Sunday, October 20, 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

சங்கப் புலவர்கள்
            தமிழின் புகழுக்குக் காரணமாக அமைவது சங்க இலக்கியங்கள். இத்தகைய சங்க இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் பலர் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பது இராசுவின் ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
            பெருந்தலைச் சாத்தனார், அந்தியிளங்கீரனார், பொன்முடியார், காக்கைப்பாடினியார், ஓரோடகத்துக் கந்தரத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் ஈரோடு மாவட்டத்துப் பெருந்தலையூர், அந்தியூர், மொம்முடி, உலகடம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் என ஆய்வாளர் கூறுவர் (ஈ.மா.வ. ப:188).
பக்திநெறியும் தமிழ் வளர்ச்சியும்
            தமிழ் மொழியும், பக்திநெறியும் இரண்டறக் கலந்தவை.  தமிழ் மொழியை பக்தி மொழி என்று அழைப்பர். தமிழ் வளர்ச்சிக்கும், தமிழின் பெருமைக்கும் புகழுக்கும் சான்றாக விளங்குவன பக்தி இலக்கியங்கள். அந்தவகையில் சிறந்த பக்தி நெறியோடு தமிழ்மொழி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிந்துள்ளது ஈரோடு மாவட்டம் என்பதைப் புலவர் செ.இராசு வரலாற்று ஆய்வின் மூலம் சான்றுடன் விளக்கமளித்துள்ளார்.
            தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிக் கொடுமுடியும், பவானியும் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன.  திருஞானசம்பந்தர் பாவனிக்கும், திருநாவுக்கரசர், சுந்தர்ர் முதலிய மூவரும் பாண்டிக் கொடுமுடிக்கும் தேவாரப் பதிகங்கள் பாடியுள்ளனர். தாராபுரம், பெருந்துறை, பூந்துறை போன்ற தேவார வைப்புத் தலங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன (ஈ.மா.வ.ப.188).
மாணிக்கவாசகர் தம் அகவல் பாடலில் அரிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே என்று பாடியுள்ளார்.  இதில் பாண்டி வெள்ளமே என்பது கொடுமுடியைக் குறிக்கும் என்று இராசு அவர்கள் சுட்டியுள்ளார்.
இலக்கண வளர்ச்சி
            ஒரு மொழி தடம் புரலாமல் காப்பது அம்மொழியில் அமைந்த இலக்கணங்களேயாகும்.  அந்தவகையில் தமிழ்மொழிக்குப் பல இலக்கணநூல்களைத் தந்தவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இராசு அவர்கள் பல சான்றாதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
            எழுத்து, சொல் இலக்கணம் கூறும் நன்னூலை சீயகங்கன் கேட்டுக் கொள்ள இயற்றிய பவனந்தி முனிவர் பெருந்துறை வட்டம் சீனாபுரத்தைச் சேர்ந்தவர். சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றிய அடியார்க்கு நல்லாரும் விசயமங்கலத்தையும் அருகில் உள்ள நிரம்பையையும் சேர்ந்தவர்கள்.  நன்னூலுக்கு முதல் உரை எழுதிய மயிலைநாதர் ஈரோட்டை சார்ந்தவர் (ஈ.மா.வ.ப.189) என்பது இராசு அவர்களின் ஆய்வுரை வழி அறியமுடிகின்றது.
நிகண்டுகள்
            ஈரோடு மாவட்டத்தில் நிகண்டு நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளமை பற்றி இராசு சுட்டியுள்ளார்.  காங்கயம் வட்டக் காடையூர்க்காங்கேயன் உரிச்சொல் நிகண்டு இயற்றியுள்ளார்.  காங்கேயன் உரிச்சொல் நிகண்டு என்றே அந்நூல் பெயர் பெற்றது என்றும் காங்கேயத்தில் வாழ்ந்த பள்ளித் தனிக்கையாளர் சிவன்பிள்ளை என்பவர் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆசிரிய நிகண்டு அச்சிட்டார் என்ற செய்தியும் அறியமுடிகின்றது.
ஈரோடு மாவட்டத் தற்கால புலவர்கள்
            சாகித்திய அகாதமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன், புலவர் செ.இராசு, புலவர் இரா.வடிவேலு, டாக்டர் வெ.ஜீவானந்தம், ஸ்டாலின் குணசேகரன், மு.சதாசிவம், சேலம்பாலன், குறிஞ்சி சண்முக சுந்தரம், நாமக்கல் நாதன், சந்திரசேகரன், தாராபுரம் க.அரங்கசாமி, தமிழ்க்குமரன், பெருந்துறைவேலன், சந்திர மனோகரன், செ.சு.பழனிசாமி, க.ஆ.திருஞானசம்பந்தம், கு.ஜமால் முகமது, கே.வி. சுப்பிரமணியம், மே.து.ராசுகுமார்,  பவானி மழைமகன், ஆற்றலரசு ஆகிய ஈரோடு மாவட்டத்துக்காரர்கள் பலர் பல்வேறு துறைகளில் தமிழ்ப்பணி ஆற்றிவருகின்றனர்.  புலவர் செ.இராசு கல்வெட்டு, செப்பேடு, சுவடி ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர்.
            ஈரோடு மாவட்டத்தில் வார, மாதம், பருவ இதழ்களாக வெளிவந்தவை, வெளிவருபவை மொத்தம் எழுபது என்று பட்டியலிடுகிறார் புலவர் இராசு (ஈ.மா.வ.ப:194) இவற்றின் மூலம் தமிழும், தமிழ் இனமும் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.
முடிப்பு
            செப்பேடு, கல்வெட்டு ஆகியவற்றைக் கண்டறிந்தும், வரலாற்று நூல்கள் பலவற்றை உருவாக்கியும் அவற்றின் மூலம் தமிழையும், தமிழரின் தொன்மையையும் உலகறியச் செய்தவர் புலவர் செ.இராசு. ஈரோடு மாவட்டத்தின் மூலம் தமிழ் வளர்ந்தநிலை இராசு அவர்களின் கழன உழைப்பாலும், சிறந்த ஆய்வுக் கூர்மையாலும் வெளிக்காட்டியுள்ளார். இவற்றின் மூலம் தமிழ் இலக்கண, இலக்கிய வளமைக்கு ஈரோடு மாவட்ட புலவர்களின் பங்களிப்பை அறிந்துகொள்ளமுடிகின்றது.  ஈரோடு மாவட்டத்தின் பல்வேறுபட்ட சூழல்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் மூலம் தமிழ்வளர்ச்சி பற்றியும், தமிழ்ச் சிறப்படைந்ததைப் பற்றியும் சிறப்பாகச் சொல்லி மகிழ்ந்துள்ளார் புலவர் செ.இராசு. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழரின் தொன்மை, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றில் அக்கறைகொண்டு அவை பற்றியே சிந்தித்துத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பினை உலகறியச் செய்தவர் புலவர் செ.இராசு அவரின் புகழ் என்றும் மங்கா கல்வெட்டாகும்.
ஆய்வுக்கு உதவிய நூல்
செ.இராசு (2008), ஈரோடு மாவட்ட வரலாறு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11.
அ.சத்பதி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் - 10
கைபேசி : 9865030071
sathpathi30071@yahoo.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன