Thursday, April 27, 2017

குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்

                                    ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
      தமிழ் இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும் இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும் கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள் நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும் ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும் கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற  உளவியல்கூறு எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

உளவியல் விளக்கம்
      உளவியல் என்பது மனிதனின் நடத்தைப் பற்றிய அறிவியல் துறை (Psychology is the science of behavior) என்று ‘ஜான் வாட்சன்’ குறிப்பிடுகின்றார். மேலும் மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன் மூலம் அவை, எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன என்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று விளக்குவதே உளவியலாகும்.
உளவியல் - இலக்கியம் தொடர்பு
            உளவியல் என்பது உள்ளத்தைப் பற்றிப் பல்வேறு செய்திகளை, தொகுத்தும், வகுத்தும் விளக்குவதாகும். உளவியலால் உள்ளத்திற்குத் தகுதியான இலக்கண வரையறைக் கூற இயலாதாயினும் அது உள்ளத்தை நன்கு விளக்கக்கூடியதாக உள்ளது. இன்று உளவியலும் இலக்கியமும் எம்முறையில் ஒன்றுபட இயலும் என்ற வினாவிற்கு வை.சித்தானந்தம் என்ற அறிஞா;,இரண்டுமே மனிதனுடைய அகநிலையைச் சார்ந்தவை அவனுடைய செயல்நோக்கங்கள் நடத்தை மற்றும் குறியீடுகளை உண்டாக்கி உபயோகிக்கும் திறனையே பேசுகின்றன என்றார். எனவே இலக்கியமும் உளவியலைப் போலவே மனித மனத்தின் பன்முகச் செயல்பாட்டைப் பல்வேறு நிலைகளில் ஆய்வதில் கவனம் செலுத்துகிறது. உளவியல் தோன்றுவதற்கு முன்னே பல வருடங்களாக இலக்கியம் இப்பணியைச் செய்து வருகிறது எனலாம்.
உளச்சிக்கல்கள்
      ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’[1] என்றார் திருவள்ளுவர். உளநலத்தை உருவாக்கிப் பாதுகாத்தல் எளிய செயலல்ல. உடலின் தேவைகள் நிறைவதால் மட்டும் உள்ளம் நிறைவுற்று விடுவதில்லை. இதற்கு மு.வரதராசன் உள்ளத்தின் தேவைகளே மக்களின் வாழ்க்கையில் கவலையை வளர்க்கின்றன. உள்ளத்தின் அமைதியும் தெளிவுமே மக்களுக்கு உண்மையின்பம் தருகின்றன[2] எனக் கூறுகின்றார். ஆகவே நலமான உள்ளம் பெற்ற மனிதன் தன்னுள் நிறைவும் ஒத்திசைவும் பெறுகிறான். சமூக நல்லிணக்கம் அவனது நடத்தையின் பொதுப்போக்காக இருக்கும். இதனை உளவியலாளர், உள்ளும் புறமும் ஒத்து வாழ்வதே நல்ல ஆளுமையாகும்[3] என்பர். தன்னளவில் முரண்பாடுகள் அற்ற ஒத்திசைவும் சமூக அளவில் நல்லுறவான இணக்கமும் உளநலத்தின் இருபெரும் கூறுகள் எனலாம். இப்பொருத்தப்பாட்டினைச் சிதைக்கும் சிக்கல்களை உளவியலாளர்,
1.    உள்ள முறிவு (Frustration)
2.    உள்ளப்போராட்டம் (Conflict)
3.    உள்ள இறுக்கம் (Pressures)
என மூவகைப்படுத்துவர்[4]. உள்ளம் முறிந்து இறுக்கம் உற்றுத் தவிக்கும் சூழல்கள் பல குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.
உள்ளப்போராட்டம் (Conflict)
      ஒரு விருப்பத்தை நிறைவுசெய்ய எண்ணும் மனம் உள்ளப்போராட்டத்திற்கு ஆளாகின்றது. தன் விருப்பம் சாpயா தவறா எனப் பாpசீலிக்கும்போது, சமுதாயத்தின் தாக்கத்தை உய்த்துணரும்போதும் உள்ளத்தில் போராட்டம் உருவாகும். இதனையே உள்ளப்போராட்டம் என்பர். மனிதனிடையே காணப்படும் இவ்வகையான போராட்டத்தைக் கா;ட்லீவின் என்னும் உளவியலாளர் மூவகைப்படுத்தியுள்ளார்.
1.    அணுகுதல் - அணுகுதல் போராட்டம் (Approach-Approach conflict)
2.   அணுகுதல் - விலகுதல் போராட்டம் (Approach - Avoidance conflict)
3.    விலகுதல் - விலகுதல் போராட்டம் (Avoidance - Avoidance conflict)[5]
அணுகுதல் - அணுகுதல் போராட்டம்
      அணுகுதல் - அணுகுதல் போராட்டம் என்பது ஒரே நேரத்தில் இரண்டு விதமான விருப்பங்களைப் பெற எண்ணுதலாகும். இரண்டுமே மிகமிக விருப்பமானவையாக உள்ளமையால் எதனைத் தொpவுசெய்து என உள்ளத்திற்குள்ளேயே போராட்டம் நிகழும். விரும்பத் தகுந்த இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாற்றுகளிடையே நிகழும் போட்டியை உள்ளடக்கியதே அணுகுதல் -அணுகுதல் போராட்டம்
      விரும்பத்தகுந்த இரண்டு இலக்குகளை நோக்கிய தலைவி ஒன்றைத் தொpவு செய்யும் நிலைக்கு ஆளாகின்றாள். சுமூகத்துடன் ஒட்டிய தீர்வையே தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக முடிவெடுப்பதற்கான நேரத்தைத் தள்ளிவைத்துப் போராட்டத்தை அவள் அணுகும்பிதமாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.
            நீ உடம்படுதலின் யான்தர, வந்து
            குறி நின்றனனே குன்ற நாடன்
            இன்றை அளவைச் சென்றைக் குன்றி
            கையும் காலும் ஓய்வன் ஒடுங்கித்
            தீஉறு தளிரின் நடுங்கி
            யாவதும் இலையான் செயற்கு உரியதுவே         (குறுந்.383:1-6)
உடன்போக்கிற்கு உடன்பட்ட தலைவி இறுதி நேரத்தில் தயங்கித் தவிக்கிறாள் தோழியின் முயற்சியால் உடன்போக்கிற்கு இசைவளித்த தலைவி குறித்த இடத்தில் தலைவனும் வந்து நின்றான். ஆனால் தலைவி ‘இன்று ஒருநாள் போகட்டும்’ என்று கூறுவதன் வாயிலாக அணுகுதல் - அணுகுதல் போராட்டத்தைக் காணமுடிகிறது.
அணுகுதல் - விலகுதல் போராட்டம்
      ஓர் இலக்கை அடைய விரும்பும்போது மற்றொன்றை இழக்க நோpடுவதே இவ்வகைப் போராட்டமாகும். ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெறமுடியும் என்பதே இப்போராட்டத்தின் கருவாக விளங்குகின்றது.ஓர் இலக்கினை அணுகவும், விலகவும் தூண்டும் வலுவான போக்குகள் ஒரே நேரத்தில் நிலவுவதே அணுகுதல்-விலகுதல் போராட்டமாகும். விருப்பங்கள் நிறைவேற்ற எண்ணும்போது துன்ப நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. மனவிருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் துன்பங்களை அடைந்தே தீரவேண்டும். இவ்வுள்ளப் போராட்டத்தை விளக்கும் வகையில் தலைவி இற்செறிக்கப்பட்டாள். தலைவனைக் கண்டு மகிழும் அணுகுதல் வேட்கையைச் சென்று காண்பதற்கு இயலாத தலைவியை சிறைச்சூழல் தடுக்கின்றது. பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறியாக வேண்டிய சூழ்நிலை விலகுதல் போக்காகும். தலைவனைத் தலைவியிடம் கொண்டு வந்து சேர்ப்பாரும் இல்லை. தன்னைத் தலைவனிடம் போகவிடுவாரும் இல்லை என்னும் கொடுமை தலைவியை நாளும் நலியச் செய்கின்றது. இக்கருத்தை குறுந்தொகை
      குப்பைக் கோழித் தனிப்போர் போல
      விளிவாங்கு விளியின் அல்லது
      களைவோர் இலையாம் உற்ற நோயே            (குறுந்.305: 6-8)
என்ற இப்பாடலில் தமக்குத்தாமே மோதிப் போரிட்டுத் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் கோழிகளைப் போல பெருகி வளரும் உணர்வுகளின் போராட்டத்தால் தலைவியின் உள்ளம் இறுக்கமாகி கவலையுறுகிறது. இம்மூன்று வகை போராட்டங்களில் அணுகுதல்-விலகுதல் போராட்டமே கடுமையானது என்று உளவியலாளர் கருதுகின்றனர். காரணம் சமுதாய நிலையும் வாழ்வின் இயல்பும் இன்பமும் துன்பமும் கலந்துள்ளமையால் இப்போராட்டம் கடுமையாக உள்ளது. விரும்பத்தகாத ஒன்றையேனும் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளமையால் இப்போராட்டமே கடுமையாக உள்ளது.
விலகுதல் - விலகுதல் போராட்டம்
      ஒரு நிகழ்வால் இரண்டு முடிவுகள் கிடைக்கக்கூடும். இரண்டுமே நம்மால் விரும்பப்படாவிட்டாலும் ஏதேனும் ஒரு முடிவை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்னும் சூழலால் விளைவது விலகுதல்-விலகுதல் போராட்டமாகும்.இரண்டு விரும்பத்தகாத இலக்குகளின் ஏதாவது ஒன்றை அடைந்தே ஆக வேண்டிய நிலையை விலகுதல்-விலகுதல் போராட்டம் என்பர். இத்தகைய போராட்டத்திற்கு ஆட்பட்டவன் பூதத்திற்கும் பெருங்கடலுக்கும் இடையே அகப்பட்டவன் போல இரு தீமைகளுக்கு இடையே குறைவான தீமையைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளான். இதற்கு சிறந்த சான்றாக குறுந்தொகைப் பாடல்
      தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும்
      பழியே பிரிவுதலை வரினே            (குறுந்.32:5-6)
என்ற வரிகளில் தோழியால் வாயில் மறுக்கப்பட்ட தலைவன் மடலேறக் கருதுகிறான். மடல் ஏறினால் இப்பெண்ணால் அன்றோ இவன் இந்நிலை உற்றான்  என ஊரவர் தலைவியைப் பழிப்பர். ஆகவே பிரிவை ஏற்று வாழ்தலும் இயலாது. மடலேறித் தூற்றுவதும் இயலாது. இரண்டையுமே தவிர்த்தே ஆக வேண்டிய நிலைக்குத் தலைவன் ஆளாகி இறுதியில் விலகி நிற்றலே சிறந்ததே என்னும் நிலை உருவாகின்றது. விலகுதல் - விலகுதல் போராட்டத்தை இப்பாடல் உணர்த்துகின்றது.
முடிவுரை
      உள்ளப்போராட்டம் என உளவியலாளர் கூறும் சூழல்களும், கருத்துக்களும் ஒன்றிநிற்கும் சூழல்கள் பல குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. உளவியல் கூறும் உள்ளப்போராட்டத்தின் மூன்று வகைகளும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன. மேலும் உள்ளப்போராட்டம் பெருமளவில் பழம்பெருமைமிக்க குறுந்தொகை இலக்கிய மாந்தர்களின் நடத்தைக்கும் பொருந்தியுள்ளன என்பதை இச்சான்றுகளின் மூலம் அறியலாம்.
[1] திருக்குறள், பரிமேலழகர் உரை, குறள்.457.
[2] ஐ.மனுவேல், உளச்சுகாதாரம், கலைக்களஞ்சியம் தொகுதி பத்து.
[3] C.Coloman James, Psychology and Effective Behaviour.
[4] தா.ஏ.சண்முகம், உளவியல், கழகவெளியீடு, 1960.
[5] பொ.வே.சோமசுந்தரனார், குறுந்தொகை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2007.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன