புதன், 1 ஏப்ரல், 2015

தமிழ்க்கதிர் முப்பதில் பன்முகத் தன்மை

வெண்பா என்றால் நம்மின் நினைவில் நிற்பது சங்கப் பாடல்களும் ஔவையார் பாடல்களும் காளமேகப் புலவர் பாடல்களுமே. இக்காலத்தில் புதுக்கவிதை, ஐக்கூ, ஒருவரி போல்வன கவிதைகளுக்கே சிறப்பிடம் உண்டு, பழங்கதை வடிவமான வெண்பாவில் எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. அத்தகையோரில் ஒருவரே தகடூர்த் தமிழ்க்கதிர். அவர் எழுதியிருக்கும் வெண்பாக்கள் நிறைய உள. அவற்றுள் தமிழ்க் கதிர் முப்பது எனும் தொகுப்பின் சிந்தனைகளுள் பன்முகத் தன்மைகளைச் சுட்டிக்காட்டகின்றது இக்கட்டுரை.
இவரின் இத்தொகுப்பில் முப்பது வெண்பாக்கள் உள. இத்தொகுப்பு, தமிழ்வழிக் கல்வி வெண்பா விளக்கு எனும் இதழில் வெளிவந்துள்ளது. இவ்விதழின் நோக்கங்கள்: 1.தமிழ்வழிக் கல்வி வெண்பாவைத் தொடர்ந்து வெளியிடுவது, 2.வெண்பா தமிழரங்கம் எனத் தமிழ் மொழியில் பல்துறையைப் பாடுவது, 3.தமிழறிவால் உலகின் (நமது உலகம் பகுதி) மேன்மையைக் காப்பது எனும் முக்கொள்கையை உடையதாக விளங்குகின்றது (2015:2). இச்சிறப்புமிகு இதழில் வெளிவந்த தொகுப்பே தமிழ்க்கதிர் முப்பது. இத்தொகுப்பால் இடம்பெற்ற முப்பது வெண்பாக்கள் கல்விழி நூலாசிரியன் சிறப்பு, நூலின் சிறப்பு, மனிதன் வாழ வேண்டிய வழிமுறை, இயற்க்கையின் சிறப்பு, உலகப் பொதுமையை ஏற்கும் தன்மை, சங்கப்பாடல்களின் சிறப்பு, வாழ்க்கை, படைப்பாற்றல், பொதுநலம் போல்வன கருத்துக்களை மையமிட்டனவாக அமைந்துள்ளன. அவை குறித்து சிறிது விளக்குதும்.

கல்வியின் சிறப்பு
          மனிதப் பிறவியின் பயன் பகுத்தறியும் பண்பேயாகும். அதனால் தான் இன்று அறிவியலில் சிந்தனை செய்து பார்க்க முடியாத அளவிற்குக் கால்பதித்து வருகிறோம். அதற்கு அடிப்படை கல்வி அறிவு எனின் மிகையாது. அச்சிறப்புமிகு கல்வியை மிகுதியான வெண்பாக்களில் வலியுறுத்துகின்றார் தகடூர்த் தமிழ்க்கதிர். அவற்றுள் சில வருமாறு:
       வாழைமரம் தன்கையால் வந்தோர்க்குச் சோரிடுமே
       ஏழைமரம் என்றாலும் இன்பமுடன் – கோழையரைத்
       தேற்றும் கனிஈயும், தான்கற்ற கல்வியினை
       ஏற்றுவீர் அஃதற்றோர்க் கே.                    - பாடல்.6
      மண்ணில் பிறந்துமே வாழ்பவர் யாவர்
      கண்ணாய்ப் பிறா;க்குக் கனிந்திடுவோம் - எண்ணத்தில்
      என்றும் எழுச்சிவிதை ஈகின்ற கல்வியினை
      நன்றுதர நிற்போமே நாம்                         - பாடல்.17
இவ்விரு பாடல்களும் கல்வி என்பது அனைவருக்கும் வேண்டும் என்று, வலியுறுத்துகின்றன. அவற்றுள் முதற்பாடல், வாழைமரம் வந்தவருக்குச் சோறிடுவது போன்று கல்வியினை ஏழைகளுக்கும் ஏற்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்துகிறது. இரண்டாவது பாடல், எண்ணத்தில் என்றென்றும் எழுச்சிவிதையாக அமையும் கல்வியை இம்மண்ணில் பிறந்தார் யாவருக்கும் அளிக்க வேண்டும் என்கின்றது. ஆக, இன்னும் கல்வியானது அனைவருக்கும் சென்று சேரவில்லை என்பதை இவ்விரு பாடல்களும் புலப்படுகின்றன.
நூலும் ஆசிரியரும்
கல்வியை மேம்படுத்துவது எழுத்துக்கள் தாங்கிய நூல்களே அந்த நூல்களின் சிறப்பை எடுத்துரைத்தால்தான அந்நூலை வாசிக்கும் வாசகர் எண்ணிக்;கைப் பெருகும். அதனாலே நூலாசிரிர் கருத்துக்களுக்கு முன்பு, அக்கருத்துகள் பற்றிய பிறவறிஞர்களின் அணிந்துரையோ மதிப்புரையோ வாழ்த்துரையோ வைக்கப்படுகின்றன. அப்பணியைப் பாடலின் மூலம் இவா; வெளிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஏனெனின் நூலைப் பார்த்து, அதன் பின்பு அந்நூலின் சிறப்பை அறிந்து வாசிப்பதற்குப் பதில் ஒரு நூலின் சிறப்பை அறிந்து வாசிப்பதற்குப் பதில் ஒரு நூலின் சிறப்பை பாடல் மூலம் அறிந்து அந்நூலைத் தேடுவது எளிது. அந்தப்பணியைச் சிறப்புற அமைத்துத் தந்துள்ளார் தகடூர்த் தமிழ்க்கதிர்.
          அலைஅலையாய் வீசும் அயலகடல்போல் முப்பால்
          நிலையுயர்த்தச் சிந்தனை மீட்டும்! - மலைபோலே
          என்றென்றும் நின்றிடும் இந்நூலை வள்ளுவர்
          நன்றாய்ப் படைத்தார் நவில்           - பாடல்.20
          இமய வரைபோல் இலக்கியம் கொண்டே
          அமைந்ததாம் பாரில் அழகாய் - நமைவளர்க்கும்
          சங்க இலக்கியம் சாற்றும் அறநெறி!
          எங்கும் புகழோ எழில்.                     - பாடல்.25
          விஞ்ஞானி ஆவோர் விரும்பிக் குறள்கற்றால்
          எஞ்ஞான்றும் நல்விழிப்பே ஏற்கவரும் - விஞ்சும்நற்
          பாங்குவரும் ஆர்வமுடன் பற்றிடவே நற்படைப்பும்
         ஒங்கிடும் என்றும் உணர்                - பாடல்.30
இவை திருக்குறளையும் சங்கச் செய்யுட்களையும் மைய மிட்டவை. அவ்விரு நூல்களின் சிறப்பை அப்பாடல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அதிலும் குறிப்பாக, திருக்குறளைக் கற்றால் விஞ்ஞான அறிவு ஊறும் என்று கூறியிருப்பது கவனிக்கற்பாலது. ஏனெனின் ஆய்வறிஞர்கள் திருக்குறளில் விஞ்ஞானம், திருக்குறளில் அறிவியல், திருக்குறளில் சட்டம், திருக்குறளில் விஞ்ஞானம், திருக்குறளில் பல்துறையியல் எனப் பலவாறு ஆய்ந்து வருவதை ஈண்டு நோக்கினால் அவ்வுண்மை புலப்படும்.
          அடுத்து, நூலை எழுதிய ஆசிரியா;கள் பற்றிய கருத்தையும் பாடலாகத் தந்துள்ளார்தகடூர்த் தமிழ்க்கதிர்.
          அந்திரத்தில் நிற்பினும் ஆம்வேண்டும் பாதையே!
          மந்திரத்தில் வாடா மனமெனும்பூ - சந்தமிகு
          வாழ்வினை நாம்வாழ வண்டமிழ் ஔவையால்
          தாழ்விலா பாதைவரும் சாற்று                  - பாடல்.24
இப்பாடல் அமைதியாய் வாழ்வதற்கு வழிவேண்டுமாயின் ஔவையாரின் பாடல்களைப் படி என்கிறது. இவ்வாறாக ஆசிரியரையும், அவ்வாசிரியர் எழுதிய நூலையும் சிறப்பித்துக் கூறுகின்றார்.
ஆய்வுச்சிந்தனை தேவை
          ஒரு கருதுகோளை ஏற்படுத்திக் கொண்டு ஆய்வு செய்வதற்கு அடிப்படை ஊக்கமே. ஆவ்வூக்கத்தின் விளைவால் வரும் ஆர்வமே அதிகமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தேறியுள்ளன. அதனை,
          எறும்பின் சிறுகால்கள் ஏறும் மலைமேல்
          அரும்பும் மலராகும் ஆக்கத்தால் - விரும்பும்
          துறையினிலே ஊக்கம் தருவதனால் நல்ல
          சிறுவர் வளர்ர் சிறந்து                            - பாடல்.7
எனவரும் பாடலால் எடுத்துரைத்துவிட்டு,
        பூக்களின் வாழ்க்கை பிறந்தநாளே ஆயினுமே
        ஈக்கள் எடுத்திடும் இன்தேனால் - காத்திடும்பூ
        பல்லாண்டு மற்றோரை! பார்தன்னில் ஆய்ந்துரைக்கும்
        நல்லறிஞர் சொல்வாழும் நன்று                         - பாடல்.9
அவ்வூக்கத்தினூடே ஆய்வு மனப்பான்மை வளா;ந்து நல்ல கருத்தை நிலைநாட்டின் சிறப்புறும் என்கிறது இப்பாடல்.
இயற்கை
          இவ்வாறு கல்வியை மட்டுமே அவர் எடுத்துரைக்கவில்லை.  இயற்கையின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளார். அதற்கு,
          பனையோ சிறிதாம் பசுங்கிளிக்கே இல்லம்
          பனையோ சிறிதெனினும் வேண்டும் - அனைத்திடும்
          ஆதரவால் இப்பாரில் ஆர்வம் பெருக்கெடுக்கும்
          சேதியுடன் பாராட்டுச் சேர்              - பாடல்.3
          தென்னை இளநீராம் தீம்பனை நல்நுங்காம்
          புன்னை குளிர்நிழலாம், பூக்களோ - நன்நெடியாம்
          மன்னும் புகழுலகில் மாண்புசேர் மாந்தனுக்கோ
          இன்சொல் இனிதாகும் ஈண்டு                  - பாடல்.4
          ஓடும் நதியைவிட ஓங்கிவிழும் நீரருவி
          கூடும் அழகுமிகக் காண்கின்றோம் - நாளும்
          புகழ்மனிதா உன்நடையில் பூமிக்கு ஓட்டம்
          திகழவிடு வாழ்வினைத் தோ;ந்து    - பாடல்.11
எனவரும் பாடல்களே சான்று.
வங்கியின் பயன்
அக்காலத்தே தனக்குப் போக மீதமுள்ளவற்றை நன்கொடையாக வாழ்ந்தனர் எனக் காட்டுகின்றது சங்கப்பாக்கள். பொதுமைப் பார்வை இருந்ததது. இன்று அப்பார்வை தகர்ந்தது. தனக்குப் போக மீதமிருந்தாலும், அதனை வங்கியில்பதுக்கும் தன்னல விரும்பிகளே உள்ளனர். இது ஒரு வகை சேமிப்பாகவே இக்கால மக்கள் கருதுகின்றனர். சிலர் சேமிப்பாகவே இக்கால மக்கள் கருதுகின்றனர். சிறுசேமிப்பு பற்றிய சிந்தனை இன்றி வாழ்கின்றனர். அவர்களுக்கும் ஓர் அறைகூவல் விடுக்கின்றார் இவ்வெண்பாக் கவிஞர். அவ்வெண்பா வருமாறு:
          மண்ணிலே போட்டவிதை மாயாமல் ஓங்கியே
          கண்ணியமாய் தன்நன்றிக் காட்டுமே - எண்மகிழ
          ஈட்டும் தொகையதனில் ஈந்திடுவீர் ஓர்பங்கு
          காட்டும் சீர்வங்கி கனிந்து               - பாடல்.13
இவ்வாறாக பன்முகத் தன்மையுடன் தகடூர்த் தமிழ்க்கதிரின் பாடல்கள் அமைந்துள்ளன. இப்பன்முகத் தன்மை வழி இக்கால மக்கள் பயனுற வேண்டும் என்பது அவர்தம் எண்ணமாக அமைந்துள்ளமையை அறியமுடிந்தது.
பார்வை
          தகடூர்த் தமிழ்க் கதிர், ஒளி:1, 2015, தமிழ் வழிக் கல்வி வெண்பா விளக்குகிருட்டிணகிரி. 

முனைவர் த. சத்தியராஜ்
                  தமிழ் – உதவிப் பேராசிரியர்
                  இந்துசுதான் கலை அறிவியல் கல்லூரி
                  கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
                  9600370671  neyakkoo27@gmail.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன