சனி, 27 அக்டோபர், 2018

பாலபோதினி 3


அஃறிணைப்பால்.-ஒன்றன்பால், பலவின்பாலென விரண்டும் அஃறிணைக்குரியவைகளாம். அஃறிணையில் ஆண் பெண் என்ற பகுப்பில்லை. ஆணாயிருந்தாலும் அல்லாததாயிருந்தாலும் ஒன்றைக் குறித்தால் ஒன்றன் பாலென்றும், மேற்பட்டவற்றைக் குறித்தாற் பலவின் பாலென்றுஞ் சொல்லப்படும்.
- ம். அது வந்தது - ஒன்றன்பால். 
அவை வந்தன - பலவின்பால்.

ஒருமை - பன்மை; எந்தத் திணையிலும் ஒருபொருளைக் குறிப்பது ஒருமையென்றும், மேற்பட்ட பொருளைக் குறிப்பது பன்மையென்றும் சொல்லப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாலிம் மூன்றும் ஒருமை. பலர்பால், பலவின்பால் இவ்விரண்டும் பன்மை.

இடம். -இடமாவது, சொற்கள் நிகழ்கின்ற ஸ்தானம். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.
சொல்லுபவன் தன்மையிடம்.
-ம். நான் வந்தேன்.
கேட்பவன் அதாவது முன்னிற்பவன் முன்னிலையிடம்.
- ம். நீ வந்தாய்.
பேசப்படும் பொருள் அதாவது யாரை, அல்லது எதைப்பற்றிப் பேசப்படுகிறதோ அப்பொருள் படர்க்கையிடம்.
- ம். அவன் வந்தான்; மரம் வளர்ந்த்து.

சொற்கள்.- பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனத் தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன