வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
‘அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு’ - என்னும் சுட்டு, வினாச் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
‘அத்தனை, இத்தனை, எத்தனை’ - என்னும் சுட்டு, வினாச் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?
இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?
எத்தனை + கருவிகள் = எத்தனை கருவிகள்?
வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.
அவனா + கேட்டான் = அவனா கேட்டான்?
அவளா + சொன்னாள் = அவளா சொன்னாள்?
யாரே + கண்டார் = யாரே கண்டார்?
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை
தெரிநிலைப் பெயரெச்சம்
காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் (செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்) ஒன்றினைக் கொண்டு முடியும்.
படித்த மாணவி
படிக்கின்ற மாணவி
படிக்கும் மாணவி
எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்
குறிப்புப் பெயரெச்சம்
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
நல்ல மாணவி
அழகிய மலர்
பெரிய + பெண் = பெரிய பெண்
கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
நில்லாத + செல்வம் = நில்லாத செல்வம்
அழியாத + கல்வி = அழியாத கல்வி
‘எட்டு, பத்து’ ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.
ஒன்று + கேள் = ஒன்று கேள்
ஒரு + பொருள் = ஒரு பொருள்
இரண்டு + புத்தகம் = இரண்டு புத்தகம்
இரு + பறவை = இரு பறவை
மூன்று + குறிக்கோள் = மூன்று குறிக்கோள்
நான்கு + பேர் = நான்கு பேர்
ஐந்து + கதைகள் = ஐந்து கதைகள்
ஆறு + கோவில் = ஆறு கோவில்
அறு (ஆறு) + சீர் = அறுசீர்
ஏழு + சான்றுகள் = ஏழு சான்றுகள்
ஏழு + பிறப்பு = எழு பிறப்பு
ஒன்பது + சுவைகள் = ஒன்பது சுவைகள்
‘இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்’ வல்லினம் மிகாது.
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப்பட்டு நின்று, வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது. மங்குமங்கு (மாங்கு மாங்கு) என்று வேலை செய்தால் போதுமா?
கல + கல = கலகல - இரட்டைக் கிளவிகள்
சட + சட = சடசட
பள + பள = பளபள
செய்யுளிலும் வழக்கிலும் அசைநிலைக்கும், விரைவு, வெகுளி (ஆத்திரம்), உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும் வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும் ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
தீ + தீ = தீதீ - அடுக்குத்தொடர்கள்
பார் + பார் = பார்பார் !
‘அஃறிணைப் பன்மை’ முன்வரும் வல்லினம் மிகாது.
பல + பசு = பல பசு
சில + கலை = சில கலை
அவை + தவித்தன = அவை தவித்தன
‘ஏவல் வினை’ முன் வரும் வல்லினம் மிகாது.
வா + கலையரசி = வா கலையரசி
எழு + தம்பி = எழு தம்பி
போ + செல்வி = போ செல்வி
பார் + பொண்ணே = பார் பெண்ணே !
‘செய்யிய’ என்னும் வினையெச்ச வாய்பாட்டின் பின் வரும் வல்லினம் மிகாது.
வினையெச்ச வாய்பாடுகள் பன்னிரண்டு ஆகும். அவற்றுள் செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்னும் ஐந்து வாய்பாடுகள் இறந்தகாலம் காட்டுவன. செய என்னும் வாய்பாடு நிகழ்காலம் காட்டுவது. செயின், செய்யிய, செய்யியர் வாய்பாடுகள், வான், பான், பாக்கு என்னும் ஈற்று வாய்பாடுகள் ஆகிய ஆறும் எதிர்காலம் காட்டுவனவாகும்.
காணிய + சென்றேன் = காணிய சென்றேன்
உண்ணிய + சென்றாள் = உண்ணிய சென்றாள்
“பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்” பின்வரும் வல்லினம் மிகாது.
தாய் + கண்டாள் = தாய் கண்டாள்.
கண்ணகி + சீறினாள் = சீறினாள்
வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் ‘கள், தல்’ என்னும் விகுதிகள் வரும்பொழுது வல்லினம் மிகாது.
எழுத்து + கள் = எழுத்துகள்
கருத்து + கள் = கருத்துகள்
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
போற்று + தல் = போற்றுதல்
நொறுக்கு + தல் = நொறுக்குதல்
‘இரண்டு வட சொற்கள்’ சேரும்பொழுது வல்லினம் மிகாது.
கோஷ்டி + கானம் = கோஷ்டி கானம்
சங்கீத + சபா = சங்கீத சபா
ஆதிபகவன்
தேச பக்தி
பந்த பாசம்
சுட்டுப்பெயர்கள் பின் வல்லினம் மிகாது.
அது + பறந்தது = அது பறந்தது.
இது + கடித்தது = இது கடித்தது.
அது காண்
இது செய்
அவை சிறந்தவை
இவை கடினமானவை
வினாப்பெயர்கள் பின் வல்லினம் மிகாது.
எது கண்டாய்?
யாது செய்தாய்?
எவை தவறு?
யாவை போயின?
எது + பறந்தது = எது பறந்தது?
யாது + தந்தார் = யாது தந்தார்?
முதல் வேற்றுமைபின் வல்லினம் மிகாது.
மலர் பூத்தது.
குதிரை கனைத்தது.
கிளி கொஞ்சியது..
மூன்றாம் வேற்றுமை (ஒடு, ஓடு’) விரி பின் வல்லினம் மிகாது.
என்னொடு கற்றவர்
தாயோடு சென்றான்
கோவலனோடு + கண்ணகி வந்தாள் = கோவலனோடு கண்ணகி வந்தாள்.
துணிவோடு + செல்க = துணிவோடு செல்க
அண்ணனோடு + தங்கை வந்தாள் = அண்ணனோடு தங்கை வந்தாள்.
ஆறாம் வேற்றுமை விரி பின் வல்லினம் மிகாது.
எனது கை
எனது பல்
விளி வேற்றுமைபின் அல்லது ‘விளித் தொடரில்’ வல்லினம் மிகாது.
கண்ணா + பாடு = கண்ணா பாடு.
அண்ணா + கேள் = அண்ணா கேள் !
கனவே கலையாதே
மகனே பார்
பெயரெச்சம் பின் வல்லினம் மிகாது.
ஓடிய குதிரை
படித்த பெண்
வென்ற தமிழன்
இரண்டாம் வேற்றுமைத்தொகை பின் வல்லினம் மிகாது.
நாடு கடத்தினான்
மோர் குடித்தான்
புளி கரைத்தாள்
படி என முடியும் வினையெச்சம் பின் வல்லினம் மிகாது.
தரும்படி கேட்டான்
எழுதும்படி சொன்னாள்
அகர ஈற்று வினைமுற்று பின் வல்லினம் மிகாது.
பறந்தன பறவைகள்
நடந்தன கால்கள்
வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.
வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள். வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வது.
இச்சொல் வியங்கோள் எனப்பட்டது. வியங்கோள் வினைமுற்று மிகப் பழங்காலத்தில் இருந்தே வழக்கிலிருந்து வருகிறது.
வியங்கோள் வினை பெரும்பாலும் நான்கு பொருள்களில் பயன்படுத்தப்பெறுகிறது.
அவை வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் ஆகியவையாம்.
இச்சொல் இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்பெறுகிறது.
வெல்க, வாழ்க - வாழ்த்தல் பொருள்
வீழ்க, ஒழிக - வைதல் பொருள்
வருக, உண்க - விதித்தல் பொருள்
அருள்க, கருணைபுரிக - வேண்டல் பொருள்
கற்க + கசடற = கற்க கசடற
வெல்க + தமிழ் = வெல்க தமிழ்
வீழ்க + தண்புனல் = வீழ்க தண்புனல்
வாழ்க தலைவர்
வாழ்க தமிழகம்
வீழ்க பகைவன்
“வினைத் தொகையில்” வல்லினம் மிகாது.
விரி + சுடர் = விரிசுடர்
பாய் + புலி = பாய்புலி
குடிதண்ணீர்
குளிர்காலம்
திருநிறை செல்வி
திருநிறை செல்வன்
நான்காம் வேற்றுமைத் தொகைபின் வல்லினம் மிகாது.
வள்ளுவர் கோட்டம்
கண்ணகி கோவில்
சானகி குழந்தை
பள்ளி சென்றாள்
“உம்மைத் தொகையில்” வல்லினம் மிகாது.
காயும் கனியும் = காய் + கனி = காய்கனி
தாயும் தந்தையும் = தாய் + தந்தை = தாய்தந்தை
செடி கொடி
வெற்றிலை பாக்கு
அன்று, இன்று, என்று பின் வல்லினம் மிகாது.
அன்று கேட்டார்
இன்று சொன்னார்
என்று தருவார்?
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு பின் வல்லினம் மிகாது.
அவ்வாறு கேட்டார்
இவ்வாறு கூறினார்
எவ்வாறு பேசினார்?
அத்தகைய, இத்தகைய, எத்தகைய பின் வல்லினம் மிகாது.
அத்தகைய திறமை
இத்தகைய தன்மை
எத்தகைய செயல்?
மூன்றாம் வேற்றுமைத் தொகை வல்லினம் மிகாது.
கை தட்டினான்
‘ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று’ என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.
மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.
மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.
மலையினின்று + சரிந்தது = மலையினின்று சரிந்தது.
ஐந்தாம் வேற்றுமைத் தொகை வல்லினம் மிகாது.
வரை பாய்ந்தான்
(வரை=மலை, வரையிலிருந்து பாய்ந்தான்)
ஏழாம் வேற்றுமைத் தொகை வல்லினம் மிகாது.
வீடு தங்கினான்
உயர்திணைப் பெயருக்குப் பின் வல்லினம் மிகாது.
உயர்திணை என்பது தமிழ் இலக்கணத்தில் தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும்.
உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களைக் காணலாம்.
தோழி கூற்று
ஆசிரியர் கல்வி
மாணவர் கையேடு
ஆன, பிறகு, உரிய, தகுந்த, ஏற்ற, முன்பு, உடைய - வல்லினம் மிகாது.
குழந்தைக்கான கல்வி
பிறகு பார்ப்போம்
உரிய பங்கு
தகுந்த கூலி
ஏற்ற பணி
முன்பு கண்டேன்
யாருடைய செயல்?
எதிர்மறைப் பெயரெச்சம் - வல்லினம் மிகாது.
பார்க்காத பயிர்
செல்லாத காசு
சிறிய, பெரிய வல்லினம் மிகாது.
சிறிய கண்ணாடி
பெரிய பானை
சில குற்றியலுகரங்கள் வல்லினம் மிகாது.
கண்டு களித்தான்
வந்து போனான்
செய்து பார்த்தான்
அழுது தீர்த்தான்
நல்ல, தீய, அரிய வல்லினம் மிகாது.
நல்ல பையன்
தீய பழக்கம்
அரிய காட்சி
உறவுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
தம்பி பார்த்தான்
தங்கை கூப்பிட்டாள்
அம்மா பசிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன