Friday, November 29, 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சாக்ரடீஸும் வள்ளுவரும்
            தருக்க முறையிலும் அறிவியல் பூர்வமாகவும் எப்பொருளையும் உற்று நோக்கும் ஆராய்ச்சி உணர்வினை சாக்ரடீஸ் வளர்த்தார். உண்மையான அறிவுதான் மனிதனை விடுவிக்கும் என்றும், நன்முறையில் வாழ்க்கை நடத்துதல் என்பது அறிவினால் மட்டுமே முடியும் என்றும் நல்லனவற்றை தெரிதல்தான் அறிவின் வேலை என்றும் இவர் கருதினார். அரசியலில் பங்கு கொள்ளும் யாவருக்கும் அறிவுத்தெளிவு இருக்க வேண்டும்  என்றும் கருதினார். உண்மையான தளபதி என்பவன் அரசியற்கலையில் அறிவு பெற்றவன் என்றும், மனித இனத்தின் வாக்குகள் எல்லாம் பெற்றாலும் கூட ஒரு பேதை தளபதி பதவிக்கு அறுகதை அற்றவன் என்றும் அவர் கூறினார். திருக்குறளில் இறைமாட்சி, அமைச்சு, படைமாட்சி முதலிய அதிகாரங்களில் ஒரு நாட்டுத்தலைமையில் பணிபுரிவோன் அரசனாக, அமைச்சனாக, படைத்தலைவனாக பல நிலைகளில் பங்கு பெறினும் இவர் அனைவர்க்கும் விரிந்த கல்வியும், நுண்ணிய மதியும் தேவை என்பதை வள்ளுவரும் வற்புறுத்தியுள்ளார். மக்களின் நலனுக்காக ஆள்பவனே அரசன் என்பது சாக்ரடீஸ் கருத்து. திருக்குறளிலும் இக்கருத்துண்டு. நண்பன் ஒருவன் இன்னொரு நண்பனின் அற முன்னேற்றத்திற்குரிய வகையில் நடக்க வேண்டும் என்பது சாக்ரடீசின் கருத்தாகும். மன உறுதியினையும், தளரா ஊக்கத்தினையும் இவர் வலியுறுத்தினார்.
அறிவுடைமைதான் எல்லாம் உடைமையாகும்,      அறிவாவது நல்லன அறிதல் என்பார் சாக்ரடீஸ். திருக்குறளிலும் அறிவுடைமை என்னும் தனியதிகாரம் அமைந்துள்ளமை கவனிக்கற்பாலது. சாக்ரடீஸ் மாந்தரின் எளிய ஆசைகளும், இலட்சியங்களும் பயனற்றவை என்றும், உணர்வினால் இன்பத்தை புறக்கணிக்கத் தூண்டுவது அறிவாற்றலே என்றும் விளக்கம் தந்தார். இன்பம் முற்றிலும் தீயது. இன்பத்திற்கு அடிமையாவதை விட பைத்தியமாகத் திரிவது மேல் என்று முழங்கினார். வறுமை, வருத்தந்தரும் கடுமையான உழைப்பு, அவமதிப்பு என்பன யாவும் ஆன்மீக விடுதலைக்கும் அறத்திற்கும் முன்னேற்றக் கருவிகளாப் பயன்படுவன என்றும் இவர் பேசினார். வேரூன்றிவிட்ட பழக்கங்களையும், சட்டங்களையும் கொண்டு வாழ்க்கையினை ஒழுங்குபடுத்த முடியாது என்றும், அறிவு ஆணையிடும் சட்டங்களே தம்மைக் கட்டுப்படுத்தும் என்றும் இவர் கருதினார்.
ஆதலின் எல்லோரும் அறிவு வாய்ந்தவராக விளங்கினால் பல்வேறு பிரிவுடைய நாடுகள், சட்ட பேதங்கள் தாமே மறைந்து போகும். ஆதலின், அடிமை முதல் ஆண்டாள் வரை யாவரும் ஒரு நாட்டினராகவும், ஒரே சட்டத்தினால் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பர் என்றார். ஆனால் வள்ளுவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதால் வேரூன்றிய வழக்கங்களில் தக்கனவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று கருதினார். எனினும் உலகம் தழீஇயது ஒட்பம் என்று கூறுதலின் ஒன்றிய அறிவினால் ஒரே உலகம் காணலாம் என்னும் கருத்தும் அவர்க்கு உண்டு என்பதை மறுத்தற்கில்லை. இவர் இளநெஞ்சங்களை பகுத்தறிவினால் கிளர்ந்தெழச் செய்தார் என்றும், நம்பிக்கைகளை தம் சிந்தனைக் கத்தியால் வெட்டி வீழ்த்தினார் என்றும், கிரேக்க அரசினரால் நஞ்சு கொடுத்து சாக்ரடீஸ் கொல்லப்பட்டார் என்றும் கூறுவர். திருக்குறளில் இடம்பெறும் பெயர்கண்டு நஞ்சுண்டமையவர் நலத்தக்க நாகரீகம் வேண்டுபவர் என்னும் குறள் இவரை நினைத்து எழுந்திருக்கலாம்.
பிளேட்டோவும் வள்ளுவரும்
            தன் ஆசான் உள்ளுரைகளுக்கெல்லாம் எழுத்துரு தந்த மேதை பிளேட்டோ ஆவார். பிறர் எனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவனோ, அதை நான் பிறர்க்குச் செய்ய வேண்டும் என்பது இவர்தம் பொன்மொழி ஆகும். நல்லன யாவை ? என்பது குறித்து சாக்ரடீஸ் கருதிய சிந்தனைக்கு விளக்கம் கண்டார் பிளேட்டோ. கவினும் இன்பமும் பயனும் மிக்கவைதாம் நல்லன என்பது இவர் விளக்கம் ஆகும். பகுத்தறிவின் ஆட்சியின் கீழ் நன்னிலையில் உள்ள மனிதனின் ஆன்மா ஆணையிடப்பெற்று ஒத்திசைக்க வேண்டும். என்பது பிளேட்டோவின் கருத்து. 1. அறிவுடைமை 2. துணிவுடைமை 3. மிதத்தன்மை அல்லது அளவு 4. நீதி அல்லது நடுவுநிலைமை என்னும் நான்குமே விழுமிய பொருட்கள் என்றும்,  இந்நான்கிலும் தத்துவ ஞானத்தை முழுமையாப் பெறுவதலாகிய அறிவுடைமையும் சமூகத் தொடர்புகளில் நடுவு நிலைமைக்கு வேராக விளங்கும் ஒழுங்கு பெற்ற ஆன்ம உறுப்புக்களின் செப்பமும் மிகவும் முக்கியமானவை என்றும் பிளேட்டோ கூறினார்.
            குடியரசு - என்னும் தன் இலட்சிய நாட்டில் நன்றாக வளர்க்கப்பெற்ற இருபாலினமும் தகுதிக்கு ஏற்பத் தொழில்களைப் பங்கிட்டுக் கொள்ளுதல், அரச ஆணைக்குக் கீழ்படிதல் என்பன சாமானியரின் தருமமாகும். அரசினை இயக்குதலும் கல்வியைக் கவனித்தலும் ஆழ்ந்த தியானம் புரிதலும் தத்துவ மேதைகளின் செயலாகும். பிளேட்டோவின் குடிமக்கள் கைத்தொழில் புரிதல், சில்லரை வணிகம் புரிதல், அரசியல் தோரணையில் பணம் ஈட்டல் முதலியன கூடாது. மூன்று ஆண்டுகளுக்கு இசைகலையைப் பயில வேண்டும். கணாதத்தில் தேர்ச்சி பெற வேண்டும். பதினெட்டு வயது வரை மது அருந்தக்கூடாது, முப்பத்தைந்து வயதுக்குமேல் பிரம்மச்சாரியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும். மக்கள் பாடும் பாடல்களும் இசைகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும். அறிவு ஆனந்தம், செல்வம், புகழ் என்பன எய்தற்குரிய விரும்பத்தக்க நற்பொருள்கள் ஆகும். பிளேட்டோ சிந்தனைகளின் ஒரு பகுதிதான் திருக்குறள் கருத்துக்களுடன் ஒப்பிடத் தக்கவை. தத்துவ மேதைகள் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பார் பிளேட்டோ. கல்வியறிவு சான்றவர்களை வள்ளுவர் நாட்டுத் தலைவராகக் கருதினார். ஐம்பொறிகளாகிய குதிரைகளைப் பகுத்தறிவு என்னும் சாரதி இயக்கினான் என்றும், நன்மையில் ஆன்மா அமரத்துவத்தைக் காண்கிறது என்றும், எங்கும் மானமே அனைத்து அழகிற்கும் நன்மைகளின் உத்வேகத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்றும் பிளேட்டோ எண்ணினார்.
அரிஸ்டாட்டிலும் வள்ளுவரும்
            பிளேட்டோவின் மாணவராகிய அரிஸ்டாட்டில் எழுதாத துறைகளே இல்லை. இவர் எழுதிய அக நூல்களில் 'நிகமேக்சியன் எதிக்சு' என்பது குறிப்பிடத்தக்கதாகும். வாழ்க்கையில் இன்பத்தில் அழுந்தி விடாமலும் துன்பத்தில் மூழ்கிவிடாமலும், இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் நிற்றலும், தற்பெருமை தற்சிறுமைகட்கிடையில் உள்ள வாய்மையும், சினம் கோழைத் தனத்திற்குமிடையேயுள்ள வீரமுமாகிய நடுப்பாதையில் மிதத்தன்மையில் நல்வாழ்வு புரிவதையே இவர் வற்புறுத்தினார். புத்தர்பிரான் போதித்த மாத்திமிகு நெறியின் மறுமதிப்பாக இது தோன்றுகிறது. இருவரின் கோட்பாடும் 'மகினும் குறையினும் நோய் செய்யும்' என்னும் திருக்குறளில் ஒலிக்கக் கேட்கிறோம்.

புகழுக்காக இறப்பினை அஞ்சாது எதிரேற்றால்தான் துணிவு என்றால் கடற்புயலில் சிக்கியவன் அஞ்சாதவாயின் அது துணிவெனப்படாது. போரில் இறத்தல் முதலியன புகழ் தருதலின் துணிவாகும் என்றார். ஊதாரித்தனமாக இல்லாமல் உபயோகிக்கப்படும் வகையில் செய்யப்பெறும் உதவிகளையே ஈகை என்றும், இதற்குப் பயன்படுவதே பொருள் என்றும் கூறினார். அறக்கழிவாக பொருள் ஈட்டுதலில் அரிஸ்டாட்டில் உடன்படவில்லை. உயர்ந்த உள்ளம் கொண்டவரே பெருமை படைத்தவர் என்றும், நற்குடிப்பிறப்பினர் என்றும், பாராட்டுக்கு ஆசைப்படினும் அதனைப்பெறும் பொழுது  நாணுபவர் என்றும், பகைவர் நண்பர் இருவர் திறத்தும் பொது நிலையினான் என்றும், வெகுளி, பயனில் சொல், சிறு தேவைகள், சிற்றாசைகள் முதலியவற்றிலும் முற்றும் நீங்கியவர் என்றும், மென்மையான நடையும் ஆற்றல்மிக்க குறலும், தெளிவான பேச்சும் இவருக்கே உரியன என்று அரிஸ்டாட்டிலை வரையறை செய்தனர். சான்றாண்மை, நட்புடைமை, வாய்மை, அணி நலன் மிக்க கூரிய அறிவு முதலியனவும் பெருமைக்குரியாரின் குணங்கள் என்பார் அரிஸ்டாட்டில்.
முடிவுரை
            ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் மண்ணில் திருவள்ளுவரும், கிரேக்க மண்ணில் சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகிய அறிஞர்களும் வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழிக்கும், கிரேக்க மொழிக்கும் நெருக்கமான உறவு நிலை என்பது கிடையாது. ஆனால் உணர்வு அடிப்படையில் இவ்விருவேறு இடங்களில் மட்டுமல்ல சர்வதேச அளவில் பல்வேறு இடங்களிலும் பொதுநலச் சிந்தனையாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதனை இவ்வறிஞர்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் நல்வழிப்பாதையில் செல்லவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் வள்ளுவர் எவ்விதக் கருத்துக்களை முன் வைத்தாரோ அதே பொதுநலச் சிந்தனைக் கருத்தியல்களை முன்வைத்து சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகிய மூவரும் வெளிப்படுத்தியமையை உணரமுடிகிறது.
உதவிய நூல்கள்
  1. திருக்குறள் பரிமேழலகர் உரை
  2. நா. வானமாமலை, திருக்குறள் உணர்த்தும் உறுதிப்பொருள்
முனைவர் சொ.சுரேஷ்
             உதவிப் பேராசிரியர்
             தமிழ்த்துறை
             அழகப்பா பல்கலைக்கழகம்
             காரைக்குடி - 3


2 comments:

  1. சார் அரிஸ்டாடில் அவர்களின் புத்தகங்களை ( நிகோமிசின் எதிக்ஸ், ரெட்டோரிக், லாஜிக், உள்ளிட்டவற்றை) மொழிபெயர்த்து தர முடியுமா? சம்பளம் பிரச்சினையில்லை. பேசிக்கொள்ளலாம்

    ReplyDelete

  2. தங்கள் வருகைக்கு நன்றி!
    மொழியாக்கம் செய்வதற்கு அவரால் (முனைவர் சொ. சுரேஷ், உதவிப் பேராசிரியர்) இயலாது. அவர் அரிசுட்டாட்டிலின் கருத்தை மொழி பெயர்ப்பிலிருந்தோ அல்லது பிற அறிஞரின் கருத்திலிருந்தோ எடுத்திருக்க வாய்ப்புண்டு. மொழியாக்கம் தேவை எனில் எமக்குத் தெரிந்த ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அவ்வப்போது மொழியாக்கங்கள் வெளியிட்டு வரும் இரா.நித்யா அவர்களிடம் கேட்டுத் தங்களுக்கு உதவ முடியும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன