புதன், 18 ஆகஸ்ட், 2021

ஆதிரை பிச்சையிட்ட காதை - மணிமேகலை

  1. 'ஈங்கு இவள் செய்தி கேள்' என விஞ்சையர்
  2. பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
  3. 'ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
  4. சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
  5. அணி இழை தன்னை அகன்றனன் போகி
  6. கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
  7. வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
  8. கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
  9. பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
  10. "காணம் இலி" என கையுதிர்க்கோடலும் 
  11. வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
  12. தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
  13. நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
  14. ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
  15. நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
  16. பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
  17. நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
  18. போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
  19. "இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
  20. உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்
  21. சாதுவன் தானும் சாவுற்றான்" என
  22. ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
  23. "ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
  24. தாரீரோ?" எனச் சாற்றினள் கழறி
  25. சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
  26. முடலை விறகின் முளி எரி பொத்தி
  27. "மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
  28. புக்குழிப் புகுவேன்" என்று அவள் புகுதலும்
  29. படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
  30. உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது
  31. ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
  32. சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
  33. விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
  34. திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
  35. "தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
  36. யாது செய்கேன்?" என்று அவள் ஏங்கலும்
  37. "ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
  38. ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
  39. நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
  40. பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்
  41. சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
  42. வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
  43. நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ" என
  44. அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
  45. ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
  46. பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
  47. மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து "என்
  48. கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக!" என
  49. புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
  50. அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்
  51. விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
  52. ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
  53. ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
  54. மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
  55. துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
  56. நக்க சாரணர் நயமிலர் தோன்றி
  57. பக்கம் சேர்ந்து "பரி புலம்பினன் இவன்
  58. தானே தமியன் வந்தனன் அளியன்
  59. ஊன் உடை இவ் உடம்பு உணவு" என்று எழுப்பலும்
  60. மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்
  61. கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
  62. சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
  63. ஆங்கு அவர் உரைப்போர் "அருந்திறல்! கேளாய்
  64. ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
  65. போந்தருள் நீ" என அவருடன் போகி
  66. கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
  67. வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
  68. எண்கு தன் பிணவோடு இருந்தது போல
  69. பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
  70. பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்
  71. கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
  72. "ஈங்கு நீ வந்த காரணம் என்?" என
  73. ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
  74. "அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
  75. வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
  76. நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
  77. வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும்" என
  78. அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
  79. "வெவ்உரை கேட்டேன் வேண்டேன்" என்றலும்
  80. "பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு
  81. உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
  82. காண்குவம் யாங்களும் காட்டுவாயாக" என
  83. தூண்டிய சினத்தினன் "சொல்" என சொல்லும்
  84. "மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
  85. கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
  86. பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
  87. உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
  88. 'நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
  89. அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
  90. உண்டு' என உணர்தலின் உரவோர் களைந்தனர்
  91. கண்டனை ஆக!" என கடு நகை எய்தி
  92. "உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
  93. இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
  94. அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
  95. செவ்வனம் உரை" எனச் சினவாது "இது கேள்
  96. உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
  97. மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
  98. தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
  99. உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
  100. போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது 
  101. யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
  102. உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
  103. கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
  104. ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
  105. பூண்ட யாக்கையின் புகுவது தௌி நீ"
  106. என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
  107. நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
  108. "கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
  109. உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
  110. தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும் 
  111. எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை" என்றலும்
  112. "நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
  113. உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
  114. உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
  115. அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
  116. மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
  117. தீத்திறம் ஒழிக!" எனச் சிறுமகன் உரைப்போன்
  118. "ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
  119. ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க" எனப்
  120. "பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை 
  121. உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
  122. விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
  123. இவை இவை கொள்க" என எடுத்தனன் கொணர்ந்து
  124. சந்திரதத்தன் என்னும் வாணிகன்
  125. வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
  126. இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
  127. தன் மனை நன் பல தானமும் செய்தனன்
  128. ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
  129. பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக!" என
  130. மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்
  131. புனையா ஓவியம் போல நிற்றலும்
  132. தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
  133. அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
  134. 'பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக' என
  135. ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என் 
நன்றி!

விக்கிமூலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன