சனி, 3 ஜனவரி, 2015

எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

                                                                                                                                    முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
                                                                                                                                                   தமிழ் – உதவிப் பேராசிரியர்
                                                                                                                                     இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி
                                                                                                                                            கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.

கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
 தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
 வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
 எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.

வியாழன், 25 டிசம்பர், 2014

தமிழும் அதன் இலக்கண நூல்களும்


முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9600370671

தமிழ் தமிழர்களினது தாய்மொழியாம். இது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது. ம்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, ரீயூனியன், திரினிடாட்டு போன்ற நாடுகளில் குறைவாகவும் பேசப்படுகிறது.
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் ஏறத்தாழ ஓரிலக்கக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தொல்லெழுத்துப் பதிவுகளில் அறுபதினாயிரத்திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ தொன்னூற்றைந்து விழுக்காடு தமிழில் உள்ளன. பிற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் [பிரதி பண்ணுவது] மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. இச்சிறப்புமிகு மொழியில் உள்ள இலக்கணங்களைப் பட்டியலாகத் தொகுத்துத் தருகின்றது இக்கட்டுரை.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு


                                                                                         - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

வியாழன், 13 நவம்பர், 2014

Gnana Sambandha Upaathiyaayar (20th Cent.)


Birth Place  : SuLipuram in ILa Naadu; was lived in Thirunelveli.

Father   :   Selvanaayaka Chettiyaar; Saivar

      He was a scholar of Arumuganaavalar; good at learning the works of Kanthapuranam; Periyapuranam and instructed it to others. Moreover, he was a great orator and poet.

Works  : Maa Nikka piLLaiyaar Thiruvarutpaa, Kathirkaamavelar Thiruvarutpaa, Unique songs (Thanip paadal).

Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

சனி, 8 நவம்பர், 2014

ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

                                                - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)

அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.