சனி, 4 பிப்ரவரி, 2023

கடித இலக்கியம் 1

கோயமுத்தூர், 20.07.2016
அன்புக் குழந்தைகளுக்கு,

நீங்கள் வாழும் உலகம் அற்புதமானது. அன்பாய் வாழுங்கள் என்று ஆசிரியன் சொல்வான். அவன் வாழ மாட்டான். ஆய்விற்கு முதன்மை கொடுப்பவன். ஆய்வினால் புத்துலகைப் படைக்க முடியும் எண்ணம் அவனுள். தொல்காப்பியன், சாக்ரடீசு, ஐன்சுடீன், நெப்பொலியன், அலெக்சாண்டர், அம்பேத்கார், அப்துல்கலாம், காமராசர், நல்லக்கண்ணு, கக்கன் எனப் பலபேர் தன்னுள் குடிகொண்டுள்ளனர் என்ற மிதமிதப்பு. சொல்வது உண்மை. செயலில் பொய்மை. அப்படி வாழ நினைக்காதீர் என் அன்புக் குழந்தைகளே...

தமிழினி என்று பெயரிட்டேன். தமிழைத் தாங்குவாய் என்று. ஆங்கிலம் பேசு என்கிறாய். அறியா மடந்தையாய். அறிவு தரும் அன்னையோ ஆங்கில மோகம். என்ன சொல்வது என் பைத்தியம் தாய்மொழியே என்று. அவள் புரிந்தும் பொருளாதாரமே கனவாய் இருக்கிறாள். அதனூடே மொழியும் பிதுங்கும் என்னுள். உணர்வாயா.... எதிர்காலத்தில்.... செய்வாயா....

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

எனும் பாரதி சிந்தைக்குச் செவிமடுப்பாயா.... தமிழின் அரிய செல்வத்தை உலகிற்கு எடுத்துரைப்பாயா......

பாவாணர் என்று பெயர் வைத்தேனடா. பன்மொழிப் பகலனாய் பாரினில் உலா வருவதற்கு. பைந்தமிழ் மொழிவாயாடா. பாரோர் வியந்து நிற்க.... பார்ப்போம் பல்கலையா? பாழாய்ப்போன பொருள் நோக்கும் மனிதனா? என்று.

மறவாதீர் என் செல்வங்களே பட்டுப்பூச்சியும் பட்டை உதிர்த்துப் பாரில் வரலாறு படைத்திருக்கிறது. பொருள் மட்டும் நோக்கும் புவியர் மண்ணுள் ஏராளம். அவர்களை வரலாறு பேசுவதில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஞானிக்கு நிகரானவர். உங்களைத் தயார்படுத்திக் கொள்ள தயாராகுங்கள். காலம் வெகு தொலைவினில் இல்லை. கரிகாலனை, இராசராசனை, சங்கப் புலவனை, பிரபாகரனை, நெப்போலியனை, அலெக்சாந்தனை பாடியுங்கள் வாழ்க்கைப் புரிதலும் நல்ல வண்ணமாகும்.

பொருளாதாரம் மட்டும் மனிதனுக்கு அவசியமில்லை. அதனைத் தேடி ஓடாதே... அது உன்னைத் தேடி வரும்வரை உழைத்துக் கொண்டே இரு... கொஞ்சம் மனிதனாய் இருக்க முயற்சி செய். முயற்சியே கூலி தரும். முயலாத சோம்பேறிக்கு வேலை கொடாதே... முயற்சியின் தாரக மந்திரம் அறி....


நல்ல
படைப்பாளியாக
சிந்தனையாளராக
அறிஞராக
திறனாய்வாளராக
சமூகவாதியாக
புரட்சியாளராக
அடையாளம் காட்டு
காற்றும் விலகி வணங்கும்
நல்லெண்ணத்துக்கு
அடையாளம்
வரலாற்றுக்கு நாம் தரும் வெகுமதி
மறவாதே
தொடர்ந்து வாசி
புத்துலகை உருவாக்கு...

தமிழ்ப்பித்தன்
நேயக்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன