திங்கள், 22 ஜூன், 2015

வாசிப்புத் திருநாள்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களை நூல் வாசிக்க வைக்க வேண்டும் எனும் நோக்கில் 23.06.2015 அன்று கல்லூரி நூலகத்தில் வாசிப்புத் திருநாள் நிகழவிருக்கின்றது.
இதுபோன்ற நிகழ்வுகளை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனெனின் மாணவர்கள் வாசிப்பு என்பது பற்றிய அறிவு இன்றியே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். இதனுள் சிறுமாற்றம் நிகழ்ந்தால் அது இந்நிகழ்வின் வாகையாகும். அதனையே எதிர் நோக்குகின்றது இந்நிகழ்வு.

சனி, 16 மே, 2015

இனம் : பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ்

இனம் பற்றி,

   
இந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.
     அருமைத் தமிழ்ச் சொந்தங்களே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும். இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம்.

வியாழன், 7 மே, 2015

பொறுத்திரு! வாழ்வு கனிந்திடும்!

இயந்திர வரவிற்கு முன்பு மனிதன் மனிதனாய் இருந்தான். இன்று இயந்திரம் போன்று தம்மின் வாழ்க்கையையும் மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். அது, இன்ப வாழ்வை இடியாய்த் தகர்த்தது தகர்த்துக் கொண்டும் வருகின்றது. எங்கும் வேகம். எதிலும் வேகம். வேகத்தின் ஊடே மனிதனின் மனமும் மயிலிறகாய் உதிர்ந்துவிட்டது. தத்தம் குழந்தைகளின் சேட்டையைக் கூட பொறுத்துக் கொள்ள மனித மனம் இடங்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு மனிதனின் மனம் தூசாய் மன்றிவிட்டது. ஆயின், குழந்தை மனமும் நஞ்சாய் மாறிக் கொண்டிருக்கிறது. இது அழிவை நோக்கிய ஒரு பயணமே. அது எப்படி? ஒரு நல்ல நீர்க்குடத்தில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால், அந்நீர் முழுவதும் நஞ்சாய் மாறுவது போல்வதே.

புதன், 1 ஏப்ரல், 2015

தமிழ்க்கதிர் முப்பதில் பன்முகத் தன்மை

வெண்பா என்றால் நம்மின் நினைவில் நிற்பது சங்கப் பாடல்களும் ஔவையார் பாடல்களும் காளமேகப் புலவர் பாடல்களுமே. இக்காலத்தில் புதுக்கவிதை, ஐக்கூ, ஒருவரி போல்வன கவிதைகளுக்கே சிறப்பிடம் உண்டு, பழங்கதை வடிவமான வெண்பாவில் எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அத்தகையோரில் ஒருவரே தகடூர்த் தமிழ்க்கதிர். அவர் எழுதியிருக்கும் வெண்பாக்கள் நிறைய உள. அவற்றுள் தமிழ்க் கதிர் முப்பது எனும் தொகுப்பின் சிந்தனைகளுள் பன்முகத் தன்மைகளைச் சுட்டிக்காட்டகின்றது இக்கட்டுரை.
இவரின் இத்தொகுப்பில் முப்பது வெண்பாக்கள் உள. இத்தொகுப்பு, தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு எனும் இதழில் வெளிவந்துள்ளது. இவ்விதழின் நோக்கங்கள்: 1.தமிழ்வழிக் கல்வி வெண்பாவைத் தொடர்ந்து வெளியிடுவது, 2.வெண்பா தமிழரங்கம் எனத் தமிழ் மொழியில் பல்துறையைப் பாடுவது, 3.தமிழறிவால் உலகின் (நமது உலகம் பகுதி) மேன்மையைக் காப்பது எனும் முக்கொள்கையை உடையதாக விளங்குகின்றது (2015:2). இச்சிறப்புமிகு இதழில் வெளிவந்த தொகுப்பே தமிழ்க்கதிர் முப்பது. இத்தொகுப்பால் இடம்பெற்ற முப்பது வெண்பாக்கள் கல்விழி நூலாசிரியன் சிறப்பு, நூலின் சிறப்பு, மனிதன் வாழ வேண்டிய வழிமுறை, இயற்க்கையின் சிறப்பு, உலகப் பொதுமையை ஏற்கும் தன்மை, சங்கப்பாடல்களின் சிறப்பு, வாழ்க்கை, படைப்பாற்றல், பொதுநலம் போல்வன கருத்துக்களை மையமிட்டனவாக அமைந்துள்ளன. அவை குறித்து சிறிது விளக்குதும்.

சனி, 31 ஜனவரி, 2015

செம்மொழிக் கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக


செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆண்டுதோறும் தேசியக் கருத்தரங்கங்களைப் பல்வேறு நிறுவனங்களின் வழி நடத்தி வருகின்றது. அக்கருத்தரங்களில் ஆய்வுக்கே முதன்மைத் தரப்படும். ஆனால், இந்த ஆண்டு, தமிழைப் பகுதிப் பாடமாகப் பாயிலும் இளங்கலை ஆங்கிலம், தொழில் நுட்பவியல், நுண்ணியல், வணிகவியல் போல்வன துறை இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்குச் சங்க இலக்கியங்களை  அறிமுகப்படுத்துவதற்கு நிதியுதவி அளித்துள்ளது. இதனைப் பெற்று வெற்றி வாகை சூடிய நாயகர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்களேயாம். அதன் இறுதி நிகழ்வு முறைமைகள் வருமாறு:
கோவை - ஜனவரி - 31. சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தரங்கம் 29.01.2015, 30.01.2015, 31.01.2015 ஆகிய மூன்று நாட்கள் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கோவை, ஓம் சக்தி மாத இதழ் ஆசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்கள் தலைமையேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியின் முதல்வர்  முனைவர் மு.இளமுருகன் அவர்கள் கருத்தரங்கம் குறித்த தனது கருத்துரையை வழங்கினார்.