Sunday, April 16, 2017

தமிழ்க் கணிமையில் இனி…

இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுக்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்குவதில் நடுவண்நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கணினியில் தேவையான தன்னிறைவு பெற்றுவிட்டனவா? இல்லை என்பது விடையாக இருக்கும். சரி, இனித் தமிழ்க்கணிமை குறித்துச் சில எதிர்கால நோக்கங்களை இங்குக் காண்போம்.
தமிழ்மொழி
      உலக மொழிகளில் தமிழ்மொழி முதலில் தோன்றிய மொழி எனப் பெரும்பான்மையான ஆய்வறிஞர்கள் ஒத்துக்கொண்டு வருகின்றனர். இம்மொழிக்குத் தேவையான கணினித் தொழில்நுட்பக் கருவிகள் இன்னும் தன்னிறைவு பெறும் அளவுக்கு உருவாக்கப் பெறவில்லை. ஓரளவிற்கு வந்துவிட்டன. இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் தொழில் நுட்பங்களை முன்வைத்து, எதிர்காலத்தில் அத்தொழில்நுட்பங்கள் செம்மைபெற வேண்டிய சில சிந்தனைகள் ஒவ்வொன்றாகக் கீழே விரிகின்றன.
கூகுள் கையெழுத்துணரி
தொடுதிரைப் பேசிகளிலும் திறன்பேசிகளிலும் தட்டச்சிடுவதற்குக் கூகுள் நிறுவனம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. அது வரவேற்கத்தக்கது. எழுதுவதை உணர்ந்து கொண்டு தட்டச்சிடுவது அத்தொழில்நுட்பம். இதற்கு கூகுள் கையெழுத்துணரி (Google handwriting input) என்பது பெயர். இத்தொழில் நுட்பம் சிறப்பு வாய்ந்தது. இது தற்பொழுது சிற்சில மாற்றங்களை மேற்கொண்டால், இன்னும் சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பமாக அமையும் என்பது கருத்து. அதில் மேம்படுத்த சில எண்ணங்கள்.
Ø  சிற்சில எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள முடியாது ஒரு நிலை நிலவுதல் (சான்று: - v, U, ).
Ø  ஓரெழுத்து எழுதியவுடன் அவ்வெழுத்துத் தொடர்பான சொற்களைப் பட்டியலிடல்.
Ø  ஒரு சொல் எழுதியவுடன் அச்சொற்கள் தாங்கும் இடைச்சொற்கள் இணைந்த சொற்களைப் பட்டியலிடல்.
Ø  ஒரு தொடர் முடிந்தவுடன், அத்தொடரில் உள்ள பிழைகளை நீக்கித் தருதல்.
தட்டச்சுப்பலகை கூகுள் கையெழுத்துணரித் தொழில்நுட்பத்தில்
       தமிழ்மொழிக்கானத் தட்டச்சுப் பலகை வடிவமைக்கப் பெற்றுப் புழக்கத்தில் இருந்தாலும் அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இணையத்திலும் திரைக்கணினியிலும் (Desktop) முறையே தொங்கும் விசைப் பலகையும், தட்டச்சுப்பலகையும் புழக்கத்தில் உள்ளன. இதன்வழி ஒரு மொழிக்குறியீட்டுச் சொற்களை. உள்ளீடாகத் தந்து, தேவையான மொழிச் சிந்தனைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். பெரும்பான்மையானோரால் ஆங்கிலமுறை விசைப்பலகையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்வழித் தமிழ்மொழியை உள்ளீடாகத் தருவதற்கு நிரம்ப இடர்பாடுகள் நேருகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இன்று செல்பேசிகளில் (ஆண்டுராய்டு, ஆப்பில் போன்ற) பயன்படுத்தப்பெற்று வரும் கூகுள் எழுத்துணரி (Google Handwriting Input) பெரிதும் துணைநல்கும் என்றொரு சிந்தனைத் தோன்றுகிறது. அது எவ்வாறெனின், எழுதக்கூடிய அத்தொழில் நுட்பத்தைத் தட்டச்சுப் பலகையுடன் இணைந்து புதிதாக ஒரு தட்டச்சுப்பலகையை உருவாக்குவதாகும். இதன்வழித் தட்டச்சுச் செய்கின்ற நேரமும் முயற்சியும் குறையும். அத்தொழில்நுட்பக் கருவியை உருவாக்குவது சாத்தியம் தானா? சாத்தியம். திரையிலே செல்பேசியை இயக்கும் பொழுது, கணினியையும் இயக்க முடியாதா? முடியும். அத்தொழில்நுட்பக் கருவியை எப்படி உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்பதைப் பின்வரும் வரைபடம் விளக்கிக் காட்டும்.
இந்த வடிவிலான பலகை தட்டச்சுமுறை தெரியாதவர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும். இவ்வடிமைப்பில் ஒயரின் இணைப்பு இருத்தல் கூடாது. ஓர் எழுத்தாளன் எப்படி எழுத நினைக்கிறானோ அந்த வகையில் ஒரு A4 தாள் வடிவில் அக்கருவி இடம்பெற வேண்டும். இது மட்டும் சாத்தியம் என்றால் இது, உடனடியாகத் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள ஓர் எளிதான வழிமுறையாகும்.
மின்அகராதி
      அகராதி ஒவ்வொரு சொல் தேடலுக்கும் தேவையான ஒன்று, பெரும்பாலும் அகராதிகள் ஒரு சொல்லுக்கு மாற்றுச் சொற்களைத் தருவதாக அமைந்துள்ளன. ஒரு சொல்லின் பொருளைத் தருவதாகவோ, அச்சொல் உருவாகிய முறையை அல்லது அச்சொல் வெளிப்படுத்தும் சொல்லைத் தருவதாகவோ இல்லை. எடுத்துக்காட்டாக, புலி என்ற சொல்லின் பொருள் என்ன? அச்சொல் எப்படி உருவானது? என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருத்தல் சிறப்புடைத்து. அப்பொழுது ஒரு சொல்லின் பொருளை அறிந்துகொள்ள முடியும். இத்தன்மை நூல் வடிவத்தில் உள்ள அகராதிகளிலே கிடையாது. பிறகு எப்படி மின் அகராதிகளில் வரும். ஆனால், அதையும் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட முடியாது.
       இன்று செல்பேசிகளிலும் இணையத்திலும் உலவும் மின்அகராதிகள் யாருக்கானவை. கண்களால் உணரக் கூடியவர்களுக்கு மட்டும் பயன்படுவதாக உள்ளது. கண்தெரியாதார், கண்காது புலன்வழி அறிய இயலாதோர் ஆகியோரை கருத்தில் கொண்டும் மின்அகராதி உருவாக்கப்படல் வேண்டும்.
       ஒவ்வொரு சொல்லுக்கும் சொல் உருவானமுறை, அதன் அடிச்சொல், அது ஏற்படுத்தும் பொருள், அச்சொல் மொழியப்படும் ஒலிப்புமுறை, அச்சொல் எவ்வகையிலானது போன்ற தன்மைகள் உடையனவாக அமைதல் வேண்டும். இவ்வகையிலான அகராதி எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பின்வரும் படம் காட்டும்.
சொல் தேடல்
பொருள் கேட்பு ஒலிப்பேழை
தடவுமுறை(பிரெய்ல்) வழி அறிதல்
மின்அகராதி     சொல்லுக்கான பிறசொல்
சொல் ஒலிப்புமுறை
சொல் வகை
மின்னூல் பதிப்புகள்
இனிவரும் காலங்களில் இணைய வழியான பயன்பாடு மிகுதியாக இருக்கும். அதற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்வது காலத்தின் கட்டாயம். அச்சுப் படியாக உள்ளவை, மின்படியாக உருமாறிக் கொண்டிருக்கிற காலம். இதனை வெளிநாட்டினர் நன்குணர்ந்து விட்டனர். ஆனால், தமிழகம் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் இன்னும் இணையத்தில் கால்கொள்ளவில்லை. தத்தம் பதிப்பகங்களுக்கான விளம்பரப் பலகைகளாக இணையத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. மின்னஞ்சல் மூலம் பெற்று, தனிக்குழு அமைத்து மின்னூல் உருவாக்கி இணையத்தில் உலவ விடுகின்றன சில நிறுவனங்கள். அவற்றுள் freetamilebooks.com, kakithampublications.com போன்றவற்றைக் கூறலாம். இவர்கள் செய்யும் மின்னூல் பதிப்புப்பணி போதாது. இதில் ஈடுபடுவர்களுடைய வேலை நேரம் போக, மீதமுள்ள நேரத்தில் இப்பணி செய்யும் பொழுது கால தாமதம் ஆகும். இது தவிர்க்கப்படல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தானாக நூல் பதிப்பிக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும். இதனை www.lulu.com, www.lightswitch.com, www.pressbooks.com போன்ற அயல்நாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
       இந்நிறுவனங்களுள் லூலூ நிறுவனத்தின் பணி சிறப்புடையது. இது ஆசிரியரையோ, பதிப்பாசிரியரையோ நூல் உருவாக்க வழிவகை செய்து தந்துள்ளது. இது நூல் பதிப்பிப்பதற்கு எந்த ஒரு கட்டணத்தையும் பெறுவது கிடையாது. ஆனால் விற்பனையிலிருந்து 80% விழுகாட்டை அந்நிறுவனம் பெற்று கொள்கிறது. இருபது விழுக்காடு நூலாசிரியரின் பங்காக paypal மூலமாகவோ, காசோலை மூலமாகவோ நூலாசிரியருக்கு வந்து சேருவது மாதிரியான வழிவகையை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதற்காக இதில் குறை இல்லை என்பது பொருளன்று. காலதாமதம் ஆனாலும் ஒரு நல்ல நூல் வெளிவர வேண்டும் எனும் அச்சாக்கப் பதிப்பகத்தாரிடம் இருக்கும் எண்ணமும் இதில் இடம்பெற வேண்டும் என்பதே இங்கு முன்வைக்கும் முக்கிய நோக்கமாகும்.
       ஏனெனில் யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் என்ற நிலை வரும்பொழுது குப்பைகளும் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளன. இது தவிர்க்கப்பட அச்சாக்கப் பதிப்பகம் போன்று ஆசிரியர் குழு இதிலும் ஈடுபட்டு, வெளியிடத் தகுந்த நூல் என்பது உறுதி செய்யப்பெற்ற பிறகு அந்நூலாசிரியர் அவர்தம் நூலை வெளியிடுவதற்குரிய வழியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது நல்ல நூல்கள் இணையத்தில் உலவ வழி ஏற்படும். இதனைத் தமிழுலகம் விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன்வழி அச்சாக்கத்தின் வழி அழிந்து கொண்டிருக்கும் நூல்களும் மீட்டுருவாக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, பதிப்புலகில் தமிழுலகம் செய்ய வேண்டிய சில எண்ணங்கள்.
Ø  நூல் பதிப்பதற்கான புதிய தளங்கள் உருவாக்குதல்
Ø  புதிய நெறிமுறைகள் கொண்டு வருதல்
Ø  இருக்கக் கூடிய பதிப்பகங்கள் புதிய தளங்கள் உருவாக்கி, அதனூடே படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் தங்களுடைய தரவுகளைத் தருவதற்கு வழிவகை செய்து தருதல்.
Ø  நூல் அமைப்புகளை உருவாக்கி, அதற்கு இவ்வளவு விலை என மதிப்பிட்டுத்தருதல்.
குறுஞ்செயலி
      மின்னூலின் அடுத்த வளர்ச்சி குறுஞ்செயலி எனலாம். இன்று ஓரளவிற்கு அனைத்து நூல்களும் குறுஞ்செயலிகளாக மாற்றம் அடைந்து விடுகின்றன. அதற்கு ஏற்பத் தொழில்நுட்பத்திலும் அதற்குரிய வசதியை ஏற்படுத்தித் தருதல் காலத்தின் கட்டாயம். குறுஞ்செயலி  உருவாக்கத்திற்குப் பிற நாட்டினரால் மாதிரி அமைப்புடைய நிறுவனங்கள் நிரம்ப உள்ளன.
       தமிழுக்குத் தேவையான வளர்ச்சி, இல்லை. தமிழ் அறிந்தவர்களால் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கான மாதிரிகள் அடங்கிய  இணையப் பக்கத்தை உருவாக்கப்பட்டால்தான், தமிழின் அனைத்து நூல்களும் குறுஞ்செயலிகளாக ஆக்கம் பெறும். அதற்கு அனைவரும் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கான மாதிரி அமைப்புகளை உருவாக்கி இணையத்தில் உலவ விட வேண்டும்.
       ஏனெனில் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கு ஜாவா (Java) தெரிந்திருக்க வேண்டும். இதனை அனைவரும் கற்றுக் கொண்டு உருவாக்குவது என்பது சாத்தியப்படாத ஒன்று. இதனால் உலகின் தொன்மையான மொழியாகிய தமிழில் கிடைக்கப்பெற்ற தொல்காப்பியம் குறுஞ்செயலியாக இன்னும் வெளிவரவில்லை. இப்பொழுதுதான் முனைவர் துரை.மணிகண்டன் போன்றவர்களால் ஆங்காங்கு ஆய்வு மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இப்படி ஆய்வு மேற்கொண்டு  ஒரு குறுஞ்செயலி உருவாக்கம் செய்வது காலதாமதம் ஏற்படும். அதனைத் தவிர்க்க மாதிரி அமைப்புடைய குறுஞ்செயலி உருவாக்க இணையப் பக்கங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
       அடுத்து, இன்று முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. இன்றைய தலைமுறை திரைசெல்பேசியை இயக்குவதில் படுவேகமாகச் செயல்படுகின்றனர். அவர்களாகவே குறுஞ்செயலியைப் பதிவிறக்கி இணைய விளையாட்டுகளை விளையாடுகின்றனர். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் பொழுது அவர்களின் கவனம் செல்லின் இணைய விளையாட்டில்  மூழ்கிக் கிடக்கின்றது. இப்படியே சென்றால் இனிவரும் தலைமுறையும் உடல், மனம் என அனைத்திலும் நோய்வாய்ப் பட்டவர்களாக மாறிவிடுவர். ஆதலின் அதற்கேற்ப குறுஞ்செயலிகளில் நம் பண்பாட்டுடன் கூடிய விளையாட்டு வகையிலான கற்பித்தல் செயலிகள் உருவாக்கப்படல் வேண்டும். அதன்வழி ஒழுக்கமும், நூல்வாசிப்பின் அருமையையும் எடுத்துரைக்க வேண்டும். அதனை விரைந்து செயல்படுத்திட தொழில்நுட்ப வல்லுநர்கள் சிந்திக்க வேண்டும். அதுதான் இன்று நாம் செய்யக்கூடிய முக்கியப் பணியாக இருக்கும். இதனை மேம்படுத்துவதற்குரிய சில எண்ணங்கள் வருமாறு:
Ø  எளிய முறையில் குறுஞ்செயலி உருவாக்கத்திற்கான கற்பித்தலை நிகழ்த்துவது.
Ø  குறுஞ்செயலி உருவாக்கி, அதன்வழிச் சந்தைப்படுதுவதற்கான வழிமுறையைத் தருவது.
Ø  குறுஞ்செயலி உருவாக்க அமைப்புகள் தாங்கிய தளங்களை உருவாக்கித் தருதல்.
Ø  தமிழ் எழுத்துரு பிரச்சினை இல்லா தளங்களை உருவாக்குதல்.
காணொளி
       இன்றைய தலைமுறையினர் எதனை அறிந்து கொள்வதாக இருந்தாலும் காணொளிகளைத் தேடுகின்றனர். இந்த ஊடகம் மிக முக்கியமானது. இதில் தமிழுக்கான ஆக்கக் காணொளிகள் மிகக் குறைவு. ஒரு ஆங்கில மொழியைக் கற்பதற்கு நிரம்ப காணொளிகள் உள்ளன. தமிழைக் கற்றுக் கொள்வதற்கு எண்ணிவிடும் அளவிற்கான காணொளிகள்தான் உள்ளன. இக்குறை முதலில் தீர்க்கப்பட வேண்டும்.
       அடுத்துக் காணொளியில் நாம் செய்யவேண்டிய முக்கியமான பணிகளுள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சங்க மருவிய இலக்கியம் தொடங்கும் பல்வேறு இலக்கியங்களும் அசைவூட்டக்காணொளிகள் (Animation video) உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளை ஈர்க்கும் தன்மையில் அக்காணொளி அமைதல் வேண்டும். இதில் தமிழ்நாட்டில் மறைந்துபோன அல்லது மறைந்து கொண்டிருக்கிற விளையாட்டுக்களை அசைவூட்ட முறையில் உருவாக்கி, அதன்வழி இலக்கியத்தைக்/மொழியைக் கற்றுத்தர வேண்டும். அப்பொழுது எதிர்காலத் தலைமுறை மரபுசார்ந்து வாழவும், சிந்திக்கவும் வழி ஏற்படும்.
       இன்றைய தலைமுறையினர் தமிழ் மொழியைப் பிழையுடன் எழுதத் தெரியாது எனக் கூறுவோரும், எழுத அஞ்சுவோரும் நிரம்ப உள்ளனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் இலக்கணம் கற்றுத்தரக் கூடிய காணொளிகள் அதிகம் உருவாக்கப்பட வேண்டும். இதில் அனிமேசன் முறைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, குழந்தைகளுக்குக் கற்பித்தலை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது எதிர்காலத் தலைமுறையினர் பிழையின்றி எழுத முற்படுவர்.
தேடல் கருவி
      இன்று ஏதாவது ஒன்று தேட வேண்டும் என்று சொன்னால் உடனே நம்முடைய நினைவுக்கு வருவது, கூகுள். தேடல் கருவிகளில் அது சிறந் விளங்குகிறது. இதில் இன்னும் தமிழ்மொழித் தன்னிறைவு பெறவில்லை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில்  Amma என்று தட்டச்சிட்டால், அமிர்தானந்தமயி என்பவருடைய ஆங்கிலக் குறிப்புகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இது ஏற்புடையத் தகுந்த தேடலாக இல்லை. ஒரு சொல் ஆங்கிலத்தில் தட்டச்சிடப்பட்டாலும் அல்லது பிறமொழியில் தட்டச்சிடப்பட்டாலும் அச்சொல்லுக்குரிய மூலமொழி எதுவோ, அம்மூலமொழியில் அச்சொல் தரும் முதன்மைக் குறிப்புகள் முதலில் காண்பிக்க வேண்டும். அதுவே சரியானத் தேடலாக இருக்கும். அதற்குத் தொழில் நுட்பத்தை நாம் இன்னும் அடுத்தக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
எழுத்துருக்கள்
      தொடக்க காலத்தில் தமிழை வாசிப்பதற்கு தமிழ் எழுத்துக்களையும் அனுப்பப் பெறுதல் வேண்டும். அந்தச் சுமை இன்று ளவு குறைந்துவிட்டது. அதற்குக் காரணம் ஒருங்குறி முறை வந்தாகும். ஆனால், அதில் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஆங்கிலத்தில் வந்தமைபோன்று தமிழுக்கும் வர வேண்டும். ஒருமுறை தட்டச்சிட்டால் போதும், எவ்வெழுத்துருக்களை பல்வேறு வடிவழகுகளாக மாற்றிக் கொள்ளலாம். தமிழில் இல.சுந்தரம், செல்வ முரளி, சுந்தரம் போன்றோர் உருவாக்கியிருக்கும் எழுத்துருக்கள்தான் எழுத்தகுகள் உடையதாக இருக்கின்றன. தமிழ் எழுத்துருக்கள் நிரம்ப இருந்தாலும் செந்தமிழ் எழுத்துரு போன்று இருநூறுக்கு மேற்பட்ட எழுத்துருக்கள் ஒருங்குறியாக உருவாக்கப் பெறுதல் வேண்டும். அப்பொழுதுதான் அட்டைவடிவமைப்பிற்கும், நூல் உருவாக்கத்திற்கும், இணையப் பக்கத்தை அழகுடன் வைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும்.
எழுத்துரு மாற்றிகள்
       சாதாரன பதிப்புக்குப் பயன்படுத்தும் எழுத்துருக்களை இணையத்தில் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு NHM, பொங்குதமிழ் போன்ற மென் பொருள்கள் வந்துள்ளன. இவை தமிழில் உள்ள அனைத்து எழுத்துருக்களையும் மாற்றித் தருகின்றவை என்பதில் ஏமாற்றமே நிகழ்கிறது.
ஒருங்குறி எழுத்துரு வருவதற்கு முன்பு செந்தமிழ் ஐஸ்வர்யா போன்ற எழுத்துருக்களைப் பயன்படுத்தியே தட்டச்சிட்டு வந்துள்ளனர். அவையனைத்தையும் புதிதாகத் தட்டச்சிட்டுப் பதிவேற்றயும் செய்வது என்பது எளிதான காரியம் அன்று. ஆதலின் எழுத்துருக்களை மாற்றும் எழுத்துரு மாற்றிகளை இன்னுமு தரப்படுத்த வேண்டும். அல்லது மெருகூட்ட வேண்டும்.
       இதுவரை விளக்கப்பட்டவை எதிர்காலத்தில் கணினித் தமிழில் நாம் செய்ய வேண்டியவை. இதுபோன்ற பணிகள் இன்னும் நிரம்ப உள்ளன. இதுபற்றிய எண்ணங்கள் வெளிவர வெளிவர அதன் தொழில் நுட்ப வளர்ச்சியும் வளரும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன