழ்த்துவோம்.

நன்றி - முனைவர் ந.தெய்வசுந்தரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன