ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் நடைபெறவுள்ளது.
தொல்காப்பியத்தில் உயர் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்குரிய களமாக இம்மாநாடு அமையவேண்டும் என்பது இம் மாநாட்டின் குறிக்கோளாகும்.
கனடா நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றிவரும் தொல்காப்பிய மன்றமும், தமிழ்நாட்டில், தமிழ்ப் போராளி, பேராசிரியர் இலக்குவனார் பெயரில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டாற்றிவரும், இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இத்தகையதொரு உலகளாவிய மாநாட்டை, கனடா அறிஞர் பெருமக்களினதும், தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்களினதும், உலகப் பேரறிஞர்களினதும் ஆதரவுடன் சிறப்புற நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இம் மாநாட்டில், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும், நேரடியாகவோ இணையவழியாகவோ கலந்து கொண்டு, மாநாட்டின் குறிக்கோளை நிறைவு செய்வதில் உங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இம் மாநாட்டில், தொல்காப்பியம், தொல்காப்பியத் தமிழ், தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியத்திற்கு முன்னைய காலம், தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியத்தின் இடம், பிற்கால இலக்கணத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம், உலக இலக்கணங்களுடனான ஒப்பீடு போன்ற விடயங்களில் ஆய்வுகள் மேற்கொள்வது வரவேற்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கட்டுரைக் களங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
ஆய்வுக் கட்டுரைக் களங்கள்:
தொல்காப்பியம் / தொல்காப்பியர் / தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியர் தொடர்பான வரலாற்று ஆய்வு
தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பற்றிய ஆய்வு
தொல்காப்பியப் பாயிர ஆசிரியர்
தொல்காப்பிய அமைப்பு
தொல்காப்பிய வைப்புமுறை
தொல்காப்பிய உரைகள்
தொல்காப்பிய உரையாசிரியர்கள்
தொல்காப்பிய எழுத்திலக்கணக் கோட்பாடுகள்
தொல்காப்பியச் சொல்லிலக்கணக் கோட்பாடுகள்.
தொல்காப்பியப் பொருளதிகாரம்
தொல்காப்பியரின் அகத்திணைக் கோட்பாடுகள்
தொல்காப்பியரின் புறத்திணைக் கோட்பாடுகள்
பொருளதிகாரமும் வாழ்வியலும்
தொல்காப்பியப் பாவியல் கோட்பாடுகள்
தொல்காப்பியத்தில் காதலும் போரும்
தொல்காப்பியத்தில் நிலப் பாகுபாடு
தொல்காப்பியப் பொருளதிகாரமும் இலக்கிய வளர்ச்சியும்
தொல்காப்பிய இலக்கணமும் இன்றைய வளர்ச்சியும்
தொல்காப்பியமும் அரச உருவாக்கமும்
தொல்காப்பியச் செய்யுளியல்
தொல்காப்பியத்தில் அணியிலக்கணம்
மரபியலின் பயன்பாடு
தொல்காப்பியத்தில் இடைச் செருகல்கள்
தொல்காப்பியரின் பிறப்பியலும் இன்றைய கல்விமுறையும்
தொல்காப்பியப் பிறப்பியலும் மொழியியலும்
தொல்காப்பியப் பிறப்பியலும் பாணினீயமும்
தொல்காப்பியத்தில் தொடரியல்
தொல்காப்பியமும் மொழியியல் கோட்பாடுகளும்
தொல்காப்பியச் சமூகம்
தொல்காப்பியர் கால விளிம்புநிலைச் சமூகம்
தொல்காப்பியத் தமிழர்
தொல்காப்பியத் திறனாய்வு
தொல்காப்பியம் – வரலாற்று ஆவணம்
தொல்காப்பிய எழுத்ததிகாரமும் பிற திராவிட மொழிகளும்
திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ்
தொல்காப்பியமும் மலையாளமும்
தொல்காப்பியமும் யப்பானியப் பாடல் மரபும்
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வுரைகள்
இலக்குவனாரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு
இவை போன்ற, தொடர்புடைய பிறவும்.
தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வுக் கட்டுரை தொடர்பான வரைக்கட்டுகள் வருமாறு,
ஆய்வுக் கட்டுரைகள் தொல்காப்பியத்துடன் தொடர்புடைய, தொல்காப்பிய இலக்கணவியல், மொழியியல், அறிவியல், வாழ்வியல், வரலாற்றியல் சார்ந்த ஏதாவது ஒரு துறையில் அமையலாம்.
மாநாட்டில் அளிக்கப்படும் கட்டுரைகள் வேறு எவ்விடத்திலும் எக்காலத்திலும் வெளியிடப்படாததாக இருக்கவேண்டும்.
தேர்ந்தெடுத்த ஆய்வுப் பொருள் குறித்து, இதற்கு முன்னர் வெளிவந்த ஆய்வுகள், ஆவ்வாய்வுகளின் முடிவுகளைக் குறிப்பிட்டு, முன் ஆய்விலிருந்து வேறுபட்டோ, தொடர்ச்சியாகவோ, மறுப்பாகவோ, மேம்படுத்துவதாகவோ கட்டுரை அமையவேண்டும்.
தட்டச்சு – கட்டுரைகளை, ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font), 12 உரு அளவில் (Font size), வரிகளுக்கு இடையிலான இடைவெளி (Line spacing) 1.5 இருக்கக் கூடியதாக, மைக்கிறோசாஃபுட்டு சொற்செயலியில் (Microsoft Word) தட்டச்சு செய்து, மைக்கிறோசாஃபுட்டு (Microsoft Word) கோப்பாகவும் PDF கோப்பாகவும் அனுப்பவேண்டும்.
கோப்பின் பெயர் (File Name): கட்டுரைத் தலைப்பும் அதைத் தொடர்ந்து கட்டுரை ஆசிரியரின் பெயரும் கோப்பின் பெயராக அமையவேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் (Synopsis): இரண்டு பக்கங்களுக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும். முழுமையான ஆய்வுக் கட்டுரை முப்பது (30) பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
ஆய்வாளரின் முழுப் பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், முகவரி உள்ளிட்ட, கட்டுரையாளர் தொடர்பான குறிப்பு இணைக்கப்பட வேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் 2024-05-01 இற்கு முன் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படவேண்டும்.
ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது பற்றிய அறிவிப்பு கட்டுரையாளர்களுக்கு 2024-05-25 இல் அறிவிக்கப்படும்.
முழுமையான ஆய்வுக் கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதிநாள்: 2024-07-01
அனுப்பப்படும் கட்டுரைகள் யாவும் மூதறிஞர்கள் அடங்கிய குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு, வாசிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 15-08-2024 இல் அறிவிக்கப்படும்.
ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரை ஆகியவை அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tolcanada@gmail.com
மாநாட்டில் கட்டுரை வாசிப்பதற்காக ஒருவருக்கு ஒதுக்கப்படும் நேரம்: 30 மணித்துளிகள்.
கட்டுரை ஒப்படைப்பு: 20 மணித்துளிகள்.
ஐயந்தெளிதல்: 10 மணித்துளிகள்.
மாநாட்டு இறுதிநாள் அன்று தெரிவான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலர் வெளியிடப்படும்.
இணைய முகவரி: https://www.tolkappiyam.ca/ மின்னஞ்சல்: tolcanada@gmail.com
மேலதிகத் தொடர்புகளுக்கு (புலனம்) : +1-647-881-3613 / +1-416-939-9171 / +1-647-850-0152
https://www.tolkappiyam.ca/call4papers/