வியாழன், 19 செப்டம்பர், 2013

கருத்துப் புலப்பாட்டு நிலையில் கொடிச்சி


-       த.சத்தியராஜ்
 
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.  அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி, குறப்பெண், குறமகளிர், குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர்அகர முதலிகளோ குறத்தி, கொடிச்சி, இடைச்சி முதலியப் பல்வேறு பொருள்கள் தந்து விளக்கம் அளித்துள்ளன.  எனவே, ஈண்டு கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைக் குறித்து வந்தனவா அல்லது இடைச்சி என்ற அளவில் நின்றனவா என இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றது.
அகரமுதலிகளில் கொடிச்சி
பதிப்பாசிரியர் வீ. சொக்கலிங்கம் அவா¢கள் சேந்தன் திவாகரம் பிங்கலம், சூடாமணி, கயாதரன் ஆகிய நிகண்டுகளின் பொருண்மைகளை ஆசிரிய நிகண்டுஎனும் தலைப்பின்கீழ்ப் பதிப்பித்துள்ளார். அதனுள், கொடிச்சி என்பதற்கு, சே. கொடிச்சியர், குறத்தியர், குறிஞ்சி நிலப்பெண்; பி: குறத்தியர், கொடிச்சியர், மறத்தியர்; சூ: குறத்தி, கொடிச்சி; க: கொடிச்சி, குறத்தி, தலைமகள்(ப.205) எனப் பொருளமைவுகள் உள்ளன. அடுத்து அகரமுதலிகள் தரப்பெற்றுள்ள பொருண்மைகள் எத்தன்மையில் உள்ளன எனக் கூறப்பெறுகின்றது.
கொடிச்சிஎன்பதற்கு அகராதிகள் பல்வேறு பொருண்மைகளைச் சுட்டியுள்ளன.  அவை வருமாறு: தமிழ் அகராதியில் (Tamil Laxicon), குறிஞ்சி நிலப்பெண் (Woman of the hilly tract); காமாட்சிப்புல் (cirtronella grass); கொடிறு (Jaws)  (ப.1134) என்பதாகவும்; நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழியகராதி, மதுரைத் தமிழ்ப் பேரகராதி, இலக்கியச் சொல்லகராதி, யாழ்ப்பாண அகராதி, மெய்யப்பன் தமிழ் அகராதி, தமிழ்ப்பேரகராதி, கழக அகராதி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்மொழியகராதி -- முதலியன, இடைச்சி, காவாட்டம்புல், சித்திரமூலம், புற்றாஞ்சோறு, குறிஞ்சி நிலத்துப் பெண், கொடுவேலி, காமாட்சிப்புல், கொடிறு, கன்னம், கொடிவேலி, குறத்தி, குறிஞ்சிப்பெண் என்பதாகவும்; பவானந்தா¢ தமிழ்ச்சொல்லகராதியில், குறத்தி, இடைச்சி (ப.163) என்பதாகவும்; நா¢மதாவின் தமிழ் அகராதியில், மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்துப்பெண் (Woman of the hilly tract) (ப. 311) என்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.
இதுகாறும், நிகண்டுகள் அளவில் கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைத்தான் குறித்து நின்றனவென்பது வெளிப்படை.  அதன்பின் தோற்றம் பெற்ற அகராதிகளில் சிற்சில குழப்பங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.  அவை, குறத்தி, இடைச்சி என்பதாகும்.  கொடிச்சி என்பதற்கு, நிலப்பொருண்மை அடிப்படையில் குறப்பெண்டிரைக் குறித்தனவா அல்லது இடைப்பெண்டிரைக் குறித்தனவா என்பது ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.  இதனை விளக்கும் பொருட்டு சங்கப் பாடல்களின் பொருளமைவுகள் உட்படுத்தப்பெற்றுள்ளன. 
அக இலக்கணங்களில் கொடிச்சி
தொல்காப்பியத்தில், ‘கொடிச்சி, இடைச்சிபற்றிய குறிப்புகள் இல்லை.  பின்பு தோன்றிய நம்பியகப்பொருள் விளக்கத்துள், அச்சொல்லாட்சியைக் காணமுடிகின்றது.  உரையாசிரியர் காரகோவிந்தசாமி முதலியார் அவர்கள் நம்பியகப்பொருளில், குறிஞ்சி நிலக்கருப்பொருள் பற்றிக் குறிப்பிடுகையில்,
குறத்தி கொடிச்சி குறவர் கானவர்
குறத்தியர்                                                                  
என்பதாகக்(ப.19) குறிப்பிட்டுள்ளார்இதனுள், ‘குறத்தி, கொடிச்சி, குறத்தியர்ஆகிய சொல்லாட்சிகள் இடம்பெற்றுள்ளன.  இச்சொல்லாட்சிகள் வெவ்வேறு பொருண்மைகளைத் தந்துள்ளன.  இருப்பினும் அவை, குறிஞ்சிநிலவாழ்த் தலைவியைக் குறித்து வந்துள்ளது.  மேலும், முல்லைக் கருப்பொருள் பற்றி குறிப்பிடுகையில்,
                        இடையர் இடைச்சியர் ஆயர் ஆய்ச்சியர்                 
என்பதாகக் (ப.21) குறிப்பிட்டுள்ளார்இதனுள், ‘இடைச்சிமுல்லைநிலவாழ்த் தலைவியைக் குறித்தது.  இவ்விரு சான்றுகளும் ஈண்டு நோக்கத்தக்கவை.  சங்க இலக்கியங்களுக்குப்பின் தோன்றிய அக இலக்கணத்தில் இடைச்சி, கொடிச்சிஆகியன வெவ்வேறு பொருண்மையுடைத்து என்றது.  அதன்பின் அகராதிகள், ‘குறத்தி, இடைச்சிஆகியன ஒரு பொருண்மையுடைத்து என்றமையால் ஆய்விற்குரியதாக அமைகின்றது.
சங்கப்பாடல்களில் கொடிச்சி
கொடிச்சி என்பதற்கு அகராதிகள் தரும் பொருண்மைகளுள் குறத்தி, இடைச்சிஎன்பவை ஒருநிலைத் தன்மை வாய்ந்தவை.  பிற பொருண்மைகள் தன்மை நோக்கில் பிறிதொரு வகைப்பாட்டிற்குரியவை; பிற்கால வழக்கிற்குரியவை.  எனவே, அவை ஈண்டு ஆய்விற்கு உட்படுத்தப் பெறவில்லை.  மாறாக, ‘குறத்தி, இடைச்சிஎன்னும் இரு சொல்லாட்சிகள் மட்டுமே ஈண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் பெறுகின்றன.  கொடிச்சிஎன்பதற்குச் சரியான பொருண்மையைச் சங்கப்பாடல்கள் வழி ஈண்டு தெளிவுபடுத்தப் பெறுவதாக அமைகின்றது.
 ‘கொடிச்சிஎனும் சொல்லாட்சி சங்கப்பாடல்களில் முப்பது இடங்களில் அமைந்துள்ளது, அவற்றுள் குறுந்தொகையில் ஆறு இடங்களிலும், நற்றிணையில் பத்து இடங்களிலும், ஐங்குறுநூற்றில் பன்னிரு இடங்களிலும், அகநானூற்றில் இரண்டு இடங்களிலும் சுட்டப் பெற்றுள்ளன. அவற்றைப் பின்வருமாறு பாகுபடுத்தி விளக்கப்பெறுகின்றது.
Ø  நற்றிணையில் கொடிச்சி
Ø  குறுந்தொகையில் கொடிச்சி
Ø  ஐங்குறுநூற்றில் கொடிச்சி
Ø  அகநானூற்றில் கொடிச்சி
நற்றிணையில் கொடிச்சி
நற்றிணையில் பத்துப் பாடல்களில் (22:1, 82:2, 85:9, 95:8--9, 134:4, 204:11, 276:4, 306:3, 373:3, 379:5)  ‘கொடிச்சிஎனும் சொல்லாட்சி காணப்பெறுகின்றது.  அப்பத்துப் பாடல்களிலும் கொடிச்சி என்பதற்கு கொடிச்சிஎன்றே பொருண்மை கொள்கின்றார் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்குறிஞ்சிநிலப்பெண் என்றோ அல்லது குறமகள், குறத்தி என்றோ சுட்டப்பெறவில்லை.  குறிஞ்சிநிலப் பாடல்களில் இவை அமைந்துள்ளமையாலும் கொடிச்சி எனப்பட்டுள்ளது.  ஆதலின், குறிஞ்சி நிலத்தலைமகளைச் சுட்டிற்று எனலாம்.  சான்றாக,
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை   (நற். 22:1)
எனும் அடிக்கு உரையாசிரிர் பின்னத்தூரார் தரும் விளக்கமாவது, மலைப்பக்கத்திற் கொடிச்சியாற் காக்கப்படும் பசிய தினைப்பயிரில் முதலிலே பறித்து முற்றிய பெருங்கதிர்களைக் கொய்து கொண்ட மந்தி (ப. 27) என்பதாகும்.  இதனுள் குறிஞ்சிநிலப் பொருண்மையே காணப்பெறுகின்றது.  மேலும்,
குறவர் மகளிரேம்; குன்றுகெழு கொடிச்சியேம் (நற். 276:4)
எனும் பாடலடிக்கு பதிப்பாசிரிர் இரா. சாரங்கபாணி சுட்டும் விளக்கமாவது, யாம் குறவர் மகளிரேம்; குன்றுகெழு கொடிச்சியேம்; எம்மூர் இம்மலையினகத்து: நீ நின் ஊர் செல்லாது எம்மூரை யடைந்து கள்மாந்தி வேங்கை மூன்றிலிற் குரவையும் கண்டு செல்வாயாக எனத்தோழி தலைவனிடம் கூறினாள் (சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம் 2, ப. 52) என்பதாகும்.  இவ்விளக்கமும் நிலப்பொருண்மையைச் சுட்டுபவையாகும்.
குறுந்தொகையில் கொடிச்சி
கொடிச்சிஎன்பதற்குக் குறுந்தொகையில் இரு பாடலடிகளில் (286:4, 335:7) ‘குறிஞ்சிநிலமகள்என்பதாகவும்,மூன்று பாடலடிகளில் (214:3,272:8, 291:2) ‘தலைவிஎன்பதாகவும், 360:6ஆவது பாடலடியில் குறமகள்என்பதாகவும் பொருளுரைப்பதாக உ.வே.சா. குறிப்பிடுவார்.  ஈண்டு அனைத்துப் பொருண்மைகளும் குறிஞ்சிநிலத் தலைமகளைக் குறித்தே நிற்கின்றன. சான்றாக,
உண்கிளி  கடியும் கொடிச்சிகைக் குளிரே           (குறுந். 360:6)
எனும் பாடலடிக்கு உரையாசிரிர் உ.வே.சா. தரும் விளக்கமாவது,குறமகளின் கையிலுள்ள குளிரென்னும் கருவி (ப. 832) என்பதாகும்.  இப்பொருண்மை குறிஞ்சி நிலமகளைக் குறித்தே நின்றது என்பது  வௌ¢ளிடை மலையாம்.
ஐங்குறுநூற்றில் கொடிச்சி
ஐங்குறுநூற்றில் கொடிச்சிஎனும் சொல்லாட்சி பன்னிரண்டு (256:3, 258:2, 260:2, 281:3, 282:2, 288:3, 289:1, 290:3, 296:1, 298:2, 293:3, 300:1) இடங்களில் காணப்பெறுகின்றது.  இதனுள் கொடிச்சி பிற பொருண்மைகளில் அமையாமல் குறிஞ்சிநிலத் தலைவியைக் குறித்து அமைகின்றது.  பன்னிரண்டு பாடல்களில் குறத்தி, குறிஞ்சி நிலத்தலைவிஎன்றாயிரு பொருண்மைகளில் மூன்று பாடலடிகளும் (256:2, 258:2, 296:1), ‘தலைவிஎன்ற பொருண்மையில் இரு பாடலடிகளும் (281:3, 288:3),’கொடிச்சிஎன்ற பொருண்மையில் ஏழு பாடலடிகளும் (260:2, 282:2, 289:1, 290:3, 298:2, 299:3, 300:1) அமைந்துள்ளன.  சான்றாக,
       மெல்இயல் கொடிச்சி காப்ப           (ஐங். 288:30)
எனும் பாடலடிக்கு உரையாசிரிர் உ.வே.சா. தரும் விளக்கமாவது, கிளிகள் புனத்தின்கண் படியா நின்றனவென்று தலைவியைக் காக்க ஏவியவழி அதனையறிந்த தலைமகள் உவந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது (ப. 129) என்பதாகும்.  அவா¢, அவ்விளக்கத்தில் கொடிச்சி, குறத்தி, குறிஞ்சிநிலத்தலைவிஆகியப் பொருண்மைகளில் சுட்டவில்லை.  மாறாகத் தலைவி என்றே சுட்டியுள்ளார்.  இப்பாடலடி குறிஞ்சித் திணைக்கு உரித்தலால் அந்நிலத் தலைவியைக் குறித்தது எனலாம்.
அகநானூற்றில் கொடிச்சி
அகநானூறு 102:5, 132:7 ஆகிய இரு பாடலடிகளில் கொடிச்சி காணப்பெறுகின்றது.  இவ்விடத்தும் கொடிச்சிஎன்பதாகவே ந.மு. வேந்கடசாமி நாட்டார் பொருள் கொள்கின்றார். சான்றாக,
ஒல்குஇயற் கொடிச்சியை நல்கினை ஆயினும்    (அகநா. 132:7)
எனும் பாடலடிக்கு உரையாசிரியார் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தரும் விளக்கமாவது, கொடிச்சியுமாகிய இவளை அருள் செய்தாய் ஆயின் (மணிமிடை பவளம், ப. 278) என்பதாகும்.
   மேற்கூறப்பெற்ற கருத்துப்புலப்பாடுகளின் வழி கொடிச்சிஎன்பதற்கு, சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த குறமகளைக் குறித்தது.  ஆனால் அகராதிகள், ‘இடைச்சிஎன்பதனையும், பிற்கால வழக்கிற்குரிகாவாட்டம்புல், கொடிறு, புற்றாஞ்சோறு, கொடுவேலி, காமாட்சிப்புல், கன்னம், கொடிவேலிஎன்பவைகளையும் சுட்டுகின்றன.  இவை சங்க இலக்கிய உரைகளில் காணப்படவில்லை.  எனவே, கொடிச்சி என்பதற்குக் குறவர் குலப்பெண் என்பதே சரியானப் பொருண்மையாக அமையும் எனலாம்.  இதை உறுதிப்படுத்தும் முகமாக ஞ.தேவநேயப் பாவாணரின் கருத்தாக்கம் அமைந்துள்ளது. அக்கருத்தாவது, ஆடவன் பெண்டு ஆகிய இருபாலருள், பெண்டு மிகமெல்லிய ளாதலின், கொடி எனப்படுவாள், இதனாலேயே,குறிஞ்சி நிலப்பெண்டிற்குக் கொடிச்சி என்று பெயர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், ப.4) என்பதாகும். 
துணைநின்றவை
1.     இராமநாதன், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்மொழியகராதி ,----...........,     1991 (ம.ப.).
2.     கதிரைவேற்பிள்ளை நா., தமிழ்மொழியகராதி, ஆசியன் கல்வியியல் (Asian  Educational  Services), புதிய தில்லி, 1984 (இ.ப.).
3.     கழகத்தார், கழகத்தமிழகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1997 (13 ஆம் ப.).
4.     குமாரசாமி பிள்ளை, இலக்கியச் சொல்லகராதி, பயோனியர் புத்தக நிலையம், சென்னை, 1985 (ம.ப.).
5.     கோபால கிருஷ்ணக்கோன் (பதிப்.), தமிழ்ப்பேரகராதி -.........,
6.     சண்முகப்பிள்ளை மு. (பதிப்.), தொல்காப்பியம் பொருளதிகாரம், முல்லை நிலையம், சென்னை, 2006 (மு.ப.).
7.     சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப்பிள்ளை, யாழ்ப்பாண அகராதி, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 1342 (மு.ப.), 2005 (ம.ப.).
8.     சந்தியா நடராஜன் (பதிப்.), மதுரைத் தமிழ்ப் பேரகராதி, சந்தியா பதிப்பகம் சென்னை, திச. 2004.
9.     சாரங்கபாணி இரா. (பதிப்.), சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2003 (மு.ப.).
10.  சாமிநாதையர் உ.வே. (உரை.), குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1947 (ம.ப.).
11.  சாமிநாதையர் உ.வே. (உரை.), ஐங்குறுநூறு, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1944 (ம.ப.).
12.  சுப்பிரமணியன் ச.வே. (பதிப்.), செவ்வியல் இலக்கியங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2006 (மு.ப.).
13.  சுப்பிரமணியன் ச.வே. (பதிப்.), மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, திச.2006 (மு.ப.).
14.  சொக்கலிங்கம் வீ. (பதிப்.), ஆசிரிய நிகண்டு, தஞ்சை சரசுவதிமகால் நூல் நிலையம், தஞ்சாவூர், 1975.
15.  நக்கீரன் அ. (பதிப்.), பாவாணர் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2008 (ம.ப.).
16.  நாராயணசாமி ஐயர் பின்னத்தூர் அ. (உரை.), நற்றிணை மூலமும் உரையும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1952.
17.  பவானந்தம் பிள்ளை (தொகுப்பு.), பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி, NCBH, சென்னை, 2003.
18.  மாதையன் பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2003 (ம.ப.).
19.  மாருதிதாசன் (தொகுப்.), நா¢மதா தமிழகராதி, ர்மதா பதிப்பகம், சென்னை, 2002 (மு.ப).
20.  வேங்கடசாமி நாட்டார் ந.மு. (உரை), அகநானூறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, சன.1946.
21.  ..............,.........Tamil Lexicon, vol II, 1927.

(இக்கட்டுரை திசம்பர் 2011, அன்று செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியும் (திருச்செங்கோடு) ஆர் அனைத்திந்திய கழகத்தாராலும் நிகழ்த்தப் பெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரையாகும். இது வஞ்சி எனும் தொகுப்பு நூலில் 343ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன