Thursday, May 7, 2015

பொறுத்திரு! வாழ்வு கனிந்திடும்!

இயந்திர வரவிற்கு முன்பு மனிதன் மனிதனாய் இருந்தான். இன்று இயந்திரம் போன்று தம்மின் வாழ்க்கையையும் மனிதன் அமைத்துக் கொண்டு விட்டான். அது, இன்ப வாழ்வை இடியாய்த் தகர்த்தது தகர்த்துக் கொண்டும் வருகின்றது. எங்கும் வேகம். எதிலும் வேகம். வேகத்தின் ஊடே மனிதனின் மனமும் மயிலிறகாய் உதிர்ந்துவிட்டது. தத்தம் குழந்தைகளின் சேட்டையைக் கூட பொறுத்துக் கொள்ள மனித மனம் இடங்கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு மனிதனின் மனம் தூசாய் மன்றிவிட்டது. ஆயின், குழந்தை மனமும் நஞ்சாய் மாறிக் கொண்டிருக்கிறது. இது அழிவை நோக்கிய ஒரு பயணமே. அது எப்படி? ஒரு நல்ல நீர்க்குடத்தில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால், அந்நீர் முழுவதும் நஞ்சாய் மாறுவது போல்வதே.

பொறுத்தலே நம்மின் வாழ்வைச் சீர்தூக்கும். அதனை உணர்ந்த முன்னோர்கள் விதியாக அமைத்து அறிவுரை கூறினர். அவ்வாறு கூறியவர்களில் குறிப்பிடத்தக்கவர் வள்ளுவர். அவர் வகுத்த விதிகளை நம்மில் எத்தனை பேர் ஏற்று வாழ்கின்றோம். வாழ்வோரை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்தளவிற்குப் பொறுமை என்பது பொடியாய்க் காற்றில் மிதந்து விட்டது. தமிழன் மட்டுமன்று உலகில் உள்ள அனைத்து அறிஞர்களும் பொறுத்திருத்தலே தலையாய பண்பு என்கின்றனர்.
தமிழில் வள்ளுவன் பொறையுடைமை எனும் அதிகாரத்தில் பத்துப் பாக்களின் மூலம் பொறுமை மனிதனுக்கு இருக்க வேண்டிய பண்புகளுள் தலையாயது என்கிறார். அப்பாக்களுள் பொறுத்திருக்கும் பண்பு குறித்து
தம்மை அவமதிப்பாரைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும் (151)
பிறர் செய்த துன்பத்தையும் அவரையும் மறத்தல் வேண்டும் (152)
அறிவில்லாரின் அறிவில்லாச் செயல்களைப் பொறுத்தல் (153)
நிறைய குணங்கள் நீங்காதிருக்கப் பொறுத்தல் வேண்டும் (154)
பிறர்செய்த தீமைகளைப் பொறுத்தல் வேண்டும் (155)
பிறர்செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்வார் என்றும் புகழுடன் விளங்குவர் (156)
ஒருவர் தீமை செய்யினும், அதே தீமையை அவருக்குச் செய்யாதிருத்தல் வேண்டும் (157)
செருக்கு, செல்வம், அதிகாரம் ஆகியன கொண்டு தமக்குக் கொடுமை செய்வாரைத் தாம் காட்டும் பொறுமையினால் வென்றுவிடுதல் வேண்டும் (158)
பொறுப்பவர் துறவிகளை விடத் தூய்மையானவர் (159)
கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர் முனிவாpனும் மேலானவர் (160)
எனக் கூறி நிற்கின்றன. இக்கருத்துக்களின் மூலம் தலையில் இடியே விழுந்தாலும் பொறுத்துக் கொள்ளும் பண்பானது அமைந்திடின் நலம்பயக்கும் என்பதை உணர முடிகின்றது.
          இச்சிந்தனைச் சங்க இலக்கியங்களின் ஊடேயும் பதிவாகியுள்ளன. அவை, பொறுக்கல்லா (கலி.58 - 21), பொறுக்குநர் (புற.63 - 8), பொறுக்கும் (புற.43 - 18), பொறுத்தல் (நற்.99 - 7, 354 - 13, கலி.132 - 14, புற.27), பொறுத்தார் (பரி.தி.1 - 75), பொறுத்து (குறு.287 - 3, அக.34 - 3, புற.58 - 3), பொறுத்தேன் (கலி.142 - 55), பொறுப்ப (பதி.41 - 2), பொறுப்பா; (கலி.105 - 59) என்ற சொல்லாட்சிகளின் வழியும் அமைந்துள்ளமையை அறியலாம். காட்டாக,
          பொறுத்தல் செல்லா திறுத்தன்று வண்பெயல்          - நற்.99:7
          தான்அது பொறுத்தல் யாவது வேனல்           - நற்.354:1
          பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்    - கலி.132:14
          போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்         - புறம்.2:7
ஆகிய பாடலடிகளைக் காட்டலாம். இவை, பொறுத்தலின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றன. ஆக, பொறுத்தல் என்பது மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஓர் அறமாகும். இவ்வறத்தினையே இந்திக் கவிஞன் கபீரும் அறைகூவுகிறான். இவன் பொறுத்துக் கொள்ளும் பண்பு குறித்து,
சிறியவர் தரும் தொல்லைகளைப் பொறுத்துக் கொள்ளும் குணம் பெரியவர்களுக்கு வேண்டும் (569)
தயை இருப்பின் அறம் இருக்கும். பேராசை வாய்ப்பின் பாவம் இருக்கும். வெகுளி வந்திடின் எமன் இருப்பான். பொறுமை நிலைத்திடின் இறைவன் அடைவான் (570)
இடிபோன்ற தீயோர் சொல்லைச் சாதுக்கள் தள்ளுவர். கடலில் இடி விழுந்தால் எதையும் எரித்தா விட முடியும்? (571)
தோண்டித் தொலைத்தளைப் பூமிதான் பொறுத்துக் கொள்ள முடியும். வெட்டுதலையும் இடித்தலையும் காடுகளே சகித்துக் கொள்ளும். தீயோர்க் கடுஞ்சொற்களைச் சாதுக்கள் தான் சகித்துக் கொள்ளும். பிறரான் பொறுத்துக் கொள்ள முடியாது (572).
என நவின்றுரைக்கின்றார். எனவே, பொறுத்தல் என்பதையே குறிக்கோளாகக் கொண்டுவிடின், வாழ்க்கையில் துன்பங்களே இராது, துயரங்கள் நெருங்காது. இக்காலத்தே கணவன் மனைவி இடையே ஊடும் ஊடலால் குடும்பநல நீதி மன்றங்கள் கைகொட்டி நகைக்கின்றன. பொறு என்பதை மனிதனின் மனதில் ஆழ பதிக்காதன் விளைவே இது எனின் மிகையாகாது. ஆயின் பொறுப்போம்; மறப்போம்; இனிதாய் வாழக் கற்போம். அதை ஆழப் பதிப்போம்! வாழ்வை இனிதாக்குவோம்! என உறுதிமொழி எடுத்துக் கொள்வோமாக!

துணைநின்றன
அறவாணன் க.ப., 2007, திருக்குறள் : தெளிவுரை, சிறப்புரை, விளக்கம், கருத்து, தமிழ்க் கோட்டம், சென்னை.
சக்திதாசன் சுப்பிரமணியன், 2008, கலித்தொகை, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
துரைசாமிபிள்ளை ஔவை சு., 2008, நற்றிணை (1,4), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
…………, 2008, புறநானூறு (1), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திருக்குறள் தமிழ் மரபுரை (அறத்துப்பால்), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

சேஷாத்ரி தி.(மொ.ஆ.)., 1992, கபீர் அருள் வாக்கு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.

முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி
கோவை, தமிழ்நாடு, இந்தியா
9600370671

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன