செவ்வாய், 20 ஏப்ரல், 2021

விக்கித்திட்டமும் செயற்கை நுண்ணறிவும் (Wikimedia and Artificial Intelligence)

 முனைவர் த. சத்தியராஜ்

தமிழ் உதவிப்பேராசிரியர்

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் - 641 042

sathiyarajt@skacas.ac.in 

கணினித் தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் நுட்பமாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைகின்றது. இந்த துறை மனிதரைப் போன்று செயல்படும் திறன் படைத்தது. இதன் வகை நான்கு. அவை; எதிர்வினை செயற்கை நுண்ணறிவு (Reactive Machine AI), வரையறுக்கப்பட்ட நினைவகச் செயற்கை நுண்ணறிவு (Limited Memory AI), கோட்பாட்டுச் செயற்கை நுண்ணறிவு (Theory Mind AI), விழிப்புணர்வு செயற்கை நுண்ணறிவு (Self - Aware AI) என்பன. இவை செயல்திட்டம் (Planning), கற்றல் (Learning), தர்க்கம் (Reasoning), பிரச்சனைக்கு தீர்வு (Problem Solving), தீர்வு காணல் (Decision making) என்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குபவை. இந்தப் புரிதலின் அடிப்படையில் தமிழ்மொழித் தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு முறையில் தரும்பொழுது தேடுவோரின் தேடலுக்கு ஏற்ப அது தருவதற்கு முயற்சி செய்யும்.  இந்தச் செயற்கை நுண்ணறிவுக் குறித்துப் பின்வரும் வரைபடம் விளக்கும்.

படம் - 1 - செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் நோக்கமும் வளர்ச்சியும் (வினவு இதழ்)

இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எல்லா துறைகளிலும் இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது என வல்லுநர் தெரிவிக்கிறார்கள். சான்றாக மருத்துவத்துறையில் அதன் பயன்பாடு மிக அதிகம் என்பதைப் பின்வரும் கருத்துக்கள் வெளிப்படுத்தும்.

  • உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இனி ஒவ்வோர் ஆண்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 40 சதவீத வளர்ச்சி ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • செயற்கை நுண்ணறிவால் வருங்காலத்தில் சுகாதாரத் துறையில் 30-லிருந்து 40 சதவீதம் வரையில் செலவு குறையும் எனவும் அந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்துகின்றன.

  • தலைவலி, உடல்வலி, காய்ச்சல் என எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்குச் செல்லும் போக்கு இன்று அதிகரித்துள்ளது. நோயாளிகளின் பிரச்சினை என்ன என்பதை விரைந்து கண்டுபிடித்துச் சொல்வது மருத்துவர்கள் முன் இருக்கும் பெரிய சவாலாக உள்ளது.

  • பல உயிர்க்கொல்லி நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிக்காததன் விளைவாகப் பல உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

  • பொதுவாகப் புற்றுநோய் கட்டிகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இந்தச் சவாலை எதிர்கொள்வதற்குச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

  • செயற்கை நுண்ணறிவின் இன்றைய உயரிய தொழில்நுட்பத்தின் மூலமாக உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்களைக் கூட மருத்துவர்களால் சுலபமாகக் கண்டறிய முடிகிறது (https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baabafba9bcdbaebbfb95bc1-b87ba3bc8bafbb5bb4bbfb9abcd-b9abc7bb5bc8b95bb3bcd/baebb0bc1ba8bcdba4bc1-baabb1bcdbb1bbeb95bcdb95bc1bb1bc8bafbc8-b95bb3bc8baf-b89ba4bb5bc1baebcd-b9abc6bafbb1bcdb95bc8-ba8bc1ba3bcdba3bb1bbfbb5bc1).

இதனைப் புரிந்து கொள்ளும்பொழுது தமிழ் மொழியின் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் தேவையை உணரலாம். அனைவரும் தமிழ்மொழியின் தரவுகளை விக்கித்திட்டங்களில்தான் பார்க்கின்றனர். கூகுள் தேடுபொறி அதன் தரவுகளை முதன்மைப்படுத்திக் காட்டுகின்றது.

அதனால்தான் விக்கித்திட்டங்கள் குறித்து முதலில் அறிந்து கொள்ளுதல் வேண்டும். விக்கித்திட்டங்களில் விக்கிப்பீடியா – கலைக்களஞ்சியம், விக்சனரி – அகராதியும் சொள்களஞ்சியமும்,    விக்கிநூல்கள் – பாடநூல்கள், கையேடுகள், வழிகாட்டிகள், விக்கிசெய்திகள் – செய்திகள், விக்கிமேற்கோள் – மேற்கோள்களின் தொகுப்புகள், விக்கிமூலம் – நூலகம், விக்கிப் பல்கலைக்கழகம் – கற்றல் கருவிகளும் செயல்பாடுகளும், விக்கிப் பயணம் – பயண வழிகாட்டிகள், விக்கியினங்கள் – இனங்களின் அடைவு, பொதுவகம் – ஊடகங்களின் களஞ்சியம், மேல்-விக்கி – விக்கி ஊடக திட்ட ஒருங்கிணைப்பு, விக்கி ஊடகம் – மென்பொருள் ஆவணப்படுத்தம் ஆகியன அமைகின்றன. இதன் பகுப்புமுறை தேவைக்கு ஏற்ப பல்கவும் வாய்ப்பு உண்டு.

இத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சூழல் உருவாயின் நிகழும் மாற்றங்கள் என்னவாக இருக்கும் எனும் நோக்கத்தை இங்கு அறிய முற்படலாம். அதன்மூலம் தமிழ்மொழியின் மேம்பாட்டையும் உணர்வதற்கான சூழல் உருவாகும் என்பதையும் இவ்வாய்வுரை வெளிப்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன