வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வழக்கிழந்த நாணயப் பயன்பாடு


காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா.
    பைசா செம்பினாலும், அணாவும் ரூபாவும், வெள்ளியினாலும், வேறொரு கலப்பு லோகத்தினாலும் செய்யப்படுகின்றன.
       பொன்னினாலும் செய்யப்படுகிற நாணயங்களும் உண்டு -  பாலபாடம் 30ஆம் பாடம்(1950,1959:19-20)


காலணாவுக்கு மூன்று பைசா
அரையாணாவுக்கு ஆறு பைசா
முக்கலாணாவுக்கு ஒன்பது பைசா
ஒரு அணாவுக்கு பன்னிரண்டு பைசா
கால் ரூபாவுக்கு நான்கு அணா
அரை ரூபாவுக்கு எட்டு அணா
முக்கால் ரூபாவுக்கு பன்னிரண்டு அணா
ஒரு ரூபாவுக்கு பதினாறு அணா
இந்த நாணயமாற்று இப்போது வழக்கிலில்லை. இப்போதுள்ளது ஒரு ரூபாவுக்கு நூறு பைசா - பாலபாடம் 30ஆம் பாடம்(2003:30)



வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ஒப்பீட்டியலில் எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும்


            கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) தோற்றம் பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். இவ்விருவரின் நூல்களில் அமைந்துள்ள முதல் இயல்கள் முறையே எழுத்தாக்கமரபும் சஞ்ஞாபரிச்சேதமும் ஆகும். இவ்விரு இயல்களில் அமைந்துள்ள கருத்தியல்களை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
            சுவாமிநாத எழுத்தாக்கமரபில் 10 நூற்பாக்களும் பாலவியாகரண சஞ்ஞா பரிச்சேத்தில் 23 நூற்பாக்களும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு இயல்களில் அமையப் பெற்ற கருத்தியல்களை 11 நிலைகளில் விளக்கலாம். அவை:1. புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, 2. எழுத்துக்களின் பொதுமரபு, 3. எழுத்துக்களின் அறிமுகம், 4. பிறப்புமுறை, 5. புணர்ச்சி, 6. சார்பெழுத்து, 7. வரிவடிவமும் மாத்திரையும், 8. மொழிமுதல், இறுதி, இடை நிலைகள், 9. பிந்து, 10. சொல்வகை, 11. வழு – ஏற்றல் என்பன. இவற்றுள் முதலாவது சுவாமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் சுட்டும் புறக்கட்டமைப்புநிலைச் சிந்தனையாவது:
            ...
            செப்பெழுத்துச் சொற்பொருள்யாப்பு அலங்காரம் எனும் ஐந்
            தமிழ்தின் இலக் கணவிரிவை ஒவ்வொரு மூன்று இயலாய்
            அடக்கிமொழி குவன்; சுவாமி நாதம் இந்நூற் பெயரே(1)
என்பதாகும். இச்சிந்தனை அந்நூலில் உள்ள அதிகாரம், இயல்கள், நூலின் பெயர் ஆகியவற்றைத் தெளிவாக்குகிறது. இச்சிந்தனை சின்னயசூரியிடம் காணப்பெறாமைக்குக் காரணம் முன் நூலாரிடம் இது குறித்த சிந்தனை காணப்படாமையேயாகும். ஏனெனில், சாமிகவிராயர், வீரசோழியர்(கி.பி.11), ஈசான தேசிகர்(கி.பி.17) ஆகியோரைப் பின்பற்றியே சுட்டியுள்ளார் எனத் தெரிகின்றது.
            இரண்டாவது (எழுத்துக்களின் பொதுமரபு), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. சுவாமிநாதம் எழுத்துக்களை ஆராயும் முறை, எழுத்தின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் என்பனவற்றை விளக்குகிறது. இருப்பினும் அப்பொது மரபில் உள்ள இனம் குறித்த சிந்தனை மட்டும் பாலவியாகரணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அச்சிந்தையாவது க,ச,ட,த,ப ஆகியன கடினமானவை (பருசம்); க3, ஜ1, ட3, த3, ப3 ஆகியன எளிமையானவை (சரளம்): ஏனையவை இடையினம் (இசுத்திரம்) என்பனவாகும்.
            மூன்றாவது (எழுத்துக்களின் அறிமுகம்), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. சாமிகவிராயர், இறைவணக்கம், நூலின் பறக்கட்டமைப்புநிலைச் சிந்தனை, நூற்பெயர், எழுத்துக் களை ஆராயும் முறை, எழுத்துக்களின் பொது விளக்கம், எழுத்துக்களின் பெயர் ஆகியனவற்றைத் தொடர்ந்து எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றார். ஆனால் சின்னயசூரி நேரிடையாக எழுத்துக்களின் அறிமுகத்தை வைத்துவிடுகிறார். அவ்வறிமுகம் வேறுபட்டே நிற்கின்றது. ஏனெனின் சுவாமிநாதம்,
            அகராதி யீராறும் உயிர், ககராதிகள் மூவாறும் உடல்; இம்
            முப்பானு(ம்) முதலெலுத்தாம்...`                                       (3)
எனக் கூறி நிற்க, பாலவியாகரணம்
             ஸம்ஸ்க்ரு1தமுநகு வர்ணமு லேப3தி3                     (1)
            ப்ராக்ரு1தமுநகு வர்ணமுலு நலுவதி3                     (2)
            தெலுகு3நகு வர்ணமுலு முப்பதி3யாறு                    (3)
எனக்கூறி நிற்கின்றது. தெலுங்கு எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்யாமல் சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள் ஆகியனவற்றை அறிமுகம் செய்துவிட்டுப் பின்பு தெலுங்கு எழுத்துக்களை அறிமுகம் செய்கின்றது. இது ஒரு சிறந்த முறை எனலாம். ஏனெனின் தெலுங்கு சமசுக்கிருத, பிராக்கிருத எழுத்துக்கள், சொற்கள் ஆகியனவற்றைக் கடன் வாங்குவதால் இவ்வித விளக்கமுறை சிறப்பினதே.
            நான்காவது(பிறப்புமுறை), இருநூலாரிடத்தும் காணலாகின்றது. இச்சிந்தனை ஒருமித்துக் காணப்பட்டாலும், விளக்குமுறையில் வேறுபட்டே நிற்கிறது. சுவாமிநாதம் உயிர், மெய், சார்பு ஆகிய எழுத்துக்கள் எவ்விதம் பிறக்கின்றன என நிரலாக விளக்கிச் செல்கிறது. ஆனால், பாலவியாகரணம் ச், ஜ் ஆகிய இரு மெய்யெழுத்துக்களுக்கு மட்டும் பிறப்புமுறையைத் தருகிறது. அம்முறை மாறுபாட்டுடன் உள்ளது. அம்மாறுபாடாவது ச, ஜ எழுத்துக்கள் சம எழுத்துக்களாக இருக்கும்போது, பல்லொலிகளாகவும் அண்ணவொலிகளாகவும் வரும்; இ, ஈ, எ, ஏ ஆகியவற்றுடன் இணையும்போது அண்ணவொலிகளாகவும் (தாலவியம்); அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியவற்றுடன் இணையும்போது பல்லொலிகளாகவும் (தந்தியம்) வரும்; சமசுகிருதத்திற்கு இணையான இகர ஈற்றுச் சொற்களில் ச, ஜ ஆகியன பன்மையாக வரும்போது அண்ணவொலியாக வரும் என்பனவாகும். இத்தன்மை தமிழில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
            ஐந்தாவது(புணர்ச்சி), இருநூலாரிடத்தும் தென்படுகிறது. இதனைச் சாமிகவிராயர் இறுதியாக விளக்குகிறார். அவ்விளக்கம் எழுத்து நிலைக்குரியதென்பது (மெய்ம்மயக்கம், பொலி, சாரியை) குறிப்பிடத்தக்கது.
            ஆறாவது(சார்பெழுத்து) சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. ஏனெனில், சின்னயசூரி எழுத்துக்களை உயிர்(அச்சு), மெய்(அல்லு) என்பதாக மட்டும் வகைப்படுத்திச் செல்வதால் அத்தன்மை ஈண்டு இல்லை எனலாம்.
            ஏழாவது(வரிவடிவமும் மாத்திரையும்), சுவமிநாதத்தில் உண்டு; பாலவியாகரணத்தில் இல்லை. இத்தன்மை சுவாமிநாதத்தில் இடம்பெறுவதற்குக் காரணம் தமிழ் மரபிலக்கணங்கள் எழுத்துக்களைப் பெயர், எண், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், இடை, இறுதிநிலைகள், போலி, பதம், புணர்ப்பு எனப் பன்னிரு நிலைகளாகப் பாகுபடுத்தி விளக்கக் கூடிய போக்கைக் கொண்டிருப்பதே. தெலுங்கு மரபிலக்கணங்களில் இத்தன்மை இல்லைபோலும்; அதனால் சின்னயசூரி விளக்கவில்லை எனலாம்.
            எட்டாவது(மொழிமுதல், இடை, இறுதிநிலைகள்), சுவாமிநாதத்தில் முழுமையுடனும், பாலவியாகரணத்தில் முதலி வாராச்(ய, வு, வூ, வொ,வோ) சொற்கள் என்பதாகவும் இடம்பெற்றுள்ளது.
            ஒன்பதாவது(பிந்து), தமிழில் இல்லை; தெலுங்கில் உண்டு. ஏனெனின் சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைத் தழுவித் தெலுங்கு இலக்கணங்கள் ஆக்கப்படுவதால் இது குறித்த சிந்தனைப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
            பத்தாவது(சொல்வகை), சுவாமிநாதத்தில் இல்லை. பாலவியாகரணத்தில் உண்டு. சுவாமிநாதம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனத் தனித்தனி அதிகாரப் பகுப்புடையது. எனவே, சொற்களின் வகைகளைச் சொல்லதிகாரப் பகுதியில் வைத்து விளக்குகிறது. பாலவியாகரணம் எழுத்து, சொல் என்றாயிரு கருத்தியல்களைப் பொதுமையாக விளக்கிச் செல்ல முற்படுவதால் சொற்களின் வகையினை நான்கு சூத்திரங்களில் விளக்கிச் செல்கிறது. தமிழில் சொற்களின் வகை என்பது பெயர், வினை, இடை, உரி என அமைந்துள்ளது. தெலுங்கில் தற்சமம், தற்பவம், தேசிகம், கிராமியம் என் அமைந்திருக்கிறது.
            பதினோராவது(வழு – ஏற்றல்), சொல் வகையுடன் தொடர்புடையது. இத்தன்மை பாலவியாகரணத்தில் உண்டு; சுவாமிநாதத்தில் (சொல்லதிகாரத்தில் உண்டு) இல்லை.
            மேற்குறித்த கருத்தியல்களின்வழி ஒப்பும் வேறுபாடும் காணப்படுவதைக் கீழ்வரும் வரைகோடு சுட்டிக்காட்டும்.
ஒப்பீட்டுக் கருத்தியல்கள்

            சுவாமிநாதம்                                                        பாலவியாகரணம்

எழுத்தாக்கமரபு                                                                                   சஞ்ஞாபரிச்சேதம்
1.     புறக்கட்டமிப்புநிலைச் சிந்தனை                                               1. எழுத்துக்களின் அறிமுகம்
2.     எழுத்துக்களின் பொதுமரபு                                                         2. எழுத்துக்களின் இனம்
3.     எழுத்துக்களின் அறிமுகம்                                                            3. பிறப்புமுறை
4.     பிறப்புமுறை                                                                                  4. புணர்ச்சி
5.     சார்பெழுத்துக்களின் விளக்கம்                                                   5. பிந்து
6.     வரிவடிவமும் மாத்திரையும்                                                       6. முதலில்வாரா
7.     மொழிமுதல், இடை, இறுதிநிலை                                             7. சொற்களின் வகை
8.     புணர்ச்சி(மெய்ம்மயக்கம், பொலி, சாரியை)                            8. வழு – ஏற்றல்
தெலுங்கில் பிந்து என்பது வட்டத்தைக் குறிக்கும். இவ்வட்டம் அரை, முழு என்ற இரு வடிவங்களில் காணப்பெறுகின்றது. இவ்வட்டங்கள் மெல்லினங்களுக்குப் பதிலாக வருவனவாகும். எ-டு. த3o(ண்)ட.


துணைநின்றவை
தமிழ்
1.     சண்முகம் செ.வை.(பதி), 1995, சுவமிநாதம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2.     சாவித்ரி சி.(மொ.ஆ.), பாலவியாகரணம்(பதிப்பிக்கப் பெறாத ஏடு).
தெலுங்கு
3.     உமா பி., பாலவியாகரணமு, பரவசத்து சின்னய்சூரி பிரணிதமு தீபிக வியாக்கிய சகிதமு, புல்லூரி உமே ராசதானி களாசல, மதராசு.
4.     பரவத்து சின்னயசூரி, 1994, பலவியாகரணமு, பாலசரசுவதி புத்தகாலயம், மதராசு.
(இக்கட்டுரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக இந்திய மொழிகள் பள்ளியின் மேனாள் துறைத்தலைவரின் (முனைவர் வே.சா. அருள்ராஜ்) மணிவிழாக் கருத்தரங்(2013)கில் வாசிக்கப் பெற்று, அக்கருத்தரங்க ஏட்டில் இடம்பெற்றுள்ளது. இங்குச் சில திருத்தங்களுடன் தரப்பெறுகிறது)

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

அன்பின் வெளிப்பாடு

கண்களில் தோன்றி
களவிலே தொடர்ந்து
காமத்தில் முடிவது
காதலல்ல......

கருவிழிகளில் தோன்றி
இருவிழிகள் இணைந்து
அன்பின் ஐந்திணைப் பாராட்டி 
மலர்வதே காதல்......

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை


Andhra Shabda Chintamani and Balavyakaranam: A Contrastive Study(ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை ஆந்திரசப்தசிந்தாமணியும் பாலவியாகரணமும்: ஒப்பியல் பார்வை)
 This article in Tamil compares and contrasts two notable grammatical works in
Telugu: Andhra Shabda Chintamani and Balavyakaranam
Focusing on the different styles of grammar proposed in Telugu tradition, this
article presents various aspects of similarities and dissimilarities between the
chosen grammatical works in Telugu.
As this article is primarily intended for a Tamil audience, the article also
presents some salient similarities and differences between these selected Telugu
grammars vis-a-vis some traditional Tamil grammars such as Tolkappiyam and
Nannuul.

T. Sathiya Raj, Ph.D. Candidate
School of Indian Languages and Comparative Literature
Tamil University
Thanjavur 613010
Tamilnadu
India
இக்கட்டுரை Language in India இதழில் வெளியிடப் பெற்றது. மேலும் வாசிக்க http://languageinindia.com/july2013/v13i7july2013.pdf

பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)



பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)முகப்பு
      ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.
தொல்காப்பியர் வித்திட்டது மொழித்தூய்மைக் கொள்கை. இச்சிந்தனை தெலுங்கு மொழிக்குரிய முதல் இலக்கணநூல் (ஆந்திர சப்த சிந்தாமணி) முதற்கொண்டே காணப்படுகின்றது. அச்சிந்தனை கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாலவியாகரணத்தில் விரிந்த நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைச் சுட்டிக்காட்டுவது இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை

வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ  (தொல்.சொல்.எச்.5)
என்பது தொல்காப்பியரின் மொழித்தூய்மைக் கொள்கை. இக்கொள்கை வடசொற்களைக் கடன்வாங்கும்போது வடமொழிக்கே உரிய எழுத்துக்களை நீக்கி விட்டு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை இட்டுப் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தை உள்வாங்கிய மரபிலக்கணங்கள் தத்தம் காலத்து வழங்கிய வடசொற்களில் உள்ள வட எழுத்தை நீக்கி தமிழ் எழுத்துக்களை இடும் தன்மைகளைப் பதிவு செய்துள்ளன.
பாலவியாகரண மொழித்தூய்மைக் கொள்கையும் தொல்காப்பியத்தாக்கமும்
சின்னயசூரியின் பிறப்பும் பணிச்சூழலும் தமிழகமாக அமைந்தது. இவரின் இலக்கணப் படைப்பு பாலவியாகரணம். அன்று தொல்காப்பியர் வித்திட்ட அவ் விதையைச்(மொழித்தூய்மை) சின்னயசூரி அறிந்திருக்க வேண்டும். அதனாலேயே தம் தாய்மொழியாகிய தெலுங்கையும் தூய தெலுங்காக மீட்டெடுக்க எண்ணினார்போலும். மீட்டெடுக்கக் கூடிய வழிமுறைகளையும் பதிவு செய்துள்ளார். அப்பதிவில் கற்பாருக்குத் தெலுங்கு மொழிக்குரிய சொற்கள் இவை, வடமொழிக்குரிய சொற்கள் இவை என இனங்கண்டறிந்து விளக்கியுள்ளார். இஃது அவரின் முதல்படலம்(பரிச்சேதம்) முதற்கொண்டே காணலாகின்றது.

சின்னயசூரியின் மொழித்தூய்மைச் சிந்தனையை இரு நிலைகளில் காணலாம். ஒன்று: புதைநிலைச் சிந்தனை. மற்றொன்று: புறநிலைச் சிந்தனை. முன்னது இச்சொல் இவ்வாறாகத் திரிந்து வரும் அல்லது இவ்வெழுத்து இவ்வெழுத்தாகத் திரிந்து வரும் என்பது போல்வனவற்றைச் சார்ந்தது. பின்னது இச்சொற்கள் தூய தெலுங்கிற்கு உரியவை, இவ் எழுத்துக்கள் தூய தெலுங்கிற்கு உரியவை என்பனவற்றைச் சார்ந்தது. புறநிலைச் சிந்தனைகளைக் காட்டுவன: சங்ஞாபரிச்சேதம்: 4,9,10,19,20,21,22, சந்திபரிச்சேதம்: 14,  தத்ஸமபரிச்சேதம்: 1-87, ஆச்சிகபரிச்சேதம்: 1-38. இவை தவிர்த்த பிற புறநிலைச் சிந்தனைகளாகக் கொள்ளலாம். இனிப் புறநிலைச் சிந்தனையிலிருந்து சில கருத்துக்கள் வருமாறு:
 1. சமசுக்கிருதத்திலிருந்து தெலுங்கிற்கு வந்த எழுத்தக்கள்(சங்.4)
 2. அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்களுடன் ஒன்றிவரும் ச, ஜ ஒலியுடைய
  சொற்கள். (சங்.9).
 எ.டு. சିିିலி, சாିப
3. சமசுக்கிருத பிராக்கிருதச் சொற்களுக்கு நிகரான மொழி தத்சமம் (சங்.19).
  எ.டு. வித்3யா – வித்3ய.
4. சமசுக்கிருத பிராக்கிருதங்களிலிருந்து பிறந்த மொழி தத்பவம்(சங்.20).
 எ.டு. அகாஸ2 – ஆகஸமு
5. திரிலிங்க தேசத்தில் வழங்கக்கூடிய சொற்கள் சமசுக்கிருத பிராக்கிருதத்துடன்    எவ்விதத் தொடர்புடையனவுமல்ல (சங்.21).
 எ.டு. ஊரு,பேரு,முல்லு
இவற்றுள் மூன்றாவதும் நான்காவதுமாகிய கருத்துக்கள் தொல்காப்பிய ‘வடவெழுத் தொரீஇ’ என்பதன் நேரடிச் சார்புடையவை. எவ்வாறு நேரடிச் சார்புடையவை என எண்ணத்தோன்றும்  அதன் காரணத்தைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுபடுத்தும்.
வடசொல்                           தமிழாக்கம்                             தெலுங்காக்கம்
ராம:                                      இராமன்                                    ராமுఁடு3
லக்ஷ்மீ:                                இலட்சுமி                                   லச்சி
விஷ்ணு:                              விட்ணு                                      வெந்நுఁடு3
அக்3நி:                                  அக்னி                                        அகி3
வந:                                       வனம்                                         வநமு
ஸ்2ரீ:                                   திரு                                             ஸிரி
அஃதாவது ராம: என்பது வட சொல், அச்சொல்லைத் தமிழர் ராம: என்பதிலுள்ள விஸர்க(:) எனும் எழுத்தை நீக்கி அச்சொல்லின்முன் இகரத்தையும் பின் –ன் எனும் ஒற்றையும்(ஆண்பால் விகுதி) சேர்த்துப் பயன்படுத்துகின்றமையும், அதே சொல்லைத் தெலுங்கர் விஸர்க(:) என்பதை நீக்கி விட்டு உகரத்தையும் டு3 எனும் முதல் வேற்றுமை உருபையும் சேர்த்துப் பயன்படுத்துகின்றமையையும் கூறலாம்.
முடிப்புஇதுவரை விளக்கப்பெற்றவையின் வழி தொல்காப்பியர் கூறிய பிறமொழிச் சொற்களைக் கடன்வாங்கும்போது தம் மொழிக்குரிய எழுத்துக்களை இடுகச் எனும் சிந்தனை தமிழ் மொழிக்கு மட்டுமின்றி தெலுங்கு மொழிக்கும் பொருந்தி வரும் என்பதையும், தொல்காப்பியத்தாக்கம் சின்னயசூரியிடம் காணப்பட்டதையும் அறிய முடிகின்றது எனலாம்.
துணை நின்றவை
தமிழ்1. தெய்வச்சிலையார்(உரை.),1984, தொல்காப்பியம் சொல்லதிகாரம், தமிழ்ப்     பல்கலைக் க்ழகம், தஞ்சாவூர்.
தெலுங்கு2. பரவஸ்து சின்னயசூரி, 2002, பாலவ்யாகரணமு, பாலசரஸ்வதி புக் டிப்போ, ஹைதராபாத்.
3. புலுசு வேங்கட ரமணய்ய காரி (உரை), 1965, பாலவ்யாகரணமு (லகுடீக ஸஹிதமு), வாவிள்ல ராம்ஸ்வாமி ஸாஸ்த்ரிலு அண்ட் சன்ஸ், மதராசு.