வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்


திராவிடமொழி இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக் கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்), சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்) காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கட்டுரை.

          எழுதப் படுதலி னெழுத்தா கும்மே (மு.வீ.1)
என்பது முத்துவீரிய உபாத்தியாயரின் அறிமுகநிலை விதி. இவர் ஒரு மொழிக்குரிய எழுத்துக்கள் இன்னின்னவை என அறிமுகப்படுத்தும் முன்பு, எழுத்து என அழைக்கப்படுதலின் காரணத்தைக் குறிப்பிடுவதின் அவசியத்தை உணர்ந்திருக்கின்றார். ஏனெனின் எழுத்து எனக் கூறினால் எது எழுத்து? எனக் கேட்கத் தூண்டும் அல்லவா? அவ்வெண்ணம் எழா வண்ணம் எழுதப்படுவதனால் எழுத்து என முதற்கண் அறிவித்து விட்டு, அவ்வெழுத்து செவிப்புலனால் அறியும் ஓசை வடிவையும் கட்புலனால் அறியும் வரிவடிவையும் ஏற்கும் (மு.வீ.2) எனவும், அவ்வெழுத்து இரேகை, வரி, பொறி ஆகிய ஒரு பொருள் தரும் பன்பொருட்கிளவியையும் (மு.வீ.3) கொண்டுள்ளது எனவும் அறிமுகப்படுத்துகின்றார். இது அக்கால மொழிச்சூழமைவைச் சுட்டுகின்றது. அதாவது எழுத்து என்பதற்கு இணையாக அம்மொழி (தமிழ்) மக்களாலும் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப் பெற்ற மறுபெயர்களையும் சுட்டுவதேயாம். அதன்பின்பே தமிழ் மொழிக்குரிய எழுத்து முதல், சார்பு என இரு வகைப்படும் (மு.வீ.4) எனத் தொல்காப்பியர் வழி நின்றும், அவ்வெழுத்து உயிர், உடல் என்றாயிரு வகைகளைக் (மு.வீ.5) கொண்டிலங்கும் என நன்னூலார் வழி நின்றும் சுட்டிக்காட்டுகின்றார். அவற்றுள் உயிர் பன்னிரண்டு எழுத்துக்களையும், உடல் பதினெட்டு எழுத்துக்களையும் உடைத்தன என அடுத்து வரக்கூடிய விதிகளில் அமைக்கின்றார். அவ்விதிகள் வருமாறு:
அகர முதலுயி ராறிண் டாகும் (மு.வீ.6)
ககரமுதன் மூவாறுங் காத்திர மாகும் (மு.வீ.12)
அதுமட்டுமின்றி, உயிர் எழுத்து குற்றெழுத்து (மு.வீ.8) நெட்டெழுத்து (மு.வீ.10) என்றாயிரு வகைகளையும், மெய் எழுத்து வல்லெழுத்து (மு.வீ.14) மெல்லெழுத்து (மு.வீ.16) இடையெழுத்து (மு.வீ.18) என்ற மூவகைகளையும் கொண்டுள்ளன எனக் குறிப்பிட்டு, அவ்வெழுத்துக்களின் மறுபெயர்களையும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அம்மறுபெயர்களைக் குறிப்பிடும் அட்டவணை வருமாறு:
சொற்கள்
மறுபெயர்கள்
உயிர்
குறில்
நெடில்
மெய்
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
அச்சு, ஆவி, சுரம், பூதம் (மு.வீ.7)
குறுமை, இரச்சுவம், குற்றெழுத்து (மு.வீ.9)
நெடுமை, தீர்க்கம், நெட்டெழுத்து (மு.வீ.11)
ஊமை, ஒற்று, உடல் (மு.வீ.13)
வன்மை, வன்கணம், வலி, வல்லெழுத்து (மு.வீ.15)
மென்மை, மென்கணம், மெலி, மெல்லெழுத்து (மு.வீ.17)
இடைமை, இடைக்கணம், இடை, இடையெழுத்து (மு.வீ.19)
          இவ்வாறு விரித்துரைக்கும் பாங்கைச் சின்னயசூரியிடத்தும் நிலவவில்லை. காரணம்: 1. தெலுங்குமொழி, கோட்பாடுகள் அளவிலும் சிந்தனைகள் அளவிலும் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய கொடைமொழிகளிலிருந்து மிகுதியாகக் கடனாளப்படும் தன்மை நிலவுதல். 2. சமசுகிருதப் பாணினியத்தை முன்மாதிரியாகக் கொண்டு சொல்லிலக்கணத்தை மட்டும் விளக்கும் தன்மை காணப்படுதல் என்பனவேயாம். ஆகவே, அம்மொழிக்குரிய இலக்கணக் கலைஞர்களிடத்து கொடைமொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தி, அதன்பின்பு தம்மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் நிலைப்பாடு உடையவர்களாகவே காணப்படுகின்றனர் (நன்னயா காலம் முதலே காணமுடியும்). அத்தன்மை உடையவராகவே சின்னயசூரியும் உள்ளார் என்பதைப் பின்வரும் விதிகள் துலக்கும்.
ஸம்ஸ்க்ரு’தமுநகு வர்ணமு லேப3தி3        - பா.வி.சஞ்.1
(சமசுகிருதத்துக்கு எழுத்து ஐம்பது)
ப்ராக்ரு’தமுநகு வர்ணமுலு நலுவதி3        - பா.வி.சஞ்.2
(பிராகிருதத்துக்கு எழுத்துகள் நாற்பது)
தெலுகுநகு வர்ணமுலு முப்பதி3யாறு       - பா.வி.சஞ்.3
(தெலுங்குக்கு எழுத்துக்கள் முப்பத்தாறு)
அதுமட்டுமின்றி  தம்மொழிக்கு வந்த சமசுகிருத எழுத்துக்கள் இவை எனக் குறிப்பிட்டு விதியமைக்கும் பாங்கும் அவரிடத்து காணலாகின்றது. அவ்விதி வருமாறு:
ரு’ரூ’லு’லூ’ விசர்க க2222242444ஙஞஸ2 ஷலு ஸம்ஸ்க்ரு’த ஸமம்புலநு கூடி3 தெலுகுந வ்யவ் ஹடி3ம் - பா.வி.சஞ்.4
(ரு’ரூ’லுலூ’ விசர்க க2222242444ஙஞஸ2ஷகள் சமசுகிருத சமமாக தெலுங்குக்கு வந்தவை)
மேலும், அவர் க, ச, ட, த, பகள் பருசம் (வல்லெழுத்து) என்றும், க3, ஜ, ட3, த3, ப3கள் சரளம் (மெல்லெழுத்து) என்றும், அவை தவிர பிற எழுத்துக்கள் இசுத்திரம் (இடையெழுத்து) என்றும் மெய்யெழுத்துக்களுக்கான வரையறையைத் தருகின்றார். அவ்விதிகள் வருமாறு:
கசடதபகள் பருசம் என்று க3ஜட333கள் சரளம் என்று சொல்லுவர் (பால.5)
பிற மெய்கள் இசுத்திரங்கள் (பால.6)
இத்தன்மையில் எழுத்துக்களை அறிமுகப்படுத்தியவர் தெலுங்கு மொழியில் காணப்படும் பிந்து (வட்டம்) குறித்து நேரிடையாக விளக்காமல், சொற்களில் அப்பிந்துகள் வரும் பாங்கைச் சுட்டுமிடத்தே முன்வக்கின்றார். அவ்விதிகள் வருமாறு:
கிரச்சுவம் மீது கண்டபிந்துவுக்கு பூர்ணபிந்து வைகல்பிகமாகும் (பால.14)
தீர்க்கம் மீது விதிக்கப்பட்ட பூர்ணபிந்து வராது (பால.15)
இவ்விதிகள் மூலமே தெலுங்கு மொழியில் கண்டபிந்து (அரைவட்டம்), பூர்ணபிந்து (முழு வட்டம்) ஆயிரு வகைகள் உள்ளன என்பதையும், உயிர் எழுத்துக்கள் குறில்  (கிரச்சுவம்),  நெடில் (தீர்க்கம்) ஆகிய வகைப்பாடுகளை உடைத்தன என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தன. இவ்வாறு அவர் சில கருத்தியல்களைத் தெளிவாகச் சுட்டாமைக்குச் சொல்லிலக்கணம் அமைக்கும் நோக்கமுடைமையேயாம்.
          இதுகாறும் விளக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும்பொழுது,
·        தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களைச் சுட்டுதல்
·        அம்மொழிக்குரிய எழுத்துக்களில் மெய்யெழுத்தின் வகை மட்டும் இருமொழி இலக்கணத்திலும் இடம்பெறல்
ஆகியன இருமொழிப்புலவர்களின் ஒருமித்த சிந்தனைகளாக அமைந்துள்ளன.
Ø எழுத்து என்பதற்கான வரையறைகளை முன்வைத்தல்
Ø அவ்வெழுத்துக்களை வகை, தொகை, விரி அடிப்படையில் விளக்குதல்
Ø எழுத்துக்களின் மறுபெயர் சுட்டல்
Ø உயிர், மெய் வகைப்பாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுதல்
ஆகியன முத்துவீரிய உபாத்தியாயரின் தனித்தன்மைகளாகவும்,
v கொடைமொழிக்குரிய எழுத்துக்களை முதலில் அறிமுகம் செய்தல்
v கொடைமொழியிலிருந்து கடன் பெற்ற எழுத்துக்களைச் சுட்டிக்காட்டுதல்
v தெலுங்கு மொழிக்குரிய சிறப்பெழுத்துக்களுக்கான (பிந்து) விளக்கத்தை முன்வைத்தல்
ஆகியன சின்னயசூரியரின் தனித்தன்மைகளாகவும் இனங்காண முடிகின்றன.


துணைநின்றன
1.    சுந்தரமூர்த்தி கு. (பதிப்.), 1972, முத்துவீரியம், திருநெல்வேலிச் சைவசித்தாந்த பதிப்பகம், சென்னை.
2.    சின்னயசூரி பரவத்து, 2002, பாலவியாகரணம், பாலசரசுவதி புத்தகாலயம், சென்னை.

முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
கோயம்புத்தூர்
9600370671, 9600820827

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன