முன்னுரை
கல்வெட்டியல் என்பது தொல்லியலில் ஒரு பிரிவு என்பதாக புரிந்து கொள்ளலாம். கல்லில் வெட்டி வைக்கப்பட்டுள்ள களங்களை அறிவது கல்வெட்டியல் எனும் துறையின் படிப்பாகும். இத்துறையை முழுவதும் அறிந்திட அத்துறையில் தொடர்ந்து பயணம் தேவை. அதுமட்டுமின்றித் தொடர் பயிற்சியும் மிகத் தேவை. அப்பொழுதுதான் கல்லெழுத்துக்களை, அவை விளம்பும் தகவல்களை முழுமையும் அறிந்துகொள்ள இயலும். இத்துறை சார்ந்த புரிதல்களை இவ்வறிக்கை முன்வைக்க முயல்கின்றது.
கல்வெட்டியல் - அறிதல்கள்
மனித இனம் தோன்றி பல இலக்கம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாந்தவியல் அறிஞர்கள் கூறியுள்ளதாகத் தேவநேயப் பாவணர் (), இராகுல சாங்கிருத்தியாயன் () போன்ற அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இம்மனித இனம் மெல்ல மெல்லத் தங்களது மனக் கருத்தியல்களைப் பிறருக்கு அறிவிக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளனர் என்பதை வரலாற்று அடிப்படையில் தொல்லியல் ஆய்வுகள் நிறுவி வருகின்றன. அவற்றில் ஒரு முயற்சிதான் இந்தக் கல்வெட்டு என்பதும். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் தாங்கள் வெளிப்படுத்திய அல்லது கூற விரும்பிய கருத்துக்களைப் பிந்தைய தலைமுறையினர் அறிந்து கொள்வார்கள் என்று அறிவு ஏற்பட்டதன் விளைவு இக்கல்வெட்டு எனலாம். மனித சமுதாயம் கூர்த்த அறிவுடையது என்பதை இக்கல்வெட்டுக்கள் நிறுவி வருகின்றன. மொழி எனும் கருவியை வளப்படுத்துவதற்கும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கும் இக்கல்வெட்டை அவர்கள் தெரிவு செய்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இக்கல்வெட்டு உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றன. இவ்வகையான கல்வெட்டுக் குறிப்பிடும் கருத்துக்கள் வருமாறு;-
”பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டுக்கள், பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுகளைக் காணலாம். கல்வெட்டு பொறிக்கும் வழக்கம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை. ஆதலால், மிகப் பழங்கால வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளுக்கான நம்பகமான சான்றுகளாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுக்கள் ஒரு மொழியில் மட்டுமின்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் ஒரே செய்தியைக் குறிக்கும்படி அமைந்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் வழக்கொழிந்து மறக்கப்பட்டுவிட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. பண்டைய எகிப்திய மொழி இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது” (கல்வெட்டு, https://ta.wikipedia.org/s/k29).
இக்கல்வெட்டுக்களை, அவை கூறும் செய்திகள் அனைத்தையும் அறிஞர்கள் ஆராய்ந்து பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளனர். அவையாவன;- 1.இலக்கியக் கல்வெட்டுக்கள், 2.அரசியல் கல்வெட்டுக்கள், 3.சமயக் கல்வெட்டுக்கள், 4.நினைவுக் கல்வெட்டுக்கள், 5.அரசாணைக் கல்வெட்டுக்கள், 6.பொதுநலக் கல்வெட்டுக்கள், 7.ஆட்சி நிறைவுக் கல்வெட்டுக்கள் (கல் வெட்டுகளின் வகைகள், https://www.paavaitamil.com/2021/07/blog-post_29.html). இச்சிறப்புமிகுக் கல்வெட்டு இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அமைந்திருக்கும் தன்மையைப் பின்வருமாறு அறிவோம்.
கல்வெட்டு - இந்தியா
இந்தியாவில் 1700-க்கும் மேற்பட்ட மொழியைப் பேசும் மனித இனம் வாழ்ந்து வருகின்றது. எல்லா மொழிகளுக்கும் எழுத்து உண்டா என்றால் இல்லை என்ற விடையே உண்டு. பொ.ஆ. 1856 வாக்கில் கால்டுவெல் எனும் ஆய்வறிஞர் மொழிக்குடும்பம் பற்றி, குறிப்பாகத் திராவிடமொழிக் குடும்பம் (திராவிட மொழிக் குடும்பம், https://ta.wikipedia.org/s/3nv) பற்றி ஆராய்ந்தபொழுது திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள் என வகைப்படுத்திக் காட்டி இருக்கின்றார். இது மேற்கூறிய கூற்றிற்குப் பொருத்தம் உடையதாக அமைகின்றது.
இருப்பினும் இதுவரை ஓர் இலக்கம் கல்வெட்டிற்குமேல் கிடைத்துள்ளது என்கிறது விக்கிபீடியா. அதில் 60,000 மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டுப் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடுகின்றது (தமிழ்க் கல்வெட்டுகள், https://ta.wikipedia.org/s/b1vd).
கல்வெட்டியல் - தமிழ்நாடு
இத்தகுச் சிறப்புடையது தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு. இன்று வேண்டுமானால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கிப் போயிருக்கலாம். மாந்த இனத்தின் தொடக்கப்பகுதியே தமிழ்நாட்டுப் பகுதி என்ற கருத்தும் நிலவி வருகிறது. அண்மையில் கிடைக்கப்பெற்ற ஊச் எனும் பனி மனிதன் பேசிய மொழி தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது என்கிறது ஆய்வுகள் (ஓட்சி என்ற பனி மனிதன்!, http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=5224&id1=30&id2=3&issue=20160404). அலெக்சு கோலியர் எனும் ஆராய்ச்சியாளரும் உலகம் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ் என 1985ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளார் (https://www.youtube.com/watch?v=WRghF1pQccA).
இத்தகு சிறப்படைய தமிழ் மொழியின் இன்றைய வடிவம் பல்வேறு காலகட்ட மாறுதல்களின் செம்மையாக்கும் பெற்ற வடிவம் எனலாம். இவ்வடிவம் எதிர்காலத்தில் வேறொரு வடிவமாகவும் மாறலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். இங்குத் தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுக்கள் பற்றிக் கொஞ்சம் அறிவோம். தமிழ்நாடு முழுமையும் கல்வெட்டுக்களால் நிறைந்துள்ளன. எப்பகுதிக்குச் சென்றாலும் கல்வெட்டுக்களைக் காணலாம்.
களப்பணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வென்னல்கிரி வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயில், கோவை
யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் நடத்தும் கல்வெட்டியல் ஒரு வாரப் பயிற்சி வகுப்பிற்கு முன்பே களப்பணி மேற்கொள்ளப்பெற்றது. அதாவது, 18 செப்டம்பர் 2021 அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வென்னல்கிரி வெங்கட்ரமணப் பெருமாள் திருக்கோயிலில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. இக்களப்பணி குறித்து இங்கு விளக்கம் முற்படுகின்றேன். இக்கோயில் கோவை, காந்திபுரத்திலிருந்து வென்னல்கிரிப் பெருமாள் கோயிலுக்குச் செல்ல 26 கி.மீ. பயணிக்க வேண்டும். அதற்குரிய கூகுள் வரைபடம் வருமாறு;-
இந்தத் திருக்கோயில் கோவையிலிருந்து பூலுவப்பட்டி செல்லும் வழியில் பூலுவப்பட்டிக்கு முன்பு இடதுபுறம் ஒரு தார்ச்சாலை வடிவேலன்பாளையத்திற்குச் செல்லும். அந்தச் சாலை இறுதியாக மலை அடிவாரத்திற்குப் போகும். அதைக் காட்டும் கூகுள் வரைபடம் வருமாறு;-
மலை அடிவாரத்தில் சில மரங்கள் சூழக் கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலில் எல்லோரும் ஒன்று கூடிய பின்பு மேலே செல்வர்.
ஏனென்றால் அங்கு யானைகள், புலிகள் உலவுகின்றன. ஆனால் குறிப்பாகச் சனிக்கிழமை அங்கு விலங்குகள் வருவதில்லை என்கின்றனர். அங்குத் தொடர்ந்து பயணம் செய்வோர் குறிப்பிட்டனர். இருப்பினும் கவனமாகச் செல்வது நல்லது. ஏனென்றால் கடமானையே வேட்டையாடக் கூடிய புலி வாழும் பகுதி அது. கீழுள்ள கோயிலில் இருந்து மலைப் பகுதியில் உள்ள வென்னல்கிரி கோயிலுக்குச் செல்வதற்கு ஓர் ஒற்றையடிப் பாதை உள்ளது. அப்பாதையில் மழைக்காலம் இல்லாவிடின் எளிதில் பயணிக்கலாம். மழைக்காலம் எனில் கவனமாகச் செல்வது நல்லது. பாறைக் கற்களோடு ஒழுங்கற்ற நிலையிலும் அவ்வழி அமைந்திருக்கின்றது. அங்கு ஒரு நீரோடையும் உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அக்கோயிலை அடைவது என்பது சாத்தியமான ஒன்று கிடையாது. அந்த ஒற்றையடிப் பாதையில் செல்ல மலையின் அடிப்பகுதி வரும். அங்குதான் மலையின் பாறைப்பகுதி தொடங்குகின்றது. அங்குப் படி பாறையின்மேல் செதுக்கப்பெற்றுள்ளது. அந்தப் படியின் வழியே ஏறிச் செல்லும் பொழுது வலது புறம் ஒரு கல்வெட்டினைப் பாறையில் காணலாம். அக்கல்வெட்டின் படம் வருமாறு:-
படம் - 1 : படிக்கட்டுக்கு அருகில் பாறையில் உள்ள கல்வெட்டு
கல்வெட்டினைத் தாண்டிச் செல்ல, வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் படம் வருமாறு:-
படம் - 2 : கோயிலின் முகப்பில் உள்ள தற்காலக் கல்வெட்டு
இக்கோயிலின் இடது புறம் படிக்கட்டு உள்ளது. அதன்மேல் ஏறிச் சென்றால் மேலே ஒரு கல்வெட்டு ஒன்று உள்ளது. அந்தப் படிக்கட்டில் மற்றொரு கல்வெட்டு ஒன்றினைப் பார்க்கலாம். அக்கல்வெட்டின் படம் வருமாறு’-
படம் - 3 : பாறைப் படிக்கட்டில் உள்ள கல்வெட்டு
இவ்விரண்டு கல்வெட்டுகளையும் ஆராய்வதற்காக பா. அருண்ராஜ் (கவுர விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) படியெடுத்தார். இக்கல்வெட்டு இருக்கும் தகவலை வழங்கியவர் மாணவர் சரண் சித்தார் (கணினித் தொழில்நுட்பவியல் துறை, ஸ்ரீ கிருஷ்ண ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை). அவரே எங்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றவராவார். வழியின் இயல்புகளையும் தந்து உதவியவர்.
இங்கு உள்ள கல்வெட்டு இடைக்காலக் கல்வெட்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அதன் எழுத்து அமைதி அவ்வாறு அமைந்துள்ளது. இக்கல்வெட்டை பா.அருண்ராஜ் அவர்களின் நண்பர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு அதில் உள்ள முதல் கல்வெட்டை (படம்-1) மட்டும் வாசிக்க முயற்சிக்கலாம்.
வரி 1 - … தச..ருசம
வரி 2 - சக்தி…ரு
வரி 3 - ததின…
வரி 4 - தசா…
வரி 5 - … துக
வரி 6 - …
வரி 7 - …
நிறைவாக…
கல்வெட்டு எழுத்துக்களை வாசிப்பது ஒரு தனிக்கலை. அதற்குத் தொடர் பயிற்சி மிகத்தேவை. இதனை மேற்கண்ட கல்வெட்டை வாசித்துப் பார்க்கும்பொழுது அறியமுடிகின்றது. இருப்பினும் ஒரு சில எழுத்துக்களை வாசித்துப் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியளிக்கின்றது.
துணைநின்றவை
நன்றிக்குரியோர்
சரண் சித்தார்த், மாணவர், கணினித் தொழில்நுட்பவியல், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர்.
முனைவர் பா. அருண்ராஜ், கௌரவ விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம்
பயிற்சிப் பட்டறைக் கல்வெட்டியல் - அறிக்கை
சத்தியராஜ் தங்கச்சாமி
பதிவுஎண் : IO1INS405
பயிற்சி நாட்கள் : 20 சூன் 2022 - 24 சூன் 2022
நேரடிக்களப் பயிற்சி நாள் : 10 சூலை 2022 (இடம் - திருச்செங்கோடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன