தமிழும் தெலுங்கும் நெருங்கிய உறவுடையன. இம்மொழிகளில் எழுதப்பெற்ற இலக்கணப் பனுவல்களிலும் அவ்வுறவு தொடர்கின்றது. அதற்குக் காரணம் சமூகம், பண்பாடு, கலைசார்ந்த தொடர்புகளில் பண்டைக் காலந்தொட்டு ஒரு நீட்சி இருப்பதே. இருப்பினும் அதற்குள் சிற்சில வேறுபாடுகள் நிலவுகின்றன. அவ்வகையில் அவ்விரு மொழி இலக்கணப் பனுவல்களிடையே விளக்கப்பெற்றிருக்கும் இரண்டாம் வேற்றுமை குறித்தும், வரலாற்றுநிலை – சமகாலநிலை மீக்கருத்தியலில் அவ்விருமொழி இலக்கணங்களும் ஒருங்கு பயணிக்கும் முறைமை குறித்தும் இங்கு ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன.
ஆய்வின் நோக்கம்
இரண்டாம் வேற்றுமை எந்தவகைச் சொற்களுடன் இணையும்? குறிப்பாக, ஒரு மொழிக்குரிய தூய சொல்லுடனா அல்லது தற்சம, தற்பவ சொல்லுடனா என்பதைத் தமிழ், தெலுங்கு இலக்கணிகளும், அதற்கு விளக்கம் தரும் உரைஞர்களும் எவ்வாறு பதிவுசெய்துள்ளனர் என நோக்குதல் வேண்டும். அவ்வேற்றுமை தூய சொல்லுடன் இணைந்தால், பிற சொற்களுடன் இணைவதற்கு எவ்வகை உருபு பின்பற்றப்படுகிறது? இந்த வேற்றுமை உருபு எல்லாவகைச் சொற்களுடன் இணையும் என்றால் இது அனைத்து மொழிக்கான பொதுக்கோட்பாடு எனக் கருத இடம் தருமா? காலந்தோறும் இரண்டாம் வேற்றுமை உருபு சொற்களில் பயன்படும் முறை குறித்து அறிதலும் வரலாற்றுநிலை – சமகாலநிலை எனும் மீக்கருத்தியலில் அவ்விரு மொழிகளின் இரண்டாம் வேற்றுமை இலக்கணக் கருத்தியல் ஒத்துப்போகும் தன்மை குறித்து அறிதலும் இவ்வாய்வின் முதன்மை நோக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன