திங்கள், 25 ஜூன், 2018

வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்

இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக்  கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?

வேட்டைச் சமூகத்தில் பாலியல் பெண்ணை மையமிட்டதாகவும் கட்டுப்பாடற்றதாகவும் இருந்திருக்கிறது. குறிஞ்சித்திணையில் இருக்கின்ற ‘புணர்தல்’ எனும் ஒழுக்க வரையறையும் குறிஞ்சித்திணைப் பாடல்களில் வருகின்ற ‘புணர்ச்சி’ தொடர்பான பதிவுகளும் இக்கருத்தை மெய்ப்பிக்க வல்லனவாகும். பகற்குறி, இரவுக்குறி எனும் எத்தகைய குறியிடமாக இருந்தாலும் தலைவனின் இடப்பெயர்ச்சி (தலைவியைத் தேடிச் செல்லுதல்) முதன்மையானதாக இருந்திருக்கிறது. தலைவி தலைவனைத் தேடிச் சென்றதான எத்தகைய பதிவையும் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணமுடியவில்லை. மேலும், புணர்தல், புணர்ச்சி தொடர்பான இடங்களில் தலைவி, தோழி ஆகியோர் கூற்று நிகழ்த்துவதும் தலைவன் அல்ல குறிப்பிடும்போது தம் நெஞ்சிற்குள்ளோ அல்லது பாங்கனிடமோ புலம்புவதும் பெண்ணை மையமிட்ட பாலியல் சார்ந்த வேட்டைச் சமுக எச்சங்களாகக் கருதத்தக்கன. இத்தன்மை குறிஞ்சி, நெய்தல் பாடல்களில் மட்டும் மிகுதியாகக் காணப்பெறுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும் (குறிஞ்சி – விலங்கு வேட்டை என்றால் நெய்தல் – மீன்வேட்டை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்). சங்கப் பனுவல்களின் இப்பதிவுகள், பாலியல் தொடக்கத்தில் பெண்ணை மையமிட்டதாக இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாக அமைவனவாகும்.
https://www.inamtamil.com/va%E1%B8%BBviyala%E1%B9%9Fam-paliyala%E1%B9%9Fivu-pa%E1%B9%87%E1%B9%ADaittami%E1%B8%BBar/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன