புதன், 30 செப்டம்பர், 2015

மரபுக் காதலும்! நவீனக் காதலும்!



அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவர்களைத்தான்
தோழியும் நோக்கினாள்
களவு கனிந்தது
கற்பாய் மலர்ந்தது
நனியுறும் சங்கக் காதல்!

சீதையும்  இராமனும்
சிலிர்த்து நோக்க
சிறப்பாய்த் திருமணம் நடத்தி
சீர்பெறச் சிறப்பித்தார்

காதல் நெஞ்சங்களை
அப்பனும் நோக்க
அடுத்தவனும் நோக்க
அலறுமே! நெஞ்சங்கள்
கல்வி யுகத்திலே
கணினி யுகத்திலே
கல்லறைகளில்……

வீடும் சமூகமும்
சாதிசமயப் பண்பாடுகளைச் 
சாட்டைகளாய் அணிந்து கொள்ள
பகுத்தறிவு கொண்டு விரட்டு!
மலரட்டும் காதல் மனிதம்
வாழ்த்தும் மலர்த்தூவி
மேகங்கள் மழைத்துளிகளாய்!
முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


மரபுக் காதலும்! நவீனக் காதலும்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

நம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்!

கும்பா குண்டா கூடவே
கம்பு கேப்பை குருதாளி
காணாது போயிற்றே!
நம்பு அதுவே
நலம்தரும் நல்லுணவு!
முன்னோர் எளிய உணவு
பர்க்கரும் பீசாவும்
பானிப் பூரியும் பிரைடுரைசும்
நூடூல்சும் பரோட்டாவும்
புதுவரவு இன்று!
பழையன கழிதலும்
புதியன புகுதலும் இதுதானோ?
சாலையோரம் காட்சியாய்
எளிய உண்டி பவனி வருதே – நன்று
கண்டு நீபோய் உண்டு
கண்ட நோய்கள் ஓட்டு!
நாக்குச் சுவைதேடும்
நாவடக்கம் கொள்வாய்
நலம்தருமே என்றும்
உரைத்திடு! விதைத்திடு!!
நலம்பெறட்டும் நல்லுணவால்
நானிலமும் வளம்பெறவே!
நானில மக்கள் நலம்பெறவே!
வள்ளுவன் சொன்ன
உழவுச் சிந்தை ஒளிரட்டுமே!

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


ம் உணவு நல்லுணவு! நலம் தருமே நவில்! எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

நல்லன நோக்கு! புதுமை காணவே!



(இன்னிசை வெண்பாவேறு)
1.      கவிஞரின் கண்களோ கற்பனை தூண்டும்
புவிமிசை யோங்கும் புதுமையாய்! சாவியாம்
ஆடவரின் கண்கள் அழகாள் மயக்குமது
பாடம்கல் பான்மை புரிந்து            
2.      கண்கள் கவினாக காணும் கலைகளைப்
பண்புகள் பல்கிப் புதுக்கவே! தண்மனம்
தூண்டிலாய் நின்னை துளிர்க்கும் துணிந்திடு
விண்ணைத் துளைக்க விரைந்து   
(நேரிசை வெண்பா வேறு)
3.      துணிந்தார் துவழார் துயிலுக்கும் அஞ்சார்
தணியா கனவை தளிர்ப்பார் – துணிவு
மனத்தில் துளிர்க்கவே மாண்பு குணமும்
மனத்தில் தளிர்த்திடு மே!             
(இன்னிசை வெண்பாவேறு)
 4.     கற்க திரும்பவும் கற்க கனிக்குமே
சொற்கள் சுகமாய்ச் சுரக்குமே! நூலில்
துவலாத் துணிவுத் துளிர்க்கத் தளிராம்
குவளை மலர்போலும் கூர்!            
5.      ஆய்வாளன் கண்கள் அறிவியல் நோக்குமே!
ஆய விடுத்தால் அறியும் பயன்நூறு!
போக்கிரி பண்பு பொலிந்தால் பொசுங்குமே
ஆக்கும் திறனை அருந்து!               
6.      தம்பி தமக்கை தளிர்க்கல்வி கற்றிடவே
தும்பி யதுபோல் துருவுமே! – நம்பிக்கை
ஓம்ப துளிர்க்கும் ஒருநெஞ்சம் பற்றுகவே
நம்பு நலம்தரும் நீந்து                     
முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                   இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி,
                                                                   கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                   9600370671


நல்லன நோக்கு! புதுமை காணவே!  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ



கணினியில் தமிழைக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டோமா? எனின் ஓரளவிற்கே அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணியைத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உரிய வளர்ச்சியை எய்துவிட முடியும்.
இக்காலத்தே முகநூல் (Facebook), கட்செவியஞ்சல் (Watsup) ஆகியவற்றில் நாட்டம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களை வலைப்பூ தொடங்கி எழுதுவதற்கு ஆற்றுவித்தாலே கணித்தமிழ் வளர்ச்சி பாதி விழுக்காட்டைத் தாண்டிவிடும். இதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
கணித்தமிழ்
            அதற்கு முன்பு, கணித்தமிழ் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இருபதாம் நூற்றாண்டில்தான் கணித்தமிழ் தோற்றம் கண்டது எனலாம். அன்று முதல் பல்வேறு வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றது கணித்தமிழ். கணினியில் வலைதளத்தைப் பயன்படுத்திப் பல்வேறு சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படடுள்ளன. இதன் வளர்ச்சிக்காகத் தனிநபரும், குழுக்களும், அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன எனின் மிகையாகாது.
            இன்று கணித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பல்வேறு செயல்திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்குக் கணித்தமிழ் ஆர்வலர்கள் உறுதுணையாக நிற்கின்றனர். அவ்வாறு மேற்கொள்ளப்பெற்று வரும் கணித்தமிழ் வளர்ச்சிப் பணிகளை
  •  பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்தளித்தல்.
  •   அரிய நூல்களை எண்மியமாக்கி (Digitization) அளித்தல்.
  •   பண்டைய நூல்களை உரையுடன் வெளியிடுதல்.
  • தேசிய மயமாக்கப்பட்ட நூல்களை ண்மியமாக்கி வெளியிடுதல்.
  •  பண்டைய இதழ்களை ண்மியமாக்கி வெளியிடுதல்.
  •   மின் அகராதி உருவாக்கித் தருதல்.
  • சொற்பிழைத் திருத்திகளை உருவாக்கி உலவவிடுதல்.
  • கற்றல் கற்பித்தல் முறைகளை செயல்படுத்தல்.
  • வலைப்பூ தொடங்கி எண்ணங்களைப் பதிவு செய்தல்.
  •  முகநூல், கட்செவியஞ்சல் மூலமும் கருத்துக்களைத் தமிழில் பதிவு செய்தல்.
  •  தனி வலைதளம் தொடங்கி தமிழிலக்கியங்களை அடையாளப்படுத்தல்.
  •  தனி வலைதளம் தொடங்கி இக்காலத்து வெளிவரும் ஆய்வுகளைப் பதிவுசெய்து அடையாளப்படுத்தல்.
  • அன்றாட  நிகழ்வுகளை நாளிதழ்களாக இருந்து பதிவு செய்தல்.
  • வார, மாத, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள் ஆரம்பித்து தமிழை வளர்த்தல்.
  • கவிதை எழுதுவதற்கும் சிறுகதை எழுதுவதற்கும் தனி வலைதளம் தொடங்கி முக்கியத்துவம் அளித்தல்.
என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
தமிழின் தட்டச்சு முறையும் இனி செய்ய வேண்டியனவும்
            கணித்தமிழாக மாற்றுவதற்குப் பெருந்துணையாக நிற்பது தட்டச்சு முறையே. தமிழைக் கணித்தமிழாக மாற்றினாலும் எழுத்துருவில் இன்னும் உலகளாவிய பொதுமுறையாக மாற்றம் பெறவில்லை. நூலாக்கப் பணிக்கு ஒரு தட்டச்சு முறையும் வலைதளத்தில் தமிழை வலையேற்றம் செய்வதற்கு  ஒரு தட்டச்சு முறையும் பின்பற்றப்படுகின்றன. இது மாறவேண்டும்.
ஒருங்குறி (Unicode) எனும் எழுத்துருவில் (Font) தட்டச்சு செய்தால் அவ்வெழுத்துரு பதிவு செய்யப்பெற்ற கணினி மட்டுமே திரையிடுகின்றது. பிற குறியீடுகளாகக் (Symbol) காண்பிக்கின்றன. இப்பிரச்சினையை முதலில் சரிசெய்ய வேண்டும். அதற்கு இது குறித்த ஆய்வுகள் நிகழ்த்தப்பெற வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டில் ஒருமுறை தட்டச்சு செய்தாலே போதும். அது எங்கும் எக்கணினியிலும் திரையிட்டுப் பார்க்க முடியும். வாசிக்க முடியும். ஆனால், தமிழில் அவ்வாறில்லை. NHM Writer எனும் மென்பொருளைப் (Software) பதிவிறக்கம் செய்து, கணினியில் நிறுவி, தட்டச்சு செய்து இணையத்தில் உலவச் செய்தால், அம்மென்பொருள் பதிவு செய்யப்பெற்ற கணினியில் மட்டுமே வாசிக்க முடிகின்றது. எனவே, இம்முறையை முதலில் மாற்ற வேண்டும். அதற்குச் செந்தமிழ், ஒருங்குறி, லதா, பாமினி, குறள், கம்பன் போன்ற தனித்தனியாக அமைந்திருக்கும் தட்டச்சு முறைகளை ஒருங்கு இணைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தட்டச்சு முறைகளை எழுத்தழகுகளாக (Font Style) மாற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழை ஆங்கில மொழிக்கு நிகராக கணித்தமிழாக உலவச் செய்வது எளிது என்பதை ஆய்வறிஞர்கள் உணர வேண்டும். இதற்கான முயற்சிகளை வெகுவிரைவில் தொடங்க வேண்டும்.
வலைப்பூவில் தமிழ் வளர்ச்சி
            ஒரு இணையதளம் வடிவமைத்து உலகத்தார் பார்வைக்குக் கொண்டு செல்ல குறைந்தது பத்திலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் வரை செலவாகின்றது. இச்செலவினத்துடன் நின்று விடுவதில்லை. மாதாந்திர, வருடாந்திர பராமரிப்புகளாக விரிந்து நிற்கவும் வாய்ப்புண்டு. இதனைப் பெரிதும் கூகுள் (google), வேர்டுபிரசு (Wordpress) போன்ற இலவச வலைதளங்கள் பூர்த்தி செய்கின்றன. இது போன்ற இலசவ வலைதளங்களைப் பயன்படுத்தி அனைவரும் தமிழை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.
            இதனை எவ்வாறு உருவாக்குவது? அதற்கு கூகுள் மின்னஞ்சல் முகவரி ஒன்றே போதும். www.blooger.com என்ற வலைதளை முகவரிக்குச் சென்று மின்னஞ்சலைத் திறக்க வேண்டும். அது வலைப்பூ உருவாக்கும் வழிறையைக் காட்டும். அதில்  வலைப்பூவின் பெயர் , வலைப்பூவிற்கான வலைதளப் பெயர் (Domain Name) மட்டும் பதிவு செய்தாலே போதும். தமக்கான வலைப்பூ உருவாகி விடும். இதில் ஒளிப்படம் (Photo), காணொளிப்படம் (Video) போல்வனவற்றையும் வெளியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
            இவ்வலைப்பூவில் அப்படி என்ன வசதி? எனக் கேட்கலாம். இதை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பதிவுகளை வாசிக்க முடியும். இவ்வசதி முகநூலிலோ கட்செவியஞ்சலிலோ கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இருப்பினும் அவ்விரண்டிலும் நாட்டமுடையவர்கள்  வலைப்பூ தொடங்கி, அதில் வெளியிடக்கூடிய கருத்துக்களை இணைப்பாகத் (Link) தந்தும் வெளியிடலாம் என்பது கவனிக்கத்தக்கது.
            ஒவ்வொரு தமிழறிஞர்கள் பற்றிய குறிப்புகளும், இன்னும் ஆக்கப்பூர்வமான பதிவுகளும் முகநூலிலும் கட்செவியஞ்சலிலும் உலவுகின்றன. இப்பணியை ஒவ்வொருவரும் செய்தல் என்பது இயலாத ஒன்று. ஆக, இப்பதிவைத் தத்தம் பதிவிலிருந்து வலைப்பூவிற்கு ஓர் இணைப்புக் கொடுத்தாலே  போதும். அப்பதிவுகளை எளிதில் தொகுத்துப் பார்க்க ஏதுவாக அமையும். அவ்வாறு தொகுத்துப் பார்த்தவற்றைப் பின்பு விக்கிபீடியா போன்ற பொதுநல வலைதளங்களுக்குத் தரவுகளாக அளிக்க இயலும். ஏனெனின் விக்கிபீடியா இன்று அனைத்துத் தரவுகளையும் தொகுத்து வைத்திருக்கும் மாநூலாய் விளங்குகின்றது.
வலைப்பூவில் தமிழ் வளர்ச்சியை மேம்படுத்த சில எண்ணங்கள்
          வலைதளத்தில் தமிழின் வளர்ச்சி எனப் பேசினால் விரிந்து நிற்கும். ஆயின், வலைப்பூவில் தமிழை வளர்த்தெடுக்கும் முறைகளைக் குறித்துச் சிறிது நோக்குவோம். வலைப்பதிவர்கள் தத்தம் படைப்புகளை அறிமுகப்படுத்துவதாகவும், தாம் பார்த்த, படித்த செய்திகளைப் பகிர்வதற்காகவும், பிறரின் படைப்புக் கலையை, ஆய்வுத் திறனை வெளிக்கொணர்வதற்காகவும் ஈடுபட்டு வருகின்றனர் எனலாம். இதுமட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதற்கான சில எண்ணங்கள் வருமாறு:
  • வலைப்பூ பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.
  •  கலை, பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம் என அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் வலைப்பூ பற்றி அறிமுகம் செய்து, தமிழில் எழுத ஆற்றுப்படுத்துதல்.
  • வலைப்பூ தொடர்பான கருத்தரங்குகளை நடத்துதல்.
  • வலைப்பூ வளர்ச்சி குறித்த இணையப் போட்டிகள் நடத்துதல்.
  • தமிழ் இலக்கியப் போட்டிகளை நடத்தி, அதனை வலைப்பூவில் பதிவு செய்ய அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விழிப்புணர்வு செய்தல்.
  •  வலைப்பூ இயக்கங்கள் மாவட்டந்தோறும் ஏற்படுத்துதல்.
  •  முகநூல், கட்செவியஞ்சல் ஆர்வலர்களையும் வலைப்பூ தொடங்கி எழுதத் தூண்டுதல்.
நிறைவாக, இதுபோன்ற அடிப்படைப் பணிகளை, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வெகுவிரைவில் தமிழர்தம் அடையாளங்களை, எண்ணங்களை இவ்வுலகத்தார் அறிந்து கொள்ளும்படிச் செய்ய இயலும். இதனை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் கணித்தமிழாய் இப்புவி எங்கும் ஓங்கும் என்பதில் ஐயமில்லை.

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                                    இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671

கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப் படைப்பே என உறுதியளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்ப மாட்டேன் எனவும் உறுதியளிக்கிறேன்.