வியாழன், 27 ஏப்ரல், 2017

முதற்றாய்மொழி: சில புரிதல்கள்

முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில் எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள் (Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி (Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி (Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர் (ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம், தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.

மொழி உருவாக்கம்
     மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. கடவுள் வழிபாட்டினர் இறைவன்தான் மனிதனைப் படைத்தார் எனவும் அறிவியல் நிலையில் ஆய்வோர் உயிரியின் பல்லுயிர்ப் பெருக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்புண்டு எனவும் வலியுறுத்தி வறுகின்றனர். அவற்றுள் பின்னயை கருத்தை அறிவுசார் உலகம் ஏற்றுக் கொள்கிறது. உயிரியல் மாற்றத்தில் விலங்கிலிருந்து மனிதன் உருமாறினான் எனும் போது விலங்குகளுக்கு ஏன் பேசும் நிலை இல்லை எனக் கேட்கத் தோன்றலாம். மனிதனுடன் பழகக் கூடிய விலங்குகளும் அவர்பேசும் மொழியைப் புரிந்துகொண்டு நடப்பதைக் கண்டால் அதிலிருந்துதான் மனிதன் தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்பதை உணரலாம்.
மனிதன் படைக்கப்பட்டவன் அல்லன்; பிரைமேடா எனும் பாலுட்டி வகுப்பைச் சேர்ந்தவன். முதுகு எலும்புள்ள விலங்கினம். ஏனைய உயிர் இனங்களைப் போலவே சூழ்நிலை வற்புறுத்தல்களால் புதிய உருவம் பெற்ற ஓர் இனம். பாலூட்டி எனும் வகுப்பில் ஐந்து பெரும் குடும்பங்கள் உள்ளன.
      முதல் குடும்பம்            - லெமூர்
      இரண்டாம் குடும்பம்       -டார்சியெஸ்
      மூன்றாம் குடும்பம்         - பாபுலான் குரங்கு
நான்கு குடும்பம்           - கிப்பர், ஊரங்கொட்டான் சிம்பன்சி, கொர்ல்லா
ஐந்தாம் குடும்பம்          - மனிதன்
இன்றைய மனித இனம் கிட்டத்தட்ட பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவகைக் குரங்குகளில் இருந்து தோன்றிய தாகும். வேறு பல மானுட இனங்கள் தொல் பழங்காலத்தில் வாழ்ந்தன. காலப்போக்கில் அவை அழிந்தன. இன்றைய மனித இன முன்னோர் கோமோசாப்பியன்ஸ் (Homo sapiens) எனப்படுபவர் (க.ப.அறவாணன், தமிழிமக்கள் வரலாறு, 2005:28).
அதிலிருந்து மனிதன் பல்வேறு படிநிலைகளுக்குப் பிறகே தோன்றியுள்ளான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவன் எப்படிப் பல்நிலைப் படிமுறையில் வளர்ச்சிப் பெற்றானோ அதனைப் போன்று அவனிடத்தில் மொழியும் வளர்ந்தது. இதனை மேற்காட்டிய தேவநேயப் பாவாணரின் குறிப்புச் சுட்டிக்காட்டும். இங்கு ராகுல் சாங்கிருத்யாயன் கருத்தும் அதனைத் தெளிவுப்படுத்தும்.
மனிதன் சமுதாயத்தில் இணைந்துவிட்ட பிறகு பெருகிவிட்ட தன் காரியங்களையும் அவற்றின் பயன்களையும் மகிழ்ச்சியையும், துயரத்தையும், இன்னும் தன் உள்ளத்தில் தோன்றும் மற்ற உணர்வுகளையும் தனது கூட்டாளிக்கு எடுத்துச் சொன்னான். இப்பொழுது அவன் எழுப்பும் குரல் ஒலிகள் அதிகமாயின. அவனது தொண்டையிலுள்ள ஒலிப்பெட்டியில் மாறுதல் ஏற்பட ஆரம்பித்தது. அவனது ஒலிப் பெட்டியில் பல்வேறு வளையங்கள் உண்டாகத் தொடங்கின. வாயிலும், நாக்கிலும் மாறுதல்கள் நிகழ்ந்தன. மெல்ல மெல்ல அவன் ஒலிகளை மட்டுமல்லாமல், எழுத்துக்களையும் உச்சரிக்கக் கற்றுக் கொண்டான். உழைப்பு மனிதனுக்குச் சமுதாயத்தை வழங்கியது. சமுதாயம் அவனுக்கு மொழியைத் தந்தது (மனித சமுதாயம், 2013:6).
இப்படிப் பல முயற்சிகளினூடே பிறந்த முதற்மொழி எது? இதற்குத் தற்பொழுது வெளிவந்த கண்டுபிடிப்பு அதனை மேலும் உறுதி செய்கிறது. அது பனிமனிதன் ஊச்சி எனும் தற்போதைய கண்டுபிடிப்பாகும். அவன் பேசிய மொழி தமிழ் என்பதை அதனை ஆய்ந்த ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.
5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். அந்த உடல் 90 சதவிகிதம் பழுதடையாமல் அப்படியே இருந்தது என்பதோடு, அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் அந்த மனிதன் மரணமடைந்ததால் பனி அவரை(ப்) பாதுகாத்து உலக வரலாற்று ஆய்வுக்காக நமக்கு அளித்திருக்கிறது. பனிப்படலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி மனிதனுக்கு 'ஊட்சி' என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர். தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது வரை அறிவியலின் ஆற்றலால் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் என்னென்ன அவர் உடம்பில் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் புட்டு(ப்) புட்டு வைக்கின்றனர். அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்திருக்கிறார். அவருடைய உடலில் உள்ள எலும்புகளில் கோளாறுகள் இருந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல, ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பு முதுகில் குத்தி இறந்ததையும், அப்போது அவருக்கு 45 வயது என்றும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஊட்சி இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பெரும் மனவேதனையுடன் இருந்ததை அவரது விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப் போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர். இதையெல்லாம் கண்டு பிடித்ததைவிட விஞ்ஞானிகள் பெரும் சிரமம் மேற்கொண்டு, தொடர்ச்சியான முயற்சிகளில் ஈடுபட்டு இந்த மம்மி மனிதனின் குரல் எப்படி இருக்கும் என்ற ஆய்வை(ச்) செய்துள்ளனர். இறுதியாக அவரது குரல் தடத்தையும் உருவாக்கிவிட்டனர். ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினையும் உருவாக்கி விஞ்ஞான உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். 5300 ஆண்டுகளுக்கு முன் பேசிய ஊட்சி என்று அழைக்கப்படுகிற மம்மி மனிதன் தமிழ் பேசியிருப்பானா? உச்சரிப்பை(க்) கவனியுங்கள். "ஆ, இ, ஈ, உ, ஊ" ஆகிய தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் ஒலியை ஊட்சி உச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரை(யீ)ரலும் குரல்வளையும் மூச்சு(க்)குழலும் ஒன்றாக வேலை செய்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரை(யீ)ரல் வழங்குகிறது. இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி அதனை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் (tamil.oneindia.com).
தொன்மையான மொழிகள்
       உலகில் இன்று தொன்மையான மொழிகளாகக் கருதப்படுபவை தமிழ், சமசுகிருதம், லத்தீன், கிரேக்கம், சீனம், ஈப்புரு ஆகியனவாகும் (தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புகளும்:2014). இம்மொழிகளுள் தமிழ் மட்டுமே மக்களால் பேசப்பட்டு வரும் மொழியாக இருக்கிறது. பிற மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான ஆய்வாளர்களால் இன்று ஒத்துக்கொள்ளப்படும் தொன்மையான மொழித் தமிழின் வரலாறு மறைக்கப்படுவது ஏன்? இதற்கு நேர்மைத் தன்மையில்லா ஆய்வுகள் பல்பெருக்கம் அடைந்ததன் விளைவு எனக் கூறலாம். இந்தியாவில் ஓரிலக்கம் கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அதில் தொண்ணூறாயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்குரியவை. ஆனால் இன்னும் அறுபதினாயிரம் கல்வெட்டுக்களுக்கு மேல் ஆராயப்படவில்லை. இதன் பின்புலத்தை அறிந்தால் ஒரு மொழியின் வரலாறு எவ்வாறு சிதைக்கப்பட்டு வருகிறது என்பதை உணரலாம். அதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.
இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகளில் 90 விழுக்காட்டுக் கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டிலேயே கிடைத்தவை அவையனைத்தும் தமிழ்க்கல்வெட்டுகள். அவை இப்போது கர்நாடக மைசூர் காப்பகத்தில் முடக்கப்பட்டுள்ளன. அறுபதினாயிரம் எண்ணிக்கையில் முடக்கப்பட்ட அந்தக் கல்வெட்டுகள் பெயர்க்கப்ட்டாலே பல அரிய செய்திகளும் குறிப்புகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு நடுவணரசும் மாநில அரசும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை (தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் : தென்பெருங்கடல் ஆய்வுகள், 2006:v-vi).
இத்துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறையிலும் பல்வேறு தாக்குதல்கள் இம்மொழி மீது உண்டு. இதனையே பாவாணர் போன்றோர் வலியுறுத்தி வந்தனர். இங்கு ஞா.தேவநேயப் பாவாணர் கருத்துச் சுட்டிக்காட்டத்தக்கது.
உலக மொழிகளுக்குள் தமிழ் தலைமையானதாயிருப்பினும், (1)சரித்திர மறியாமை, (2)சொல்லியலகாராதியின்மை, (3)முதுநூல் களிறந்துபட்டமை, (4)மொழி பற்றிய தவறான அரசியற் கட்சிக் கொள்கை, (5)கலவை மொழிநடை, (6)தமிழன் அடிமை யுணர்ச்சி, (7)தமிழ்ப் பற்றில்லாதார் கல்வி நிலையங்களிலும் ஆட்சியிடங்களிலும் மிருத்தல், (8)ஆராய்ச்சியின்மை, (9)மதப்பற்றினால் பிறமொழி தழுவல், (10)பெரும் பான்மைத் தமிழரின் கல்லாமை முதலிய காரணங்களால் தமிழின் பெருமை தமிழராலும் அறியப்படாமல் இருக்கின்றது (சுட்டு விளக்கம், 2009:X).
இக்கருத்தின் அடிப்படை முதலில் நம்மொழியின் அருமையை நாம் உணர வேண்டும் என்பதாகும். அப்பொழுதுதான் சரியான வரலாற்றைப் புதுப்பிக்க முடியும், இந்த மொழியழிப்பு வேலை இன்னும் வேகமாக நடந்து வருகிறது என்பதைத் தற்பொழுது மூடப்பட்ட மதுரைக் கீழடி ஆய்வும், தமிழ்நாட்டு எல்லைக்கல்லில் இந்தித் திணிப்பும் இடம்பெறுவதன் மூலம் உணரலாம்.
முதற்றாய்மொழி : ஆய்வு வரலாறு
       உலகின் முதற்றாய்மொழியைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அது முளையிட ஆரம்பித்துள்ளது. அதற்கு அடித்தளமிட்டவர் ஞா.தேவநேயப் பாவாணர். அவருடைய ஆய்வுப்பணிகளுள் தலைமையானது தமிழ்மொழியின் வரலாற்றை அறிவது. அதற்காக அடிச்சொல் ஆய்வு முறையைக் கண்டறிந்து அதன்வழி முதற்றாய்மொழி தமிழ் என நிறுவியுள்ளார். இவர் மட்டுமின்றி அலெக்சாண்டர் காந்திரதாவ், ச.அகத்தியலிங்கம், கா.அப்பாத்துரை, மயிலை சீனி.வேங்கடசாமி, ஞானப்பிரகாசர், மா.பூங்குன்றன், அலெக்சுகோலியர், மறைமலையடிகள், க.ப.அறவாணன், ப.மருதநாயகம், சு.சக்திவேல் போன்றோரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் ஆய்வுகளின் மூலமாகத் தொல் தமிழை அடையாளப்படுத்த முயன்றுள்ளனர்.
ஞால முதல் மொழி
உலக மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியாய் இருக்க வேண்டுமெனில் அது செவ்வியல் தன்மையு0ன் இருத்தல் வேண்டும். அத்தன்மையை மேற்காட்டிய செம்மொழிகளின் வரிசையில் உள்ளவையும் பெற்றிருக்கின்றன. இருப்பினும் தமிழ்மொழி ஒன்றே காலத்திற்கு ஏற்ப தனித்தன்மையுடன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறது. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் இன்றும் பேச்சு வழக்காக இருக்கக் கூடிய ஒரு மொழியாக இருக்கிறது. இதற்குச் சான்றுகள் நிரம்ப உள்ளன. தமிழின் தொன்மையான இலக்கணமான தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பெற்ற சொற்கள் பல இன்னும் பேச்சு வழக்கில் உள்ளமை கவனத்திற்குரியது. சான்றாக, கா.அப்பாத்துரையின் கருத்தை நோக்கலாம்.
… மொழி, நாடு, இனம், பண்பு ஆகிய எல்லைகள் குறிக்க எழுந்த வழக்குகள் இவை!
நான்கு வழக்குகளுக்கும் அடிப்படைச்சொல் தமிழ்என்பதே. அது நான்கு பொருள்களையும் ஒருங்கே காட்டுவது. இலக்கண இலக்கியங்களில் நான்கு பொருள்களிலும் அது வழங்குகிறது.    
தொல்காப்பியக் காலமுதல் இன்று வரை தமிழ்என்ற சொல் தமிழரது மொழியின் பெயராய் வழங்குகிறது. சங்க இலக்கியத்திலே அது முனைப்பாக இனப் பெயராகவும் நாட்டுப் பெயராகவும் இடம்பெறுகிறது. தவிர, தமிழ்தமிழிலக்கியம் முழுவதும் இனிமை என்ற பொருளுடன் தமிழரது பண்பின் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. சொற்பொருளில் இந்த நான்கு வழக்குகளும் இன்றளவும் மரபு மாறாமலே இயங்குகின்றன (தென்மொழி, 2002:27).
இப்படி வளமிகுந்த ஒரு மொழி உலகளவில் ஊடக மொழியாக வளராமைக்குக் காரணங்கள் நிரம்ப உள்ளன. தொடக்கக்காலத்திலிருந்து இம்மொழிக்கான அடையாளங்களை அழிப்பதிலே சிலர் நாட்டம் கொண்டு வந்துள்ளனர். அதிலொன்று வரலாற்றைப் பிழையாக எழுதியது. இந்தியாவின் வரலாற்றைத் தெற்கிலிருந்துதான் தொடங்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக வடக்கிலிருந்து தொடங்குகின்றனர். இங்கு, கா.அப்பாத்துரையாரின் கருத்துச் சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழ் எழுத்துகளும் ஏனைய எல்லா இந்தி எழுத்துகளும் சமற்கிருத எழுத்துகளும் சிந்துவெளி எழுத்தின் திரிபு வளர்ச்சி வகைகளே. ஆனால், தமிழ் எழுத்துகளே சிந்துவெளி எழுத்துகளின் நேர்மரபில் வந்தவை. இன்றைய தமிழ் எழுத்துகளைப் போலவே அவையும் முப்பதாய் இருந்தன. எழுத்து முறைமை, வகுப்பு, வரிவடிவு ஆகிய மூன்றிலும் தமிழ் எழுத்தொலிகளை மூல ஒலிகளாகக் கொண்டே சமற்கிருதம் முதலிய ஏனைய இந்திய மொழிகளின் எழுத்துகள் வகுக்கப்பட்டுள்ளன என்று காண்டல் எளிது (தென்மொழி, 2002:68).
இக்கருத்துக்கு எதிர்மறையாகவே இவ்வாய்வுலகில் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு மொழியின் காலக் கண்ணாடியாக விளங்குபவை தொல்லியல், இலக்கியம், இலக்கணம் போன்றவையே. அவை அனைத்திலும் தமிழே முதன்மையாய் இலங்குகிறது. அவ்வாறிருக்க ஞால முதல்மொழியாகத் தமிழை ஏற்க இம்மனித இனம் தயங்குவதேன் எனப் புரியவில்லை. இது மனித இனத்துக்குள்ளே நடக்கக் கூடிய போட்டியாகத்தான் தோன்றுகிறது. இது தவிர்ப்பது மனித இனம் நீடூடி வாழ வழிவகுக்கும்.
       ஒரு காலத்தில் செம்மாந்த பண்புடன் விளங்கிய ஓரினம் தமிழர். இவன் பிற நாட்டார் மீது, மொழியார் மீது தீவிர பற்றுடையவன் ஆனதால் தன்னுடைய அடையாளத்தை இழந்துள்ளான் என்பதை தேவநேயப்பாவாணர், க.ப.அறவாணன், ப.மருதநாயகம் போன்றோர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இங்கு ப.மருதநாயகம் எழுதியிருக்கும் இரு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று: மேலை நோக்கில் தமிழ்க்கவிதை. மற்றொன்று: பிறமொழி இலக்கியங்களில்  தமிழிலக்கியங்களின் தாக்கம். இவ்விரு நூல்களும் தமிழின் மேன்மையை எடுத்துக் கூறுபவை. இடையில் ஏற்பட்ட வருக்கப்பாகுப்பாட்டில்தான் தமிழ் தன்னுடைய அடையாளத்தை மெல்ல இழந்தது. ஆயின் நேரிய ஆய்வாளர் சிலரால் ஞால முதல்மொழி எது என்று அடையாளம் காட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது அலெக்சுகோலியர் எழுதிய ஆய்வை இன்று பெரும்பான்மையானோர் தமிழ் ஞால முதல்மொழியாக இருக்க வாய்ப்புண்டு என நம்ப வைத்துள்ளது. அதை நோக்கியே இன்று பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.
       முடிப்பாக இதுவரை விளக்கப்பட்ட கருத்துக்கள் ஓரளவிற்கு முதற்றாய் மொழியாகிய தமிழை அறிந்து கொள்வதற்கான வழித்தடங்கள். இவை போதுமானவை அல்ல. இன்னும் அடுத்தக்கட்ட நகர்விற்குச் செல்ல வேண்டியதிருக்கிறது என்பதையும் மேற்கண்ட புரிதல்களின்வழி வலியுறுத்துகிறது இவ்வாய்வு.
துணைநின்றவை
அகத்தியலிங்கம் ச., 2010, சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே!, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
அகத்தியலியங்கம் ச., 2011, தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
அப்பாத்துரை கா., 2002, தென்மொழி, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
அறவாணன் க.ப., 2005, தமிழ்மக்கள் வரலாறு தொல்தமிழர் காலம், தமிழ்க்கோட்டம், சென்னை.
அறவாணன் க.ப., 2006, தமிழ்மக்கள் வரலாறு அயலவர் காலம், தமிழ்க்கோட்டம், சென்னை.
அறவாணன் க.ப., 2009, தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, தமிழ்க்கோட்டம், சென்னை.
இராமநாதன் பி.(மொ.ஆ.)., 2006, தமிழ நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும்: தென்பெருங்கடல் ஆய்வுகள், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
எத்திராஜுலு ஏ.ஜி.(மொ.ஆ), 2013, மனித சமுதாயம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, ஒப்பியன் மொழிகள்-1, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, சுட்டுவிளக்கம், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, செந்தமிழ்ச் சிறப்பு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, தமிழ் வரலாறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, தமிழர் மதம், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, தமிழர் வரலாறு, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, தலைமைத் தமிழ், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திராவிடத் தாய், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, முதற்றாய்மொழிகள், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, வடமொழி வரலாறு -1, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, வண்ணனை மொழிநூலின் வழுவியல், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
மருதநாயகம் ப., 2001, மேலை நோக்கில் தமிழ்க்கவிதை, உலகக் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
மருதநாயகம் ப., 2014, பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப் பேரியம், சென்னை.

"License: Creative Commons Attribution-ShareAlike 4.0 International உரிமம் – கிரியேட்டிவ் கொமன்ஸ் காரணமறிவு - எல்லோரும் படிக்கலாம்; பகிரலாம்." என்ற உடன்பாட்டின்படி யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிடும் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற அன்பளிப்பு (இலவச) மின்நூலில் எனது பதிவு இடம்பெற அனுமதியளிப்பதோடு ஒத்துழைப்பு வழங்குகிறேன்.

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. நாளைய தலைமுறைக்கு
    எங்கள் தமிழின் தொன்மையை
    உணர வைக்கவே இம்முயற்சி!
    தங்கள் முயற்சிக்கு
    நான் பணிகின்றேன் ஐயா!
    தங்கள் பதிவு
    குறித்த மின்நூலில் இடம் பெறும் என்பதை
    உறுதிப்படுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன