ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.