சனி, 26 பிப்ரவரி, 2022

உலகப் பேரறிஞர் பொன்மொழிகள் - 3

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள் - வேட்லி

அழகுள்ள பெண் ஓர் அணியவாள்; நல்ல பெண் ஒரு கருவூலமாவாள் - லா அதி

ஒரு நாட்டின் நலம் அந்நாட்டுப் பெண்களின் நிலையைப் பொறுத்ததே - திரு.வி.க.

ஒரு நல்ல பெண்ணுடைய காலடியில் போலி பழிச் சொற்கள் மடிகின்றன - கடாலின்

ஒரு பெண்ணின் முதன்மையான பெருமை ஆடவர்கள் தன்னைப் பற்றி எந்தவிதமான விமர்சனமும் செய்யாமல் பார்த்துக் கொள்வதுதான் - பெரிக்ளிஸ்

KRV

வியாழன், 20 ஜனவரி, 2022

இருளர் வாழ்வியல் - அணிந்துரை

அணிந்துரை

இந்திய நாட்டில் ஆயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என மொழியியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றுள் சில இலக்கியம் கண்டவை; பல இலக்கியம் காணாத, திருந்தாத மொழிகள்: ஒருசில, மொழிகள் என கருதப்படத்தக்கவை; பல கிளை மொழிகளாகக் கரந்து வாழ்பவை; ஒருசில மொழிகள் இலக்கியப் பாரம்பரியத்தையும் இலக்கணச் செல்வத்தையும் கொண்டவை; ஆனால் பல மொழிகள் இலக்கியத்தையோ அல்லது இலக்கணத்தையோ காணாதவை; சில வியக்கத்தக்க நாகரிகத்தையும் அரிய கலைகளையும் கொண்ட மக்களால் பேசப்படுபவை; ஆனால் பல மொழிகளோ பழங்குடி மக்கள் என்று கருதப்படுகின்ற, சாதாரண, சமானிய மக்களால் பேசப்படுகின்ற நிலைமையினைக் கொண்டவை.

செவ்வாய், 18 ஜனவரி, 2022

தொல்காப்பியச் செல்வம் - முன்னுரை

முன்னுரை

உலகத்தில், இப்போது உள்ள மொழிகள், மிகப் பலவாகும். இம்மொழிகளுள், சிலமொழிகளே தொன்மை வாய்ந்தன. இத்தகைய தொன்மொழிகளுள், தமிழ்மொழி ஒன்று. தமிழ் மொழியில் இப்போது கிடைத்திருக்கும் நூல்களுள் பழமையானது, தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஆகும். இந்நூல், இற்றைக்கு இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்நூல், இல்வாழ்க்கை, அரசியல், பண்பாடு முதலியவற்றில் தமிழ் மக்கள், நெடுங்காலமாகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்னும் உண்மையினை, உள்ளவாறே உணர்தற்கு உரிய பெருநூல் ஆகும். மேலும் இந்நூல், தமிழ் மொழியின் எழுத்து, சொல் முதலியவற்றின் இலக்கண வரையறைகளையும் இனிது எடுத்துரைக்கின்றது. இந்நூலிற்கு உரைகள் பல உள்ளன. இந்நூலும் உரைகளும் ஊன்றிப் படித்தற்கு உரிய அருமையும் பெருமையும் உடையன. இந்நூலினை முறையாகக் கற்றல் வேண்டும் என்னும் ஆர்வம், தமிழ் அன்பர்களுக்குத் தோன்றுதல் வேண்டும் என்பது, என் விருப்பமாகும். ஆதலால், இந்நூலினைப் பற்றி எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் முறையில், இந்நூலின் கருத்துச் செல்வங்களையும், இந்நூலின் தொடர்பான பிற செய்திகள் சிலவற்றையும் தொகுத்து, தொல்காப்பியச் செல்வம் என்னும் நூலாக எழுதியுள்ளேன் இந்நூலினை அறிஞர்கள் இனிது வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

சென்னை 24-11-1970
லெ. ப. கரு. இராமநாதன்

சனி, 8 ஜனவரி, 2022

இந்திய மருத்துவச் சட்டம் - மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் - அட்டவணை செ ("Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J')

'மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள்' சட்டம் 1940இல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995இல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது ("Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 diseases and ailments (by whatever name described) which a drugh not purport to prevent or cure or make claims to prevent or cure"). அப்பட்டியலில் இடம்பெறும் நோய்களின் விபரம் வருமாறு:-

வியாழன், 6 ஜனவரி, 2022

கலைச்சொல் விளக்கம் 1

அக அமைப்பு (Deep Structure) : அக அமைப்பு தொடரமைப்பு. வீதி தோற்றுவிக்கப்பட்ட நுண்குறியீடுகளின் தொடர்ச் சங்கிலி. வாக்கியத்திற்குப் புற அமைப்பு என்ற நிலையும் அக அமைப்பு என்ற நிலையும் உண்டு. வாக்கியத்தின் சொற்களுக்கு இடையே அமைந்த இலக்கண உறவு (எழுவாய் பயனிலை போன்ற உறவுகள்) வரையறுக்கப்படுகின்ற நிலை அக அமைப்பு. பொருளியல் விதிகள் செயல்படுகின்ற தொடரியல் நிலையும் இதுதான்.

அடி(Base) : மாற்றிலக்கணத்தின் ஒரு துணைப் பகுதியை அடி  என்று மாற்றிலக்கணத்தார் குறிப்பிடுகிறர்கள். இதை அடிப்பகுதி என்றும் இவர்கள் கூறுவார்கள். அக அமைப்பைத் தோற்றுவிக்கின்ற தொடரமைப்பு விதிகளும் பெயர்வினைப் பாகுபாட்டு விதிகளும் சொற்களஞ்சியமும் அடங்கிய மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது.

அடிப்பகுதி (Base Component): அடி என்பதும் இதையே குறிக்கும். அக அமைப்பை உருவாக்க உதவக்கூடிய விதிகள் கொண்ட மாற்றிலக்கணத்தின் துணைப் பகுதி இது. மாற்றிலக்கணம் அடிப்பகுதியோடு மாற்றுவிதி பகுதியையும் பொருளியல் பகுதியையும் ஒலியனியல் பகுதியையும் உள்ளடக்கியது. அடிப்பகுதியும் மாற்று விதிப் பகுதியும் தொடரியல் பகுதியின் அங்கங்கள்.

அடிப்படை வாக்கியம் (Kernel Sentence): மொழியில் உள்ள வாக்கியங்கள் ஒன்றற்கொன்று தொடர்புடையவை. தொடர்புடைய வாக்கியங்களுக்கு அடிப்படை வாக்கியம் ஒன்றைத் தொடரியல் விதிகளும் கட்டாய மாற்றுவிதிகளும் தோற்றுவிக்கின்றன. இவ்வடிப்படை வாக்கியத்தின்மீது சிறப்பு மாற்று விதிகள் செயல்படும்பொழுது மற்றைய தொடர்புடைய வாக்கியங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. 1957ல் உருவான மாற்றிலக்கணத்தில் காணப்படுவது இது. இதற்குப் பின்பு உருவான மாற்றிலக்கணத்தில் இக்கருத்து கைவிடப்பட்டது. (பக்.70-71)

இந்நூலில் இடம்பெற்ற கலைச்சொல் விளக்கங்களே தொடர்ந்து இனி வெளிவரும்.