தமிழும் தெலுங்கும் உறவுடைய மொழிகள். திராவிடத்திலிருந்து இவ்விரண்டும் பிரிந்தது என்பது அறிஞர்கள் கருத்து. திராவிடர் என்றாலே அது தமிழர் எனக் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் அறிஞர்கள் பார்வையில் இருந்து வருகிறது. தமிழர்தம் பார்வையில் திராவிடர் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது இருக்கட்டும் ஆய்வாளர் ஆ.ஈஸ்வரன் ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் ஆகிய ஆய்வுகளை மேற்கொள்ளும் காலத்தும் அதன் பின்பும் மேற்கொண்ட ஆய்வுகளை ஒரு பொருண்மை கருதி ‘தெலுங்கு - தமிழ் ஒப்பீட்டுக் கட்டுரைகள் (உறவுநிலை - இலக்கியம் – நூலாய்வு) எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கியுள்ளார். இம்முயற்சி வரவேற்கத் தக்கதும் பாராட்டுக்குரியதும் ஆகும். அது நிற்க.
இனி இவ்வாய்வுரைகளின் மீதான மதிப்பீட்டிற்கு வருவோம். இம்மதிப்பீட்டுரை பாராட்டுமுறையில் அமையாமல் காய்தல்
உவத்தலின்றி எனது பார்வையில் உதித்த சிந்தனைகளை வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
இவ்வாய்வுரை
நான்கு பெரும் பகுப்புக்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது அவை
தெலுங்கு - தமிழ் உறவு, செவ்விலக்கியம், கேளிக்கை இலக்கியம், நூலாய்வு என்பன.
‘தெலுங்கு -
தமிழ் உறவு’ எனும் முதல் பகுப்புக்குள் இரண்டு கட்டுரைகள் அடுக்கப்பட்டுள்ளன. அவை ‘தெலுங்கு - தமிழ் உறவு’,
‘மொழிபெயர்ப்புகள்வழித் தமிழ் இலக்கிய
வளர்ச்சி’ என்பன. இவற்றுள் ‘தெலுங்கு - தமிழ் உறவு’ எனும் முதல் கட்டுரை நீலகண்ட சாசுதிரி, மயிலை சீனி.வேங்கடசாமி, மா.இராசமாணிக்கனார், த.சா.மாணிக்கம்,
தெ.பொ.மீ. ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கித்
தரப்பெற்றதாக அமைகின்றது.
‘வம்ப வடுகர்’
குறித்துப் பேசும்பொழுது ‘வம்ப’ என்ற சொல்லுக்குப்
புதுமை என்று பொருள் இருப்பதை மட்டும் சுட்டிக்காட்டி, ‘புதிய வடுகர்’ எனப் பொருள் தருகிறார். அப்பொருள் கௌரா தமிழ் அகராதியில் உள்ளதாகவும் கூறிச் செல்கிறார். அதே சமகால லிப்கோ
தமிழ் – தமிழ் – ஆங்கிலப் பேரகராதியில் ‘வம்ப’ என்ற சொல்லிற்கான விளக்கம் இல்லை. இருப்பினும் அதனுடன் தொடர்புடைய
வம்பக் கோட்டி, வம்படித்தல், வம்பப் பரத்தர், வம்ப
மாக்கள், வம்பமாரி, வம்பளத்தல், வம்பன் ஆகிய சொல்லுக்கான விளக்கம் தரப்பட்டுள்ளது.
இவ்விளக்கங்கள் கவனிக்கத்தக்கவை. அதேபோல பெ.மாதையன் தொகுத்தளித்த சங்க இலக்கியச் சொல்லடைவு நூலில் ‘வம்ப’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் 16 இடங்களில் பயின்று வருவதாகவும், வம்பலர் என்ற சொல் 33
இடங்களில் பயின்று வருவதாகவும், வம்பலின் ஓரிடத்திலும் வம்பலிர் ஈரிடங்களிலும் வம்ப 17 இடங்களிலும் பயின்று வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகின்றார்
(சங்க இலக்கியச் சொல்லடைவு, 2007: 586 – 587). சான்றிற்கு,
வம்ப மாக்கள் உயர்த்திறம்
பெயர்த்தென (நற்.164-7)
இவ்வடியில் பயின்று வரும் வம்ப
என்ற சொல்லிற்கு விளக்கமளிக்குகையில் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை புதிய என்ற மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துகிறார் (நற்றிணை மூலமும் உரையும், 2008, ப.317).
வம்ப மாக்கள்
வருதிறம் நோக்கி (நற்.298-1)
வம்ப நாரை யின்னொலித் தன்ன (அகம்.100-14)
இவ்வடியில் இடம்பெறும் வம்ப என்ற சொல்லிற்குப் புதிய என்ற மாற்றுச் சொல்லையே
ந.சி.கந்தையாவும் கையாள்கின்றார் (அகநானூறு மூலமும் உரையும், 2008, ப.217).
அம்புவிட வீழ்ந்தோர்
வம்பப் பதுக்கை (புறம்.3-21)
இவ்வடியில் வரும் வம்ப என்ற சொல்லிற்குப் புதிய என்ற மாற்றுச் சொல்லையே பயன்படுத்துகிறார் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
(புறநானூறு மூலமும் உரையும், 2008, ப.11).
வம்ப என்ற சொல்லிற்கு இவ்வாய்வாளர் சரியான விளக்கம் அளித்தாலும் ஒரு தரவை மட்டும் பார்த்துக்கொண்டு அதுவே முடிவு என முடித்தல் ஆய்வின் முழுமையைக் காட்டாதல்லவா?
அதனால்தான் மேற்கொண்ட விளக்கங்கள் காணப்பட்டன. இருப்பினும் ஔவை
சு. துரைசாமிப்பிள்ளை, ந. சி. கந்தையா ஆகி யோருக்கு
முன்பும் சங்கப் பனுவலுக்கு உரை கண்டவர்களின்
விளக்கங்களையும் அறிதல் அச்சொல் லிற்கான தெளிவைப் பெறுதல் முழுமையடையும்.
இச்சொல்லின் பயன்பாடு எந்தக்
காலம் வரை உள்ளது என்பதையும் நோக்குதல் வேண்டும். மூவர்
தேவாரச் சொல்லகராதியில் வம்பக்கரை, வம்பனை, வம்பின் மலர், வம்பு ஆகிய சொற்கள் புழக்கத்தில் இருப்பதை அறிய
முடிகின்றது (2011; 1307-1308). இச்சொல் பயன்பாட்டின்
நீட்சியை மதுரைத் தமிழ்ப் பேராகரதியிலும் கிரியாவின்
தற்காலத் தமிழ் அகராதியிலும் வம்படியாக, வம்பள, வம்பன், வம்பு, வம்புக்கு இழு,
வம்புச்சண்டை, வம்பு தும்பு எனக் காணப்பெறுகின்றன (1992; 1199 – 1200).
அரசியல் உறவு எனும் உட்பகுப்புக்குள் … மேலைச் சாளுக்கிய அரசன் இரண்டாம் தைலன்
முதலாம் இராஜராஜனைத் தோற்கடித்து 150
யானைகளைக் கைப்பற்றினான் என்று மேலைச் சாளுக்கிய கல்வெட்டு கூறுகிறது. ஆனால் இதனைப்பற்றி எந்த இடத்திலும் முதலாம் இராஜராஜன் காலத்துக் குறிப்புகள் குறிப்பிடவில்லை (ப.6) எனக் கூறிச் செல்கிறார் ஆய்வாளர். இது அரசியல்
தொடர்பான கருத்துக் கூறுகையில் இடம்பெறுகிறது. இதன் மூலம்
யாருடைய குறிப்பு உண்மையான குறிப்பு என்ற ஐயம் எழுகிறது. இவ்வாய்வாளர் இதுபோன்ற குறிப்பை
விடுத்துச் செல்வது எதிர்வரும் ஆய்வாளர்களுக்கு விருந்தாக
அமையும். அரசியல் வரலாற்றை எழுதுவோரின் மனநிலையைப் புரிந்துகொள்ள இதுபோன்ற குறிப்புகள் தேவையானவையே.
… மேலும் இராஜராஜன் தன் மகள் குந்தவையை விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இவ்வாறு முதன்முதலாகத் தெலுங்கர்களுடன் மண உறவு முறையுடன் அரசு உறவு ஆரம்பமானது. இம்முறை
மேலும் தொடர்ந்தது (ப.19) எனக் குறிப்பிடுகிறார் ஆய்வாளர். அது எப்படிச் சாத்தியமாகும்? அரு. பரமசிவம்
எழுதிய தென்னிந்திய இன ஒப்புமையியல் எனும் நூலுள் ஓரினத்திற்குரிய
உட்பிரிவுகள் இன்னொரு இனத்தின் உட்பிரிவில் உள்ளமையை உணர்வோர்களுக்கு இவ்வாய் வளர் முன்வைக்கும் கருத்து முரண்படும். அரசு உருவாக் கத்திற்கு முன்பே பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. யாயும் ஞாயும் யாராகியரோ எனும் குறுந்தொகைப்
மொழி உறவு எனும் உட்பகுப்பிற்குள் … தமிழும் தெலுங்கும் ஒரே குடும்பத்து மொழிகள். இவை இரண்டிற்கும்
மூலத்திராவிட மொழியே மூலம் என்பதும் இவ்விரண்டிற்கும்
மொழியியல் அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதும்
நிறுவப்பட்ட ஒன்றாகும் (ப.13) என
இங்குக் குறிப்பிடுகின்றார். அதாவது
தமிழ், தெலுங்கு மொழிகள் வேறு வேறு
என்று குறிப்பிடும் இவ்வாய்வாளர்.
இதன்மூலம் மூலத்திராவிடம் என்பதில்
உடன்படுகிறார். இவரே முற்பகுதியில்
(ப.9) த ச. மாணிக்கத்தின் கருத்தைச் சுட்டிக்
காட்டுகையில் முற்காலத்தில் தெலுங்கர்களைத்
தமிழகத்தில் வடுகர் என அழைத்தனர் என்பதனைச் சங்க இலக்கியத்தின் வழிக்
கண்டோம். அதேபோல தெலுங்கர்கள் தமிழர்களை அரவாளு
… நூலில் சுட்டிக்காட்டியுள்ளார் எனக்
குறிப்பிடுகின்றார். இது திராவிடம் வேறல்ல இரண்டும் ஒன்றேதான் என ஒப்புக் கொள்வதற்குச் சமம். அவ்வாறிருக்கையில் திராவிடம் வேறு தமிழ் வேறு
என்பது போல கூறுவதன் அரசியல் புரியவில்லை. மூலத் திராவிடம் என்று சொல்வதைக் காட்டிலும் மூலத் தமிழ் எனக் கூறுவதில் அடையும் தயக்கம். ஆய்வறத்திலிருந்து
விலகும் தன்மையையே காட்டுகிறது. இது இவ்வாய்வளரிடத்து மட்டும் ஆய்வில் தோய்ந்த அறிஞர்களிடத்தும் நிலவுகின்ற ஆய்வு அரசியலாகவே வெளிப்படுகின்றது. இது கால்டுவெல்லிடத்தும் காணப்படுகின்றது. கால்டுவெல்லார் தொடக்கத்தில்
ஒரு மொழியில் உள்ள சொற்கள் இன்னொரு
மொழியில் கலப்பது இயல்பு கேழ்வரகு, கேப்பை என்ற சொற்கள்
இருக்க ராகி என்று கூறுவதைப் பார்க்கலாம் அங்குப் பிறமொழிச் சமூகம் இரண்டறக் கலந்திருப்பதன் வெளிப்பாட்டையே அது காட்டுகின்றது. அதுபோல, பன்மொழி அறிந்த புலவர்கள் அவர்களது படைப்பிலும் தாங்கள் அறிந்த மொழிச் சொற்களைப் பயன்படுத்திச் செல்கின்றனர் என்ற குறிப்புக் கவனிக்கத்தக்கதாய் அமைகின்றது (ப.8). இக்கருத்து மொழித்தூய்மை குறித்துச் சிந்திப்போருக்குத் திறவாக அமையும்.
தமிழ் எழுத்துக்கள் தெலுங்கில் திரிந்து
வழங்கும் முறையைச் சுட்டிக் காட்டும்
இடங்களில் ஆய்வாளர் கவனம் கொள்ளவில்லை. எம்>இ, ழ>#, #>லு,
ஆ># இத்திரிபுகளில் சான்றும் திரிபு முறையும் பிழையாக அமைந்துள்ளது. அதேபோல, கூட்டு மெய்கள் தெலுங்கில் உண்டு. தமிழில் இல்லை (ப.14) எனும் கருத்தைக் கூறியதோடு நிறுத்தியுள்ளார். இங்குக் கூடுதல் விளக்கம் தந்திருக்கலாம். இதேபோல, சொல்லின் நடுவில் உள்ள உயிர் கெடுதல், இடையெழுத்துக்
கெடுதல், வல்லினம் மெல்லினமாதல், ர/ன, வ/ர, ண/ட, அள்>அல்,
ள>ட இவ்விளக்கங்களில் இன்னும் தெளிவு தேவை.
ப.18இல் வகைப்பாட்டு அடிப்படையில் மொழி
பெயர்ப்புச் செய்யப்பெற்ற இலக்கியங்களை வகைப் படுத்திப் பார்க்கும்பொழுது கொடைமொழி
கொள் மொழிக்கு அளித்துள்ள வளர்ச்சியை அளவிட முடியும் எனும்
கருதுகோளை எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தித்
தருகின்றார். அதே மாதிரி புதுவகையான இலக்கிய வகைமைகளைக் கண்டறிதல் எனும் பகுப்பிற்குள் சிற்றிலக்கியத்திற்கான கூறுகள் தெலுங்கு மொழிக்குரிய பிரபந்த இலக்கியங்களின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடும் கூடும் கருதுகோளையும் விடுத்துச்
செல்கின்றது இவ்வாய்வு. இப்படிப் பல
கருதுகோளை இவ்வாய்வு முன்வைத்து இருப்பது பாராட்டுக்குரியது.
தெலுங்கில் தமிழ்ச் செவ்விலக்கிய
மொழிபெயர்ப்புகள் எனும் தலைப்பிலான பகுதிகளில் விவரிக்கப்பட்ட கருத்துகள் நுணுகிப்
பார்க்கத்தக்கவை. ஒரு மொழியில் உருவான சிந்தனைகள் இன்னொரு மொழிக்குக் கடத்தப்பட்டு இருக்கும் தன்மையைக் கோடிட்டுக்
காண்பித்துச் செல்கின்றன. சான்றாக,
சின்னைய சூரி எனும் இலக்கணி
தமிழ்நாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தும்,
அவருடைய படைப்பில் தமிழ்மொழி சார்ந்த சிந்தனைகள் இடம்பெறவில்லை எனக் கருதுவோரும் உண்டு. அதுபோன்ற கருத்தியல்களை மீளாய்வு செய்வதற்கான களன்களை இவ்வாய்வு தூண்டி
விடுகின்றது எனக் கூறல் தகும். இதன் உட்தலைப்பான நடைபெற்றுக் கொண்டி ருக்கும் பணி எனும் பகுதிக்குள் இந்தக் கட்டுரை உருவாக்கம் பெற 2017இல் தரவுகளைத் திரட்டுகின்றார். அத்தரவுகளின் அடிப்படையில் இதற்கான தலைப்பி டலையும் தெரிவு செய்கின்றார். ஆனால் முறையான தரவுத்
குறுந்தொகை தெலுங்கு மொழிபெயர்ப்பு;
முயற்சியும் தெளிச்சியும் எனும் தலைப்பிலான
கட்டுரையில் ஆய்வாளர் சில இடங்களில் தெலுங்குச் சொற்களைத் தந்து, அதன் ஒலிபெயர்ப்பினையும் அதற்கான தமிழ்ப் பொருண்மைச் சொல்லையும் தந்து செல்கிறார். இது பாராட்டுக்குரியது. ஆனால் சில இடங்களில் மொழி பெயர்ப்பை விடுத்தும் செல்கிறார். இவ்வாய் வுரையை வாசிக்கும் வாசகரை இவ்வாய்வாளர் தமிழ் - தெலுங்கு
மொழிகளை அறிந்தோருக்காக எழுதியுள்ளார் போலும். தமிழ் மட்டும் அறிந்தோரையும் கவனத்தில் கொண்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ப.54இல் … அதனை
ஆசிரியப்பா அமைப்பு முறையில் தெலுங்கில் மொழிபெயர்க்கலாம்.
இதனை நன்முறையில் ஜகந்நாத ராஜா செய்தும் காட்டியிருக்கிறார் எனக்
கூறிச் செல்கின்றார். தெலுங்கில் தமிழ் மரபுப் பாடல்களின் வடிவம் உள்ளதா? அது உள்ளது என்றால் அதன்
மூலம் எது? அது எந்தக் காலத்திலிருந்து உருவாகியிருக்கும்? என்ற பல்வேறு
ஐயங்களை அக்கருத்து எழுப்புகிறது. இந்த
தற்சிறப்புப் பாயிரங்கள்வழி அறியலாகும்
இலக்கணத் தேவையும் நோக்கமும் (தமிழ் – வீரசோழியம், தெலுங்கு – ஆந்திர பாஷா பூஷணம்) எனும்
பொருண்மையிலான கட்டுரையும், கேளிக்கை இலக்கியம் எனும் பகுப்புக்குள் சமகாலத்
தமிழ்க் கேளிக்கைப் புனைகதைகளும் எண்டமூரி வீரேந்திரநாத் புனைகதைகளும், தெலுங்கு
கேளிக்கைப் புதினங்களுக்கான இணையவழி எதிர்வினைகள் ஆகிய கட்டுரைகளும், நூலாய்வு
எனும் பகுப்புக்குள் தமிழும் தெலுங்கும், ஆந்திர பாஷா பூஷணம், இலக்கண உறவு
தமிழும் தெலுங்கும் என்ற கட்டுரைகளும் வாசித்துப் பயனடையும் வகையில்
அமைந்துள்ளன.
இவ்வாறு
எவ்வகையிலும் இவ்வாய்வுத் தொகுப்பு நூலை மதிப்பிட்டாலும் அது அவரது எதிர்கால ஆய்விற்கு வழிவகுக்கும் என்ற முறையில்
அமையும் என ஆய்வாளர் அமைதி கொள்க. இவ்வாய்வுநூல் ஆய்வாளர்கள் வாசித்துப் பயன்பெறக் கூடியதே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல ஆய்வாளரிடத்து ஆய்வு நேர்மை உள்ளது என்பதை
அவர்தம் முகவுரை தெளிவுபடுத்தும். அதனால் ஆய்வுலகம்
இவ்வாய்வுநூலை வாங்கி வாசித்துப் பயன்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகு முயற்சியை மேற்கொண்ட
முனைவர் ஆ. ஈஸ்வரன் அவர்களுக்கு
வாழ்த்தும் பாராட்டும்.
கோவை, 04.03.2021
மதிப்பிடலுடன்
த.சத்தியராஜ்
தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் – 641 042
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன