செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்

காலந்தோறும் பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றி இலக்கியங்களை ஆய்வு செய்யும் வேளையில், அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கும் மாணாக்கர்க்கும் ஆய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, காணவேண்டிய நுட்பங்களைக் குறித்து அறிவுறுத்திச் செல்ல வேண்டியதும் தேவையான ஒன்றாகின்றது. அவ்வகையில், பழந்தமிழிலக்கிய ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை முன்வைப்பதாக இவ்வுரை அமைகின்றது.
(இக்கட்டுரையைப் படங்களுடன் வாசிக்க கையாவண நூல் (PDF) பார்க்கவும்)

நுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்

அறிமுகம்
பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.

வெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர் வாழ்வும் வரலாறும்

தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தனை வகை எண்ணிக்கைகளான இலக்கியங்கள்தான் உண்டு அல்லது படைக்கப்பட்டுள்ளதென அறுதியிட்டு வரையறுக்க இயலாது. இருப்பினும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைத்த போதிலும் அவற்றைக் கையிற்கிடைத்த, அழிந்து போன நூல்களென இருவகையாகப் பிரிக்கலாம். அதிலும் சுவடி வாயிலாகவே பெரும்வாரியான   இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை பாதுகாக்கப்படாததன் நிமித்தம் பல இலக்கியங்கள் மறைவு தினத்தைச் சூட்டிக்கொண்டன. இன்றும் சங்க இலக்கிய நூல்கள் உருப்பெற்று நம் கரங்களில் நிலைப்பதற்கு முழுமுதற்காரணம் உ.வே.சா எனினும் அது மிகையாகா. சி.வை.தா. போன்ற   ஆளுமைகளின் தளராது சோர்ந்துபோகாது  இடைவிடாது முயன்றதன் விளைவால் சங்க இலக்கியங்கள் தத்தம் பிறந்த தினத்தைத் தக்க வைத்துக் கொண்டன.  1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இலக்கியங்களைத் தனியொருவனாகத் தேடி அலைந்து சேகரித்த நிலைப்பாடுகளை ‘என் சரித்திரத்தில்’ படிக்கும்போது உ.வே.சா. தமிழ்மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்ட உன்னதமான அன்பிற்கு ஈடுயிணை ஏதுமில்லை என்பதை உணர முடிந்தது.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

செவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]

தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற போரியல் நடவடிக்கைகளன்றிப் பண்பாட்டுப் படையெடுப்புகளும் மிகுதியாக நிகழ்ந்துள்ளன. வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், வேளாண் சமூகம், நிலவுடைமைச் சமூகம், வாரிசு சொத்துரிமைச் சமூகம், அரசுருவாக்கம் என்ற சமூகப் படிநிலை வளர்ச்சியினை ஆங்காங்குச் சங்க இலக்கியங்கள் பரவலாகச் சுட்டிச் செல்கின்றன. தமிழ்ச் செவ்வியல் நூல்களில் சிலவற்றில் மட்டுமே கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபு [school of thought] காணப்பெறுகின்றன எனக் கருத இடமுண்டு. ஏனைய பல செவ்வியல் தொகுப்புப் பனுவல்களில் கூட்டுப் புலமைத்துவ சிந்தனை மரபற்ற இனக்குழுக்களின் வாழ்நிலை விழுமியங்கள் தனித்து அடையாளப் படுத்தப் பெற்றுள்ளன. அரிய சில இனக்குழுக்களின் பல பண்பாட்டு அசைவுகள் ஆய்வாளர்களால் வெளிக்கொண்டு வரப்பெறாமல் சங்க இலக்கியங்களை ஒரே வெற்றுத்தளத்தில் வைத்து நோக்கி ஆய்வு செய்து வருவதென்பது தமிழியல் ஆய்வுக்குறை. மூலநூலான தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்ற சொற்பயன்பாடுகள், வழக்காறுகள், பொருள்கொள்ளல் முறைமைகள், தொல் சடங்குமுறைகள், பண்பாட்டுக் கூறுகள் பல செவ்வியல் பிரதிகளில் காணப்பெறாமல் விடுபட்டமை அல்லது காலவட்டத்தில் திரிக்கப் பெற்றமை இதற்குத் தக்க சான்று. குறிப்பிட்ட பனுவல் புனையப்பெற்ற காலத்திற்கும் அப்பனுவலுக்கு உரையெழுந்த காலக்கட்டத்திற்கும் உண்டான சமூகவியல் வேறுபாடறியாமல் ஆய்வுகளை நகர்த்திச் செல்லும் சில ஆய்வாளர்களால் சில தவறான வரலாற்றுக் கருத்துகள் முன்வைத்துச் செல்லப் பெறுகின்றன. இவ்வகையில் பரத்தை, பரத்தமை, காமக்கிழத்தி என்ற சொல்லாடல்கள் குறித்த சமூக வரலாற்றுப் பார்வையினை இலக்கண, இலக்கியப் பதிவுகள் வழி ஆய்வு செய்யும் முகமாக இக்கருத்துரை அமைகின்றது.


திங்கள், 25 செப்டம்பர், 2017

இலக்கணவியல் உரையரங்கம்

   இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி - மொழித்துறை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இனைந்து நடத்திய இலக்கணவியல் வரையறைகளும் உள்வாங்கல்களும் எனும் பொருண்மையிலான உரையரங்கம் 25.09.2017 (திங்கட்கிழமை) அன்று கல்லூரியின் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கு.மா.சின்னதுரை அவர்கள் தலைமையேற்றுத்  தலைமையுரையாற்றினார். மொழித்துறைத் தலைவர் பேரா..திலிப்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து பேரா.கி.அரங்கன், முனைவர் இரா.இராஜா, முனைவர் மா.பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு இலக்கணவியல் மீக்கோட்பாட்டுச் சிந்தனைகள் தமிழிலக்கணங்களில் ஊடாடியிருக்கும் தன்மைகள் குறித்து ஆய்வுரை வழங்கினர். இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களிலிருந்து கலந்து கொண்டு பயனடைந்த முதுகலை மாணவர்களும், ஆய்வியல் நிறைஞர், முனைவர்பட்ட ஆய்வாளர்களும் பயனுரை வழங்கினர். முன்னதாக மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் .அன்புச்செல்வி (தொடக்கவிழாவில்), பேராசிரியர் முனைவர் பொ.ஜெயப்பிரகாசம் (நிறைவுவிழாவில்) ஆகியோர் வரவேற்க உரையரங்க ஒருக்கிணைப்பாளர் முனைவர் த.சத்தியராசு நிறைவாக நன்றி கூறினார்.