அறிமுகம்
இந்தக் கட்டுரைக்காகப் பரிபாடலைப் படிக்கும் வாய்ப்பு நேரிட்டது. அப்போதுதான் பரிபாடலில் கிடைக்காதுபோன பாடல்கள் எத்தகைய பேரிழப்பு என்பதை உணர முடிந்தது. அத்தகைய தரவுகள் இத்தொகையில் நிறைந்துள்ளன. கிடைக்கும் 22 பாடல்களிலேயே இவ்வளவு தமிழ்த் தரவுகள் கிடைப்பின், கிடைக்காது போன எஞ்சிய பாடல்களால் எத்தகைய தமிழ்த்தரவுகள் கிடைத்திருக்கும் என்று எண்ணி வியப்பும், கிடைக்காது போனதை எண்ணி அயர்வும் உள்ளம் எய்துகிறது.
எழுபது பரிபாடல்
பரிபாடலில் 70 பாடல்கள் இருந்ததாகப் பழைய உரைகளின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது1. தொகைநூல்களின் பாடல்களைத் தொகைப்படுத்திக் கூறும் பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றுக்கு இருக்கின்றன2. அதேபோல் பரிபாடல்களின் எண்ணிக்கையைத் தொகைப்படுத்திக் கூறும் பழம்பாடல் பின்வருமாறு தெரிவிக்கின்றது.
திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் திருமாலுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடுகிழாளுக்கு 1, வையைக்கு 26, மதுரைக்கு 4 என்று பரிபாடல்கள் இருந்துள்ளன. ஆனால் உ.வே.சா. முதன்முதலாகப் பரிபாடலை அச்சிலேற்றியபோது 22 பாடல்கள் மட்டுமே தமிழுக்கு அகப்பட்டிருந்தன. எஞ்சிய 48 பாடல்கள் அன்றும் கிடைக்கவில்லை; இனி என்றும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. உ.வே.சா.வின் பதிப்பில் பரிபாடல் திரட்டு என்ற தலைப்பில் கூடுதலாக இரண்டு பாடல்கள் தரப்பட்டிருந்தன. ஆனால் அது கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த பரிபாடலா என்பது தெரியவில்லை. அதனால்தான் உ.வே.சா. அதனைத் தனியே தந்திருப்பார்.
தரவேற்றல்: காலப்பணி
இப்போது அச்சில் இருக்கும் தரவுகளையாவது விக்கிமூலம் போன்ற பொதுத் தளங்களில் தரவேற்றுவது என்பது தற்காலத்தின், நம் காலத்தின் அடிப்படைத் தேவையாகும். ஏனெனில் உ.வே.சா. நூல்நிலையம் வெளியிடும் அண்மைப் பதிப்புகளிலேயே உ.வே.சா.வின் முதற்பதிப்புக்களில் இருந்து பல்வேறு செய்திகள் குறைக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன. இப்பதிப்பே இவ்வாறு குறைக்கப்படுகிறது எனில் மற்ற பதிப்புகளையும், வெளியீடுகளையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதனால் இருக்கும் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற பழைய நூல்களைத் தரவேற்றி வைப்பது என்பது காலப்பணி ஆகும்.
திருமால், செவ்வேள், வையை
பரிபாடல் தொகையால் திருமால், செவ்வேள், வையை குறித்துப் பல்வேறு அரிய செய்திகளை அறிய இயலுகிறது. அவற்றைத் தொகுத்துரைத்தால் கட்டுரை, பேருரையாகும். அதனால் திருமால் குறித்த செய்திகள் சில எடுத்துக் காட்டப்பெறுகின்றன. இச்செய்திகள் இத்தகைய நூல்களைத் தரவேற்றி வைப்பது எப்போதும் எல்லோருக்கும் பயனை நல்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தினால் அது இக்கட்டுரையின் பயனாக அமையும்.
திருமாலின் அவதாரங்கள்
விஷ்ணுவின் அவதாரங்களில் கிருஷ்ணவதாரமும், இராமாவ தாரமும் இன்று வெகுவாய்ப் பேசப்படுகின்றன. பக்திப் பொழிவாக நிகழ்த்தப்படுகிறது. தொலைக்காட்சித் தொடர்களாக எடுக்கப்படு கின்றன. இணையக் குறுங்கதைகளாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் பரிபாடலின் கிடைக்கும் பாடல்களில் இவ்விரு அவதாரங்களைப் பற்றிய குறிப்பு இல்லை. மாறாக வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், மோகினி அவதாரம் ஆகியன சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் வராக அவதாரம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வராக அவதாரம்
திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது வராக அவதாரம். ஒற்றைக் கொம்புடைய பன்றியாக விஷ்ணு உருவெடுத்தது இது. கிடைத்துள்ள பரிபாடல்களில் ஐந்து இடங்களில்3 இதுகுறித்துக் கூறப்பட்டுள்ளது.
தீயும், கூற்றமும், ஞமனும், ஞாயிறும் என்று எல்லாம் ஒருங்குகூடி அழித்து, அழியும் ஊழிக்காலத்தில் இந்த நில உலகும் கடலுள் அமிழ்ந்து போகும். அவ்வாறு அமிழ்ந்து போன நில உலகை வராக உருவெடுத்து ஒற்றைக் கொம்பில் தாங்கி மேலே கொண்டு வருபவர் வராகி4 என்று பரிபாடல் தெரிவிக்கின்றது.
கடலில் மூழ்கிய நிலத்தை (நிலமகளை) வராக உருவில் தன் ஒற்றைக் கொம்பினில் தாங்கித் திருமால் வெளிக்கொணர்ந்தார் என்பது இந்த அவதாரச் சிறப்பாகும். ஏற்கனவே திருமகளை (செய்யோள்) தன் மார்பில் திருமால் வைத்துள்ளார். மேலும் நிலமகளையும் அவர் மணந்துள்ளார் (தாங்கியுள்ளார்) என்பது பொருந்துமாறில்லையே என்னும் பொருள்பட வராக உருவெடுத்த செய்தியைத் தமிழுக்கே உரிய ஊடல் உரிப்பொருளோடு இணைத்து வெளிப்படுத்தியுள்ளார் புலவர்5.
“செய்யோள் சேர்ந்தநின் மாசுஇல் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண்
வைவால் மருப்பின் களிறுமணன் அயர்பு
புள்ளிநிலனும் புரைபடல் அரிது என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று”
மேருமலையும் வராக வடிவும்
இந்திய இலக்கிய நனவிலியில் புதைந்து வெளிப்பட்டிருப்பது மேருமலையாகும். இம்மலையானது கடலுக்கு அடியில் இருந்து கடலுக்கு மேலே வெளிவந்து பெருமலையாகி நின்றிருந்துள்ளது. அதுபோல் வராக வடிவெடுத்து ஒற்றைக் கொம்பில் கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்ட நில உலகை வெளிக்கொணர்ந்தார் திருமால் என்று புலவர் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார்6.
வராக ஊழிக் காலம்
மீண்டும் மீண்டும் பரிபாடலில் வராக உருவெடுத்தல் ஏன் கூறப்பட்டுள்ளது என்னும் வினா எழுகிறது. அதற்கு விடையையும் அதுவே தந்துள்ளது. பரிபாடலைப் புனைந்த புலவர்கள் வாழ்ந்த காலத்தில் அது வராக ஊழிக் காலம் எனப் பரவலாக்கம் பெற்றுள்ளது என்பதனை
கேழில் இகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி …7
திருமாலைப் பாடிய எட்டுப் பாடல்களில் 5 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றுள் திருமாலின் நிறம் காயாம்பூவைப் போன்றது, பிரம்மனின் தந்தை திருமால், இன்று அழகர்மலை என்று வழங்கப்பெறும் மாலிருங்குன்றம், திருமால் அன்னச் சேவல் உருவெடுத்துக் கடலை வற்றச் செய்தது, எல்லாப் பொருள்களுக்குள்ளும் உள்ளுறைப் பொருளாகத் திருமால் உறைந்திருப்பது என்று பல்வேறு செய்திகள் இப்பாடல்கள் மற்றும் இந்நூலுக்குப் பரிமேலழகர் எழுதிய பழைய உரை, உ.வே.சா. பதிப்பு ஆகியவற்றில் இருந்து ஆழமாகவும் நுட்பமாகவும் நமக்குக் கிடைக்கின்றன.
இத்தகைய செய்திகள் அடங்கிய நூல்களைத் தரவேற்றம் செய்து எல்லோருக்கும் எப்போதும் பயன்கொள்ளும் வகையில் கொடுப்பது தொழில்நுட்பமறிந்தோரின் கடமையாகும்.
இணையத்தில் பரிபாடல்
முனைவர் பாண்டியராஜனின் தரவுத்தளம், திருமதி வைதேகி ஹெர்பர்ட்டின் தரவுத்தளம், தமிழ் இணையக் கல்விக் கழகத் தரவுத்தளம் ஆகியவற்றில் பரிபாடல் கிடைக்கின்றது. அதேபோல் பரிபாடல் மூலம், புற்றீசல் போல் உள்ள பல்வேறு தளங்களில் இருக்கின்றது. ஆனால் பழைய நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல்கள் அதே வடிவில் தட்டச்சோடு ஏற்றப்பட்டிருப்பது என்று எதுவும் இல்லை.
அச்சு நூல்கள்
பரிபாடலுக்கு இதுவரை வெளிவந்துள்ள அச்சுநூல்களுள் குறிக்கத்தக்கன வருமாறு:
பரிபாடல் முதன்முதலில் 1918ஆம் ஆண்டில் உ.வே.சா.வின் அரும்பெரும் முயற்சியால் அச்சிடப்பெற்றது.
அதன்பின் இரண்டாம் பதிப்பாக 1935ஆம் ஆண்டில் அவர் முயற்சியினாலே மீண்டும் வெளிவந்தது.
1940ஆம் ஆண்டில் “சங்க இலக்கியம் பாட்டும் தொகையும்” எனும் பெயரில் வையாபுரிப்பிள்ளைப் பதிப்பாளராகக் கொண்ட சமாஜப் பதிப்பு வெளிவந்தது. இதில் பரிபாடல் மூலம் அடங்கியுள்ளது.
1957ஆம் ஆண்டில் இதேபோல் மர்ரே எஸ் ராஜம் பதிப்பகத்தார் சங்க நூல்களின் மூலத்தை மட்டும் சீர்பிரித்து அச்சேற்றினர்.
இதன்பின்னர் அச்சான மூலப்பாடல்களை அப்படியே ஏற்றுக் கொண்டு உரைநூல்கள் வரத் தொடங்கின. அவற்றுள் குறிக்கத்தக்கன வருமாறு:
1957ஆம் ஆண்டில் பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனார் உரையுடன் பரிபாடலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.
1971ஆம் ஆண்டில் புலியூர்க் கேசிகனின் உரையில் பரிபாடல் வெளிவந்தது.
2001ஆம் ஆண்டில் வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை உரையில் பரிபாடல் வெளிவந்தது.
2003ஆம் ஆண்டில் கோவிலூர் மடாலயம் வெளியீடாக சாரங்கபாணி உரையுடன் பரிபாடல் வெளியானது. இவர் A Critical Study of Paripatal எனும் பரிபாடல் குறித்த நூலையும் (1984) ஆங்கிலத்தில் எழுதியவர் என்பது குறிக்கத்தக்கது.
இந்நூல்கள் அன்றி பரிபாடல் தொகைநூலைப் பல்வேறு கோணத்தில் வெளிப்படுத்தும் திறனாய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றின் குறிப்பிடத்தக்கன வருமாறு:
பரிபாடல் வசனம் ந.சி. கந்தையா, 1938. ஒற்றுமை ஆபிஸ், தி. நகர், சென்னை.
கலித்தொகை - பரிபாடல் காட்சிகள், நா. பார்த்தசாரதி, 2000, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
பரிபாடல் சொற்பொழிவுகள், ஐவர் சொற்பொழிவுகள், 1955, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.
பரிபாடலில் இயற்கை; அன்னிதாமசு; 1971,
பரிபாடலின் காலம், சோ. ந. கந்தசாமி, 1972, அபிராமி பதிப்பகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.
பரிபாடல் பதிப்பு வரலாறு (1918-2010), ம.லோகேஸ்வரன், 2010, காவ்யா பதிப்பகம்.
கலித்தொகை பரிபாடல் – ஒரு விளிம்புநிலை நோக்கு, ராஜ்கௌதமன், 2011, விடியல் பதிப்பகம்.
அடிக்குறிப்புகள்
இறையனார் களவியல் சூ. 1 உரை, தொல். செய். சூ. 149 உரை
பாலைவியம் எல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால் மேலையோர்
தேரும் இரண்டெட்டு இவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்
மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலை ஓதலாந்தை பனிமுலை பேயனே
நூலையோ தைங்குறு நூறு
இறைவாழ்த்தொன் றேழைந்து பாலைநா லேழொன்
றிறைகுறிஞ்சி யின் மருதம் ஏழைந்து - துறைமுல்லை
ஈரெட்டொன் றாநெய்தல் எண்ணாஙொன் றைங்கலியாச்
சேரெண்ணோ மூவைம்ப தே.
பரி. 2:16-19, 2:32-35, 3:21-24, 4:22-24, 13:34-37
பரி. 3:21-24
பரி. 2:32-35
பரி. 4:22-24
பரி. 2:16-17
துணைநூல்கள்
சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), 2017(எ.ப.), பரிபாடல் மூலமும் பரிமேலழகருரையும், உ.வே.சா. நூல்நிலையம் , சென்னை.
சாரங்கபாணி இரா. (உ.ஆ.), 2007 (மூ.ப.), பரிபாடல் மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
லோகேஸ்வரன் ம., 2010, பரிபாடல் பதிப்பு வரலாறு (1918-2010), காவ்யா பதிப்பகம், சென்னை.
Sarangapani R., 1984, A Critical Study of Paripadal, Madurai Kamaraj University, Madurai.
கட்டுரையாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன