வெள்ளி, 15 நவம்பர், 2019

கனா கண்டேன்...

அலுவலகம் திறந்தது
என் இருக்கையில் அமர்ந்தேன்
தலையில் முள்முடிதாங்கிய ஒருவன்
வந்தவன் ஐயா என்றான்
சொல் என்றேன்
நான் மேய்ப்பர் என்றான்

இங்கு என்ன வேலை என்றேன்
என் பிறப்பை வைத்துதான்
கி.மு., கி.பி., என வரலாறு
எழுதப்பெற்றது என்றான்
அதற்கு இடமில்லை
இங்கு என்றேன்
ஏன் என்றான்
கீழடிக்குப் பின்பு
பொ.மு., பொ.பி., என மாறிவிட்டது என்றேன்
என்னது புத்தி வந்ததா
என்று கூறிவிட்டு
இடம் நகர்ந்தான்.
நல்ல அசதி
பயணச்சோர்வு
கண்மட்டும் எமனிடம்
ஒத்திகை செய்தது
சங்கு ஊதும் சத்தமும்
கேட்டுக்கொண்டே இருக்க
இன்னொருவன் வந்தான்
ஐயா என்றான்
கூறு என்றேன்
நான் உருவமற்றவன் என்றான்
அதற்கு என்ன என்றேன்
நான் சிறுபான்மையினர்
என்பதால் என்னை
மறைக்கப் பார்க்கிறார்கள் என்றான்
காலம் பதில் சொல்லும் செவ்வரிசையில் இன்னும் உள்ளாய்
போய்வா என்றேன்.
இன்னும் சோர்வு
பல்நுட்பக் கற்பித்தல் அல்லவா
திறன் பலகையைப்
பார்த்துப் பார்த்துக்
காலவன் அருகில் வர
கனாவும் வந்தது
வில்லேந்திய
பொய்யன் ஒருவன்
ஐயா என்றான்
விளம்பு என்றேன்
நான்... நான்...
கூறடா மடையா சீக்கிரம்
நான் திரேதாயுகத்தில்
தீர்வு சொல்லப் பிறந்தவன்
ஏறிட்டுப் பார்த்தேன்
குபீர் என்று சிரிப்பு வந்தது
இன்னுமா இப்படியே
சொல்லிக் கொண்டு திரிகிறீர்கள்
எத்தனைமுறை பொய்யை
மெய்யென்று சொன்னாலும்
பொய்... பொய்தானடா மடையா
போய்வா என்றேன்.
திடீர் என்று ஒரு சத்தம்
பேருந்து ஒலிப்பான்
வீரென்றது
கனா கண்டேன்...
         _ த.நேயக்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன