வியாழன், 27 ஏப்ரல், 2017

முல்லைப்பாட்டில் உளவியல்

                                          ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
      சங்கஇலக்கியங்கள் தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள் வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும். ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும், நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும் சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில் இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உளவியல் விளக்கம்
      உளவியல் என்பது மனிதன் உணர்ந்து செயல்படும் நடத்தைகளை (conscious behaviour) ஆராய்வதாகும். மனிதனின் நடத்தைப் பற்றிய அறிவியல் துறையே உளவியலாகும். மனிதனின் வெளிப்படையான செயற்பாடு மட்டுமல்லாது அவனுடைய சிந்தைவளம், உணர்ச்சிவயப்படும் பாங்கு, மகிழ்ச்சி, அச்சம் அல்லது துணிச்சல் போன்ற உணர்வுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஆராய்வதை மனோத்துவம் அல்லது உளவியல் என்பார்.[1]
தற்காப்பு இயங்குமுறைகள்
      வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள்,ஏமாற்றம் ஆகியவை ஒருவருக்குத் தம் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள தடையாக இருக்கின்றன. மேலும் அவர் தம்மைப் பற்றிக் தாமே தாழ்வாக எண்ணுவதற்கும் இவை காரணமாகின்றன.[2] மேலும் இச்சமயங்களில் தற்காப்பு இயங்குமுறை செயல்படத் தொடங்கி மனிதனின் அகத்தைப் (Ego) பாதுக்கிறது என்றும், உளவியலளார் தற்காப்பு இயங்குமுறை உருவாகும் சூழலைக் குறிப்பிடுகின்றனர்.
புறத்தேற்றம்
      புறத்தேற்றம் (Projection) என்னும் உளநலத் தற்காப்பு இயங்குமுறையைத் தன்னியக்கமாக நனவிலிமனத்தால் தன்னைச் சார்ந்த ஆனால் கைவிடப்பட்ட மனபோக்குகளையும் உந்துதல்களையும் புறமுமாக்கி, வழக்கமாக வேறுமனிதன் அல்லது மனிதனின்மேல் ஏற்றிக் கற்பித்துக் கூறுதல் என உளவியலளார் வரையறை செய்வர். தான் மறுக்க விரும்பும், கைவிட விரும்பும் பண்புகளைப் பிறர்மேல் ஏற்றிக்காணும் முறைமை சங்க இலக்கியங்களில் உள்ளது.
நிமித்தங்கள்
நிமித்தங்கள் என்பது இயல்பான சில நிகழ்ச்சிகளை நன்நிமித்தமாகவே தீநிமித்தமாகவோ கொள்ளும் மரபுசங்க இலக்கியங்களில் உள்ளது. நிமித்தங்கள் பெரும்பாலும் மனித மனம் முடிவெடுக்க இயலாத சூழ்நிலைகளில் தோன்றுவனவாகக் காட்சிதருகின்றது என்றுக் காந்தி கூறுகிறார்.[3] நாம் அனைவரின் உள்ளமும் நம்மைமட்டும் நடக்கவேண்டுமென்றும் விரும்புகிறது. நினைத்த செயல் நம்மை இல்லையா என்றும் ஐயத்திற்கு ஆட்பட்டு ஊசலாடிபோராட்டமுற்றுத் தவிக்கும் நேரங்களில் எங்கோ நிகழும் ஒருசெயல் நமக்கு ஆறுதல் தருவதாக அமைகிறது.
விரிச்சிகேட்டல்
      துன்பச் சூழலில் நம்மையை எதிர்பார்த்து ஏங்கும்போது யாரோ யாரிடமோ கூறும் நற்சொல் காதில் விழ அதனைத் தவிர எதிர்ப்பிற்கு ஒரு நல்லூறுதியாகக் கொள்ளுதலே விரிச்சிகேட்டலாகும்.
      நற்சொல் காதில் விழ அதனை நன்னிமித்தமாகக் கொள்வது விரிச்சி என்பதை உணர்த்துவதாக உள்ளதை,
      இன்னே வருகுவார் தாய ரெனபோன்
      நன்னார் நன்மொழி கேட்டன. (முல்லை 7-12)
என்னும் தொடரில் விரிச்சி கேட்கும்முறை உள்ளது. நெல்லும் முல்லையும் கொண்டு விரிச்சி கேட்க மகளிர் காத்து நிற்கின்றனர், அந்நேரத்தில் ஆயர்மகள் கன்றுகளிடம் இப்பொழுதே உன் தாயார் வருகுவார் என்னும் நன்மொழி கூறுவதைக் கேட்ட அவர்கள் தலைவிடம் சென்று உன் தலைவன் வருகுவது உறுதியென கூறுவது அவள் உள்ளத்திற்கு ஆறுதல் தரும் புறத்தேற்றமுறைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
      திருந்திழைமகளிர் விரிச்சிநிற்ப (நற்: 40 : 4)
      மூதுரின் புறத்தேபோகி நெல்லும் முல்லையும் கொண்டு விரிச்சி கேட்க மகளிர் காத்து நிற்கின்ற செயல்முறைகள் நற்றிணைப் பாடலில் காணப்படுகிறது.
சகுனம் பார்த்தல்
      சகுனம் பார்த்தல் என்றாலேநாம் அனைவரின் நினைவிற்கு வருவது தற்போது தீமையான செயலைக் குறிப்பதாக மட்டுமே கொள்கின்றோம். ஆனால் சங்க இலக்கியங்களில் நன்மையான செயலைக் குறிப்பதாகவும் உள்ளது. ‘உள்ளிய மருங்கின் உள்ளம் போல’ என்பதற்கு ஏற்ப நாம் காணுகின்ற பொருளைக் காணவிரும்பும் போக்கிற்கு ஏற்பவே உலகம் தெரிதல் ஆகியனவும் இயல்பே ஆகும்.
      ‘நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வக்
      முனைகவர்ந்துகொண்ட திரையர் வினைமுடித்து
      வருதல் தலைவர் வாய்வதும் நீநின் (முல்லை 16-17)
      ஆயர்குலப் பெண்கள் தலைவன் பகைவர்களை வெற்றிக் கொண்டு அவர்களிடம் பெற்ற திறைப்பொருள்களுடன் இப்போதே வந்துவிடுவது உறுதியாகும். ஏனென்றால் பறவையின் ஓசை நல்ல சகுனத்தையே உணர்த்துகிறது. அதனால் தலைவியே நீ வருந்த வேண்டமென்று ஆறுதல் கூறுவதன் மூலம் புறத்தேற்றம் என்னும் உளவியல் இடம்பெற்றுள்ளது.
பிரிவும் பொருளும்
      சங்க இலக்கியமாந்தர் தங்கள் துயரத்தைக் குன்றம், கடல், பறவை, கொடி முதலியவற்றின் மேலேற்றிக் காண்கின்றனர். தங்கள் துயரத்தை மறுத்துப் பிறவற்றின்மேல் சுமத்தவில்லை. ஆயினும் தங்கள் துயரத்தை புறமுகமான பொருள்களிடமும் காணுபோது துயரப் பங்கீடும், துயரத்தைப் புறவயமாக்கிக் காணுதலும் அதனை ஏற்றுக் சந்திக்கும் ஆற்றலும் நேர்கிறது.[4]
      தன் விருப்பத்திற்கு பிற பொருள்மீது நோக்கம் கற்பித்துத் தன் துன்பத்தைப் புறவயமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுகின்றன என்னும் உளவியல் கருத்திற்கு சான்றாக உள்ளதை,
      ‘இடஞ்சிறந் துயரியஎழுநிலைமிடத்து
      குடங்கிறைச் செரிதருமாத்திரளருவி
      இன்பலிமிழையோர்ப்பனள் கிடந்தோள்
      அஞ்செவிநிறைஆலின் வென்றுபிறர் (முல்: 102 - 103)
      தலைவனை நினைத்து வருந்திக் கொண்டியிருக்கும் தலைவிக்கு செவிகள் குளிரும்படி தேரில் பூட்டிய குதிரைகள், விரைந்துவரும் சத்தத்தைக் கேட்கிறபோது, ஓசை அவளுக்கு தலைவன் வருவதுபோல் உணர்வதும், தலைவன் மீதுகொண்ட விருப்பத்தை குதிரையின் காலடி ஓசையானது இன்பத்தைக் தருவதாக உணர்வதன் மூலம் தன் உள்ளத்திற்கு ஆறுதலைத் தேடிக்கொள்கின்ற புறத்தேற்றம் என்னும் தற்காப்புமுறைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
முடிவுரை
      இன்றைய அறிவியலுலகில் உளவியல் பெரிதும் விரிவடைந்து பயன்நல்கும் துறையாக மலர்ந்துள்ளது. ஒருவனின் துன்பங்களுக்கு உரிய காரணங்களைத் தெரிந்து அவைகள் தீரவழி காண்பதாகும். இன்றைய சமுதாய வளர்ச்சி சிக்கலுடையதாக செல்கிற நிலையில் மானிடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உளவியலின் பங்குபெரிதும் இன்றியமையாததாக அமைந்துள்ளது.



[1] முனிர் அஹமத் பருக்கி, தற்காப்பு இயங்குமுறைகள், கலைக்களஞ்சியம் தொகுதி பத்து.
[2] Norman L.mun. Introduction to Psychology.
[3] க.காந்தி, தமிழா; பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும்.
[4] பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) – இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம்

இந்திய அரசியலமைப்பு(Indian Constitution): இயல்பு, அம்சங்கள், முக்கியத்துவம் மேற்கத்திய சிந்தனைகள் & திருக்குறள் ...