Wednesday, May 7, 2014

தாமோதரர்கள்


கள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே   – குறுந். 92

என்பது தமிழ்க் கவிஞரின் பாடல். இப்பாடல் காதலனைப் பிரிந்து வாடிய தலைவியின் உணர்வை எடுத்தியம்பும் உணர்வோவியமாக அமைந்துள்ளது (1994:84-86). ஆனால் பிராகிருதக் கவிஞரின் பாடலோ தலைவனுடன் பல மனைவியருள் ஒருவள் காம இன்பம் பெற பிற மனைவியர் கோபம் கொண்ட நிலையைச் சுட்டுகின்றது.
            இரவில் கொழுநனால் இவள்இதழ்ச் செம்மை
            மறையக் காலையில் மகளிர்கள் கண்டே
கண்களிற் கொண்டனர் கலைந்தஅந் நிறமே       – காதா.96
இங்ஙனம் மொழியாக்கங்கள் குறித்து சுட்டிக்காட்ட வேண்டும். இவ்விலக்கியம் (காதா சப்த சதி) இருவரால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கின்றது. ஒருவர்: மு.கு.ஜகந்நாத ராஜா. மற்றொருவர்: இரா.மதிவாணனார். இவ்விருவரின் மொழியாக்கங்களில் காணலாகும் வேறுபாடுகளைப் பின்வரும் அட்டவணைத் தெளிவுறுத்தும்.

நூற்தலைப்பு
மு.கு.ஜகந்நாத ராஜா
இரா.மதிவாணனார்
காதா சப்த சதி
ஆந்திர நாட்டு அகநானூறு
தழுவல்
தமிழ்நெறி
தமிழ்நெறி
வகை
தமிழ் மரபுப் பா
உரைப்பா
பாடல் எண்
96
292
பாடலாசிரியர்
தாமோதரன்
தாமோயரன்
பிற
1.     கூற்றுமுறை வகுத்தல்
2.     கூற்று தலைப்பாதல்
3.     பிற மனைவியர் எனல்
1.     திணை, துறை வகுத்தல்
2.     பாடலுக்கு ஏற்ற தலைப்பிடல்
3.     பரத்தை எனல்
பொதுவாக மொழியாக்கம் என்பது மொழியாக்கம் செய்பவரின் மனநிலைக்கு ஏற்பவும், வாசிப்பு நிலைக்கு ஏற்பவும், வெளிப்படுத்தும் திறனுக்கு ஏற்பவும் மாறுபடும். இதனைக் காதா சப்த சதிக் கவிஞருள் ஒருவராகிய தாமோதரன் பாடலைத் தமிழாக்கம் செய்த அவ்விருவரின் (மு.கு.ஜகந்நாத ராஜா, இரா.மதிவாணனார்) மொழியாக்க வேறுபாட்டின்வழி அறிய முடியும். அவ்விருவரும் மொழியாக்கம் செய்த பாடல்கள் வருமாறு:

மு. கு. ஜகந்நாத ராஜா
96
தோழி கூற்று
இரவில் கொழுநனால் இவள்இதழ்ச் செம்மை
மறையக் காலையில் மகளிர்கள் கண்டே
கண்களிற் கொண்டனர் கலைந்தஅந் நிறமே
                                               தாமோதரன் (2-6)

இரா. மதிவாணனார்
மாற்றாளின் கண்ணில் செந்நிறம்
அவளின் செந்நிறம்                                   292
நேற்றிரவு
காதலினிதழால் அழிக்கப்பட்டுவிட்டது
அச்செந்நிறம் இன்று காலையில்
மாற்றாளின் கண்களில் குடியேறி விட்டது
                                         தாமோயரன் (கா ச. 2:6)

இனி, அவ்விருமொழிக் கவிஞர்களின் பாடல்களுக்கிடையே நிலவும் கருத்து ஒற்றுமை, வேற்றுமைகள் வருமாறு:
*    பாடுபொருளில் பிரிவைப் பொதுச் சிந்தனையாக வைத்தாலும் தமிழ்க் கவிஞர் ஒத்த அன்புடையவள் பிரிவையும், பிராகிருதக் கவிஞர் பிற மனைவியர் (பரத்தையர்) பிரிவையும் சுட்டுவதில் வேறுபடுகின்றனர்.
*    தமிழ், பிராகிருதம் முறையே தலைவி தோழி கூற்றுக்களாக அமைந்துள்ளன.
*    தமிழ்க் கவிஞர் மாலைப் பொழுதின் வரவைக் கண்டு இரங்கிப் பாட, பிராகிருதக் கவிஞர் காலை வரவைக் கண்டு இரங்கிப் பாடுகின்றார்.
*    இருமொழிக் கவிஞர்களும் தலா ஒவ்வொரு பாடலே பாடியுள்ளனர்.
*    காமத்தையும் பாடுபொருளாகக் கொள்ளுதல்.
*    தெய்வத்தால் பெயர் பெற்றவர்களாகத் திகழ்தல்.
*    இருமொழிக் கவிஞர்களும் ஆடவரே.
*    ஒத்த தலைமக்களின் களவு வாழ்க்கையைத் தமிழ்க் கவிஞரும், பல மனைவியர்களையுடைய தலைவனின் கற்புநெறியைப்  பிராகிருதக் கவிஞரும் பாடியமையில் வேறுபாடு நிலவுதல்.
*    காமம் ஒரு சிலருடன் மட்டுமே ஈடேறும் தன்மையைப் பிராகிருதக் கவிஞர் சுட்டுதல்.
*    தமிழ்த் தலைவிக்குப் பறவையின் இல்வாழ்க்கை போன்று தனக்கும் அமைய வேண்டும் என எண்ணம் நிலவுதல்.
*    வெகுளிக்கு உவமையாக செம்மை நிறத்தைப் பிராகிருதக் கவிஞரும், விரைவிற்குப் பறவையைத் தமிழ்க் கவிஞரும் பாடுதல்.
*    தமிழ், பிராகிருத் தலைவர்கள் வன்மனம் உள்ளவர்களாக விளங்குதல்.
*    பிராகிருதக் கவிஞர் வெகுளி மெய்ப்பாட்டைக் குறிப்பிடுதல். பல மனைவியருள் ஒருவளுக்கு மட்டும் காமம் ஈடேற, பிற மனைவியர் வெகுளியுடன் காணப்படுவதேயாம்.
*    தமிழ், நெய்தலுக்குரிய பாடலாகவும், பிராகிருதம் மருதத்திற்குரிய பாடலாகவும் அமைதல்.
*    தமிழ், பிராகிருத் தலைவிகளின் ஏக்கங்கள் சுட்டப் பெறுதல்.
*    காமத்தைப் பெரிதும் விரும்பும் மனம் எப்போதும் மாலை நேரச் சூழலையே விரும்பும் என்பதைக் குறிப்பிடுதல்.
*    தமிழ்க் கவிஞர் பறவைக்கும் அறிவு உண்டு என்பதைக் குறிப்பிடுதல். காலமிடம் தெரிதலும் பிள்ளையை ஊட்டும் அன்பின் விரைதலும் உடைமையால் பறவைகள் அறிவுடையன என்பது கருத்து (1993:157).
முடிப்பாக, தெய்வப் பெயர் பெற்ற இருமொழிக் கவிஞர்களும் வெவ்வேறு  சிந்தனைகளையும், ஒருமித்த சிந்தனைகளையும் உடையவர்களாகவேத் திகழ்கின்றனர். அவர்களின் பாடுபொருளும் சூழலும் வெவ்வேறானவை. இருப்பினும் அவ்விருவர்களின் கருத்துகளில் காமத்திற்கு ஏற்ற சூழல் இராப் பொழுது எனும் கருத்து முக்கியத்துவம் பெறுகின்றமையையும் அறிய முடிகின்றது.
துணைநின்றவை
1.    இராகவையங்கார் ரா.(உரை.), 1993, குறுந்தொகை விளக்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர்.
2.    இளவழகன் கோ.(பதிப்)., 2003, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
3.    சஞ்சீவி ந., 2008, சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.
4.    சோமசுந்தரனார் பொ. வே. (உரை.), 2007, குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை.
5.     மதிவாணனார் இரா., (மொ.ஆ.), 1978, ஆந்திர நாட்டு அகநானூறு, தாய்நாடு பதிப்பகம், சென்னை.
6.    மாணிக்கம் வ. சுப., 2007, தமிழ்க் காதல், சாரதா பதிப்பகம், சென்னை.
7.    வரதராசன் மு., 1994, குறுந்தொகைச் செல்வம், பாரி நிலையம், சென்னை.
8.    ஜகந்நாதராஜா மு. கு. (மொ. ஆ.), 1981, காதா சப்த சதி, விசுவசாந்தி பதிப்பகம், இராசபாளையம்.
நன்றி: காற்றுவெளி இதழ் (இலண்டன்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன