புதன், 29 ஜனவரி, 2014

முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்


முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்.
பதிவுகள் இதழில் 2014 சனவரித் திங்கள் 19ஆம் நாள் வெளியிடப் பெற்றது.

கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

1.0. முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,
1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு

2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

களாபூரணோதயத்தில் உவமைகள்

                                                                                                                                - இரா. நித்யா
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்
தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த  சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
மேலும் வாசிக்கhttp://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1840:2013-11-23-05-28-07&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 (பதிவுகள் இதழில் வெளியிடப்பெற்ற கட்டுரை)

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.