வியாழன், 25 அக்டோபர், 2018

பாலபோதினி 2

பாலபோதினி.

முதலாவது
சொல்லதிகாரம்.

சொல்.-சொல்லாவது, இருதிணையிலும், ஐந்துபாலிலும் உள்ள பொருள்களை மூன்றிடங்களிலும் நின்று விளக்குவதாம்.

திணை.-திணையென்றால் ஜாதி. அது உயர்திணை, அஃறிணையென இருவகைப்படும். உயர்திணை உயர்வாகிய ஜாதி. அஃறிணை = அல்+திணை, =அல்லாத ஜாதி. அதாவது தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவை.

உயர்திணை.-மக்கள், தேவர், நரகர் உயர்திணையாம். மக்கள் = மனிதர்கள்.

அஃறிணை.-அம்மக்கள் தேவர் நரகரையல்லாதவை உயிருள்ளவையா யிருந்தாலு மில்லாதவையா யிருந்தாலு மஃறிணையாம்.

பால்.-பாலென்பது, மேற்சொல்லிய உயர்திணை அஃறிணைப் பொருள்களின் பகுப்பு. அது ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும்.

உயர்திணைப்பால்.-ஆண்பால், பெண்பால், பலர்பால் என்ற மூன்றும் உயர்திணைக்குரியவைகளாம்.
  உ - ம்.   அவன் வந்தான் - ஆண்பால்.
        அவள் வந்தாள்  - பெண்பால்.
        அவர் வந்தார்     - பலர்பால்.
ஒரு ஆணைக் குறித்தால் அது ஆண்பாலென்றும், ஒரு பெண்ணைக் குறித்தால் அது பெண்பாலென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையல்லது பெண்ணைக்குறித்தால் அது பலர்பாலென்றுஞ் சொல்லப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன