முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
தமிழ் – உதவிப் பேராசிரியர்
இந்துசுதான் கலை & அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா.
கடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.
தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே – தொல்.சொல்.397
எனும் விதி துலக்கும். இவ்விதி பேச்சு வடிவத்தை ஏற்கலாம் என்பதையும், எழுத்து வடிவத்தை ஏற்கலாகாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. ஆக, தொல்பழங்காலத்தில் இருந்த இந்நிலைப்பாடு பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்பும் மாறின. சமசுகிருதத்தின் ஆதிக்கம் தமிழ்மொழியின்பால் காலூன்றியது எனலாம் (க.ப.அறவாணன், 2006:121 – 126). ஆகவே, தமிழ்மொழிக்குரிய முதன்மை எழுத்துக்கள் முப்பது என்றமை, இன்று ஆய்தத்துடன் சேர்த்து முப்பத்தேழு (ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ) எனக் கூறுமாறும் ஆகிவிட்டது. குறிப்பாக இன்று மழலையரின் தமிழ் அரிச்சுவடியிலும் இடம்பெற்றுவிட்டமை நோக்கற்பாலது. இவ்வாறு உட்புகுந்த சமசுகிருத மொழியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல விரிந்து நின்றது. ஆகவே இன்று மாந்தர் பெயர்கள் அனைத்தும் சமசுகிருதமாகவே அமையக் காணலாம்.