Friday, October 17, 2014

திருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக்கொடை


முனைவர் மு.முனீஸ் மூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.சைவத்திருமடங்கள் 14. சமயப் பரப்புகையை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இம்மடங்கள் சமயத்தோடு தமிழை வளர்க்கவும் தலைப்பட்டன. இம்மடங்களைச் சேர்ந்தோர் வளர்த்த தமிழ் சைவத்தமிழானது. தத்தம் சமயக் கடவுளை முன்னிறுத்திப் பல புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துச் சைவத் தமிழ்த்தொண்டாற்றினர். திருமடங்களைச் சார்ந்தோரின் சைவத்தமிழ்ப்பணி ஒருபுறம் இவ்வாறிருக்க மறுபுறம் புறச்சமயக் காழ்ப்புணர்வு மனநிலையும் அரங்கேறியது. சைவர்கள் சைவ இலக்கியங்களைத் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களைப் படிக்கவே கூடாது என்றுவெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துதங்கள் மனநிலையை வெளிப்படுத்தினர் மடங்களைச் சார்ந்தோர். இந்நிலைப்பாடுகி.பி.18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது கவனத்திற்குரியது. இக்காலகட்டத்தில் திருமடங்களுக்கிடையே நிலவிய உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாக ஒரேசமயத்தைச் சேர்ந்த இருவேறுமடங்களைச் சேர்ந்தோரின் புலமை வெளிப்பாட்டை இருபிரிவினரும் எதிரெதிர் திசை நின்று விமர்சிக்கும் செயல்பாடு உச்சம் பெற்றது.

திருவாவடுதுறை மடம் X தருமை மடம்
சைவமரபில் தோன்றிய இவ்விரு மடங்களிடையே ஏற்பட்ட பூசலுக்கான காரணம் குறித்து வெளிப்பட அறியுமாறில்லை. எனினும் இவ்விரு மடங்களுக்கிடையேயான பூசலானது ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்துள்ளதனைத் தமிழிலக்கியப் படைப்பு/பதிப்புவரலாறு தெளிவுறுத்துகின்றது.
திருவாவடுதுறை ஆதின வித்துவானாகத் திகழ்ந்த உ.வே.சா. பத்துப்பாட்டைப் பதிப்பிக்கச் சுவடி தேடுகையில் சுவடிக் காப்பகங்களில் அவருக்கு நினைவுக்கு வந்த இடங்களுள் தருமபுர ஆதினமும் ஒன்று. பத்துப்பாட்டு – குறிஞ்சிப்பாட்டுள் இடம்பெறும் 99 மலர்கள் பற்றிய பாடலடிகளில் 3 மலர்கள் பற்றிய குறிப்பானது தனக்குக் கிடைத்த சுவடிகளில் விடுபட்டுக் காணப்பட்டமையின் விடுபாட்டைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உ.வே.சா. சுவடிகள் தேடித் தருமபுரமடத்துக்குச் செல்லத்துணிகின்றார்.
இருமடத்துக்கும் இடையேயான பழம்பகைமை அவர்தம் நினைவுக்கு வரவே, தனக்குத் தருமபுர ஆதினத்தார் உதவுவார்களா?, சுவடிதேட அனுமதி கிட்டுமா? என்று மனக்கலக்கம் கொண்டதனைப் பின்னாளில் உதிர்ந்த மலர்கள்எனும் கட்டுரையொன்றில் பதிவுசெய்துள்ளார் உ.வே.சா. (உதிர்ந்த அந்த 3 மலர்களை உ.வே.சா. தருமபுர மடத்திலிருந்தே பெற்றார் என்பது வரலாறு).
இருமடத்துக்குமான பழம்பகையை முன்னிறுத்திய புலமை சார்ந்த எதிர்மனநிலை 17ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது எனலாம்.
இலக்கணவிளக்கம் X திருவாவடுதுறைமடம்
தமிழ், வடமொழிப் புலமைமிக்க வைத்தியநாத தேசிகரால் (கி.பி.17ஆம் நூ.) வடமொழிமரபை அடியொற்றி மூலமும் உரையுமாக எழுதப்பட்ட நூல் இலக்கணவிளக்கமாகும் (குட்டித் தொல்காப்பியம் எனக் குறிக்கப்படுவது இந்நூலே). இவர் தருமபுர ஆதின வித்துவானாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் தமிழகத்தில் இலக்கணவிளக்கப் பயிற்சியைக் குன்றச் செய்யும் வண்ணம் திருவாவடுதுறை மடத்தார் நன்னூலை உயர்த்திப் பிடிக்கின்றனர். நன்னூலுக்கு விருத்தியுரை எழுதுகின்றனர் (சைவசமயப் பற்றுக் காரணமாகச் சங்க இலக்கியங்களையும் சமண பௌத்த வைணவ இலக்கியங்களையும் படிப்பவர்கள் சமயப் பற்றற்றவர்கள் என்றும் வீணர்கள் என்றும் 18ஆம் நூற்றாண்டில் சுவாமிநாத தேசிகருடன் இணைந்து பரப்புரை நிகழ்த்திய அதே சிவஞானமுனிவர்தான் (2001:61) பின்னாளில் சமணமுனிவர் இயற்றிய நன்னூலுக்கு உரைத்திருத்தம் மேற்கொள்கிறார்). இலக்கண விளக்கச் சூறாவளி எனும் கண்டன நூலைப் படைக்கின்றனர்.
இலக்கண விளக்கம் X இலக்கண விளக்கச் சூறாவளி
இலக்கணம், சமயம் முதலான துறைகளில் முன்னோர் கூறிய கருத்தை மறுப்பதற்குப் பின்னோர் பயன்படுத்தும் சொற்களுள் ஒன்று சூறாவளி என்பதாகும். அவ்வகையில் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கத்துக்கு மறுப்பாக எழுந்த நூலே இலக்கணவிளக்கச் சூறாவளியாகும். இந்நூலை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதினம் தந்த தமிழ்ச் செல்வம் எனப் போற்றப்படும் சிவஞானமுனிவர் (கி.பி.18ஆம் நூ.) ஆவார்.
இம்மறுப்பு நூலின் தன்மை குறித்து எழுதப்பட்ட இலக்கண விளக்கச் சூறாவளி – மறுப்புரை ஏற்புடையதா?’’ எனும் ஆய்வுக்கட்டுரை (சு.அழகேசன் & த.வேல்மயில், 2009) தரும் சிலமுடிவுகள் பின்வருமாறு:
Ø கண்டனமும் மறுப்புரையும் களித்தாடிய காலம் அது எனினும், வடநூற் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்த சிவஞானயோகிகள் எனப் புகழ் பெற்ற சிவஞானமுனிவர் குறிப்பிடும் இம்மறுப்புரைகள் நியாயமான முறையில் அமைந்தனவா எனும் ஐயம் எழுகிறது. பெரும்பான்மையான இடங்களில் இந்நூல் வலிந்து குற்றம் கூறும் நூலாகவேஅமைகிறது.
Ø ஆதினங்களுக்கு இடையேயான போட்டி முற்றும் துறந்த முனிவரையும் விட்டுவைக்கவில்லை. இன்னொரு ஆதினம் சார்ந்த புலவர் எழுதிய நூலில் வலிந்து குற்றங்களைச் சுமத்தி  நூலாசிரியரை அநியாயமாகச் சாடுகிறார்.
Ø அதேசமயம் தம் ஆதினத்தில் தமக்குமுன் வாழ்ந்திருந்த இலக்கணக் கொத்துஇயற்றிய சுவாமிநாத தேசிகருக்கு மறுப்பு எதுவும் எழுதவில்லை. அந்நூலில் முரண்பாடான கருத்துக்கள் பல இருந்தாலும் முனிவர் ஒன்றும் கூறவில்லை (2009:93).
இலக்கணவிளக்கப் பதிப்பு – ஏற்பும் எதிர்ப்பும்
தருமையாதினத்தைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் (கி.பி.17 ஆம் நூ.) இயற்றிய இலக்கண விளக்கத்தைச் சி.வை.தாமோதரனார் 1889ஆம் ஆண்டில் அச்சுவடிவில் பதிப்பிக்கின்றார். இப்பதிப்புக்குத் தேவையான ஏடு காகிதப் பிரதிகளை வழங்கியதோடு ரூ.100 நன்கொடையும் அளித்து உதவியவர் சுப்பிரமணிய தேசிகர். இவர் திருவாவடுதுறை மடத்தின் பதினாறாவது ஆதினமாகத் (1869-88) திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாவடுதுறை மடத்தாரின் (சுப்பிரமணிய தேசிகரின்) பேருதவியோடு தருமையாதின மடத்தாரின் இலக்கண விளக்கத்தைப் பதிப்பித்த சி.வை.தா. தமது பதிப்புரைக் குறிப்பில், இலக்கண விளக்கத்தின் மீதான கடந்தகாலப் பகைமை வரலாற்றைக் குறிப்பிட்டதனோடு மட்டுமின்றி, இலக்கண விளக்கத்துக்கு மறுப்பாகச் சிவஞானமுனிவர் இயற்றிய இலக்கண விளக்கச் சூறாவளியை அநியாயகண்டனம் என்று எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார். அந்நூலுள் குற்றமெனத் தான் கருதுவனவற்றுள் ஐந்தனை எடுத்து விரித்துரைக்கின்றார் (அக்கால கட்டத்தைப் பொறுத்தவரை நடுநிலையாளர் பார்வையில் சி.வை.தா.வினது விமர்சனம் வீண் வேலையே!). விளைவு – பழம்பகை மீண்டும் புகைய ஆரம்பித்தது. சி.வை.தா.வின் இலக்கண விளக்கப் பதிப்பில் (1889) சிலபல குறைபாடுகளைக் கண்டறிந்து இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு (1894) எனும் கண்டன நூலொன்றை வெளியிடுகின்றார் சபாபதி நாவலர். இவர் திருவாவடுதுறை ஆதினமாகிய சுப்பிரமணிய தேசிகரிடம் ஞான உபதேசக் கல்வி பயின்று அவ்வாதினத்திலேயே ஆதின வித்துவானாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (சி.வை.தா.வின் இலக்கண விளக்கப் பதிப்புநூல் வெளிவருவதற்குள் (1889), சபாபதியாரின் கண்டன நூல் வெளிவருவதற்குள் (1894) சுப்பிரமணிய தேசிகர் இறந்து விடுகின்றார். உயிருடன் இருந்திருப்பின் சபாபதியாரின் கண்டன நூலானது வெளிவந்திருத்தல் ஐயமே!).
இதுமட்டுமின்றி, சபாபதிநாவலர் சி.வை.தா.வின் வீரசோழியம் உள்ளிட்ட பதிப்புகளின் பதிப்புரைக் கருத்துகளில் விவாதத்துக்கு உரியவற்றை ஆய்ந்து தெரிவு செய்து அவற்றுக்கான கண்டனக் கருத்துரையை திராவிடப் பிரகாசிகை எனும் தமிழ் வரலாறு (1889) என்னும் தனது நூலின் பகுதியாக்குகின்றார்.
சி.வை.தா.மீது திருவாவடுதுறை மடத்தார் (சபாபதியார் உள்ளிட்டோர்) முரண்பாடு கொள்வதற்குப் பிறிதொரு காரணமும் உண்டு. சி.வை.தா.வின் முதல் பதிப்புநூல் நீதிநெறிவிளக்கம் (1854) ஆகும். இந்நூலின் ஆசிரியர் குமரகுருபரர் (கி.பி.17ஆம் நூ.). இவர் தருமபுர மடத்தோடு தொடர்புடையவர் ஆவார்.
கண்டன கண்டனம்
தருமபுர மடத்துக்கும் திருவாவடுதுறை மடத்துக்குமான இத்தகைய அறிவுசார் மோதல் போக்கானது சபாபதிநாவலரின் திராவிடப் பிரகாசிகையோடு நின்றுவிடவில்லை. சபாபதிநாவலரின் திராவிடப் பிரகாசிகைக்கு மறுப்பாகப் பின்னாளில் எழுந்த கண்டனநூல் திராவிடப் பிரகாசிகைப் பிழைகள் ஆகும். இக்கண்டன கண்டன நூலை எழுதியவர் யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.குமாரசுவாமி ஆவார். இவர் சி.வை.தா.வின் நண்பர் என்பதும் சி.வை.தா. (1876 இல்) ஏற்படுத்திய ஏழாலை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                      தருமபுர மடத்துக்கும் திருவாவடுதுறை மடத்துக்குமான புலமைசார் மோதல் போக்கை முன்னிறுத்தும் வரைபடம்.

                         தருமை மடம்             x                திருவாவடுதுறை மடம்

இலக்கண விளக்கம்                                  புலமைவழிப் பகைமை எதிர்ப்பு
(வைத்தியநாத தேசிகர்-17 ஆம் நூ.)

நன்னூல் விருத்தியுரை
(சங்கரநமச்சிவாயர்)

நன்னூல் உரைத்திருத்தம்
(சிவஞான முனிவர்-18 ஆம் நூ.)

இலக்கண விளக்கச் சூறாவளி
(சிவஞானமுனிவர்)

இலக்கணவிளக்கம் – பதிப்புபதிப்புக்குப் பேருதவி
(1889-சி.வை.தா.)(சுப்பிரமணிய தேசிகர்-19ஆம் நூ.)

இலக்கண விளக்கப் பதிப்புரைமறுப்பு
 (1894-சபாபதி நாவலர்)                            

துணைநின்றவை
1.   அழகேசன் சு. & வேல்மயில் த., 2009, இலக்கணத் தேடல்கள், காவ்யாபதிப்பகம், சென்னை.
2.   சபாபதிநாவலர், 1927, திராவிடப் பிரகாசிகை, சாது அச்சுக்கூடம், சென்னை.
3.   சம்பந்தன் மா.சு., 1997, அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
4.   சாமிநாதர் உ.வே., 2008, என் சரித்திரம், டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம், சென்னை.
5.   தாமரைக்கண்ணன் ப.(தொ.ஆ.), 1971, தாமோதரம், குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
6.   முனீஸ்மூர்த்தி மு., 2013, பத்தொன்பதாம் நூற்றாண்டின் புலமைச் செயல்பாடு: சி.வை.தா. & சபாபதி நாவலரை முன்வைத்து”, தங்கம், ஆர் கருத்தரங்க ஆய்வுக்கோவை, கரூர்.
7. வேங்கடசாமி மயிலைசீனி., 2001, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன